யோனா 2:9. நானோவெனில் துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன்; நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு கர்த்தருடையது என்றான்.
யோனா மீனின் வயிற்றில் கடினமான சூழ்நிலையில் இருக்கும்போது சொல்லுகிறான் துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன் (I will Sacrifice to You with the voice of thanksgiving). உலகத்திலிருக்கும் பல ஜனங்கள் இந்த வருடம் உங்களுக்கு எப்படி இருந்தது என்று கேட்டால் பலர் பலவிதமான காரியங்களை, நேர்மறையான கருத்துக்களை, அனுபவங்களை சொல்லுவார்கள். குறிப்பாக இந்நாட்களில் WhatsApp, Facebook போன்ற சமூக வலைத்தளங்களில் இந்த வருடத்தை குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவிக்கிறவர்களாக காணப்படுவார்கள். சிலர் சொல்லுவார்கள் புது வருஷம் நமக்கு வந்தாயென்ன, வராவிட்டால் என்ன, நமக்கு எல்லா வருசமும் ஒரே பிரச்சனைதான் என்று சொல்லுவார்கள். சிலர் சொல்லுவார்கள் கடந்த ஐந்து வருடங்களாக திருமணத்திற்கு முயற்சிக்கிறேன் இந்த வருடத்தில் எனக்கு எங்க திருமணம் நடக்கப்போகிறது என்று சொல்லுவார்கள். சிலர் சொல்லுவார்கள் பை பை 2022, சீக்கிரத்தில் நீ முடிந்துபோ என்றெல்லாம் சொல்லுவார்கள். சிலர் சொல்லுவார்கள் 2021ல் எனக்கு ஒன்றும் நடக்கவில்லை, 2022லும் ஒன்றும் நடக்கவில்லை, 2023லும் ஒன்றும் நடக்கப்போவதில்லை என்று சொல்லுவார்கள். இப்படி அநேகர் அநேக விதத்தில் இந்த வருடத்தை பற்றி சொல்லலாம். யோனா சொல்லுகிறான் நானோவெனில்; மற்றவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதை பற்றி நான் கவலைப்படவில்லை, மாறாக நானோவெனில் துதியின் சத்தத்தோடே கர்த்தருக்கு பலியிடுவேன். நீங்களும் யோனாவை போல சொல்லவேண்டும் நானோவெனில் கர்த்தருக்கு உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை செலுத்துவேன்.
பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள். துன்மார்க்கர்கள் சுகித்திருக்கலாம். நீங்கள் நன்மையானவைகளை இந்த வருடத்தில் பெற்றிருக்கலாம். அதேவேளையில் நீங்கள் விரும்பாத சில காரியங்களையும் ஒருவேளை சந்தித்திருக்கலாம். ஆனால் கர்த்தருடைய பிள்ளைகள் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும். கர்த்தர் இன்றும் என்றும் ஆளுகை செய்கிறார். கர்த்தர் ராஜரீகம் பண்ணுகிறார். கர்த்தர் இன்று மாத்திரமல்ல நரைவயது மட்டும் உங்களை நடத்த அவர் போதுமானவராய் இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். ஆகையால் கடந்த வருடத்திற்கான எல்லாவற்றிற்கும் கர்த்தருக்கு நன்றி செலுத்துங்கள். நானோவெனில் என்று சொல்லுங்கள். என்னுடைய கடமை மாத்திரமல்ல இயேசு எதிர்பார்ப்பது அவருக்கு முழுமனதோடு நன்றி செலுத்தவேண்டும் என்பதே. தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம். நானோவெனில் துதியின் சத்தத்தோடே இயேசுவுக்கு பலியிடுவேன்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org