ஏரே 8:4. நீ அவர்களை நோக்கி: விழுந்தவர்கள் எழுந்திருக்கிறதில்லையோ? வழிதப்பிப் போனவர்கள் திரும்புகிறதில்லையோ?
இந்த வருடம் முழுவதும் சற்று திரும்பி பார்த்தால் எத்தனையோ முறை ஆண்டவருக்கு விரோதமான காரியங்களை செய்து விழுந்திருக்கலாம். ஆனால் கர்த்தர் அத்தனை முறையும் விழுந்த உங்களை எழுந்திருக்கும்படியாக செய்ததை நினைத்து பார்த்து நன்றி கூறுங்கள். எத்தனையோ அசுத்தமான காரியங்களை செய்திருக்கலாம், அசுத்தமான காரியங்களை பார்த்திருக்கலாம், விரும்புவதை செய்யாமல் விரும்பாததையே செய்திருக்கலாம்; ஆனால் எப்பொழுதும் வந்தடையத்தக்க கன்மலையாகிய கிறிஸ்துவிடம் வந்தபோதெல்லாம், நீ என்னுடையவன் என்று உங்களை பார்த்து சொன்னாரே, அதை நினைத்து பார்த்து கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள்.
தாவீது பாவம் செய்து மனம் திரும்பிய பிறகு, விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை மீண்டும் கர்த்தர் எடுத்து காட்டினார். சிம்சோன் தெலீலாளுடன் பாவம் செய்தபிறகு, மனம் திரும்பி வருத்தப்பட்ட போது மீண்டும் ஆவியானவர் அவனை நிரப்பினார். இளைய குமாரன் தகப்பனை விட்டு பின்பாக மனம் திரும்பி வந்த போது தகப்பன் அவனை சேர்த்துக்கொண்டார். இப்படியாக உங்கள் பரம தகப்பனை வேதனைப்படுத்திய அநேக காரியங்கள் இந்த வருடத்தில் நடத்தியிருந்தாலும், விழுந்த உங்களை கர்த்தர் தூக்கியெடுத்தார். நீதிமான் ஏழு முறை விழுந்தாலும் எழுந்திருப்பான் என்று வசனம் சொல்லுகிறது.
நீங்கள் பலியாக வேண்டிய இடத்தில இயேசு பலியானார். ஆபிரகாம் ஈசாக்கை பலியிட சென்றபோது தேவன் ஆட்டுக்குட்டியை காண்பித்து அவனுக்கு பதிலாக பலியிட சொன்னார். அதுபோல நாம் பலியிடப்பட வேண்டிய இடத்தில் இயேசு பலியானார். அவருடைய அன்பை நினைத்து நன்றி செலுத்துகிற நாட்களாய் இந்த நாட்கள் காணப்படட்டும். பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தினார் (சங் 40:2). எத்தனையோ முறை இந்த வருடங்களில் உங்களை தூக்கி எடுத்தார், மாத்திரமல்ல கன்மலையின் மேல் நிறுத்தி உங்கள் அடிகளை உறுதிப்படுத்தினார்.
எல்லாவற்றிற்கும் ஸ்தோத்திரம் செய்யுங்கள் என்று வசனம் சொல்லுகிறது. ஆகையால் உங்களை தூக்கி எடுத்த இயேசுவுக்கு நன்றி செலுத்த தவறி விட வேண்டாம். அதே வேளையில் புது வருடத்திற்குள்ளாக நுழைவதற்கு முன்பாக பழைய பாவ சுபாவங்களை அறிக்கை செய்து விட்டுவிடுங்கள். அதுவே கர்த்தருக்கு பிரியம்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org