நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள், மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது(மத்தேயு 5:14).
இயேசுவின் சீஷர்களுக்கு இன்னொரு பெயர் வெளிச்சம் கொடுப்பவர்கள். உலகத்திற்கு வெளிச்சமாகக் காணப்படுகிற உங்கள் வெளிச்சம் ஜனங்களுக்கு முன்பாக பிரகாசிக்க வேண்டும். நாம் ஆராதிக்கிற ஆண்டவர், உலகத்திற்கு ஒளியாகக் காணப்படுவதினால், அவருடைய பிள்ளைகளும் கூட உலகத்திற்கு ஒளியாகக் காணப்பட வேண்டும். இயேசு நம்மைப் பார்த்து நீங்கள் பூமிக்கு உப்பாகவும், உலகத்திற்கு வெளிச்சமாகவும் காணப்படுகிறீர்கள் என்றார்.
ஆண்டவர் பூமியைச் செம்மையாகச் சிருஷ்டித்தார், ஆகிலும் சாத்தானுடைய விழுகையின் நிமித்தம், இருள் பூமியில் வந்தது. ஆண்டவர் ஒளியாயிருக்கிறார், பிசாசு இருளின் அதிபதி. வெளிச்சத்தின் கிரியைகளும், இருளின் கிரியைகளும் இன்றும் பூமியில் செயல்படுகிறது. வெளிச்சத்தின் பிள்ளைகள், இன்னும் பரிசுத்தமாக ஜீவிக்க வேண்டும், நீதிக்குரிய வாழ்வு வாழவேண்டும், பிறருக்குத் தீங்கு செய்யக் கூடாது என்ற சிந்தையோடு வாழ்பவர்கள். இருளின் பிள்ளைகள் பாவத்தைத் தண்ணீரைப் போல பருகிறவர்கள், அவர்களுடைய கிரியைகள் பொல்லாதாக் காணப்படும், பிறருக்குத் தீங்கு செய்ய நாடுபவர்கள். நீங்கள் எந்தக் கூட்டத்தில் காணப்படுகிறீர்கள் என்பதை வைத்து வெளிச்சத்தின் பிள்ளைகளா, அல்லது இருளின் பிள்ளைகளா என்பதை அறிந்து கொள்ளலாம்.
மலைமேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்க முடியாது, அதுபோல வெளிச்சத்தின் பிள்ளைகளும் மறைந்திருக்க முடியாது. ஆகையால் ஒரு கலங்கரை விளக்கைப் போல ஜனங்களுக்கு முன்பு வெளிச்சம் வீசுங்கள். உதிக்கிற உங்கள் வெளிச்சத்தினிடத்திற்கு ஜாதிகள் கடந்து வரட்டும், யோவான் ஸ்நானகனுடைய வெளிசத்தில் நடக்க அனேகர் மனதாயிருந்ததைப் போல, உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அனேகர் உங்கள் வெளிச்சத்தில் நடக்கப் பிரியப்படும் படியான ஜீவியம் செய்யுங்கள். இயேசு பிறந்த வேளையில் இருளில் காணப்பட்ட ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள். ஒருநாளும் மரக்காலின் கீழ் மூடிவைக்கப்பட்ட விளக்கைப் போலக் காணப்படாதிருங்கள். இரகசிய கிறிஸ்தவர்களாய் கூட சில காலம் தான் காணப்படமுடியும். கர்த்தருடைய பிள்ளைகள் மற்றவர்களால் அறியப்படுகிற பாத்திரங்களாகத் தான் காணப்பட வேண்டும். உலகம் உங்கள் மூலம் இயேசுவைக் காணட்டும். உங்கள் மூலம் இயேசுவின் வெளிச்சம் மற்றவர்களுக்கு முன்பு பிரகாசிக்கட்டும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar