கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள், அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் (சங்.34:8).
தாவீது, சவுல் ராஜாவுக்குப் பயந்து தப்பியோடி, காத்தின் ராஜாவாகிய ஆகீசிடத்தில் போனான், அவன் ஒரு பெலிஸ்திய ராஜா. ஆகீசின் ஊழியக்காரர் அவனைப் பார்த்து, இஸ்ரவேல் தேசத்து ராஜாவாகிய தாவீது இவன் அல்லவோ? சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று இவனைக்குறித்தல்லவோ ஆடல்பாடலோடே கொண்டாடினார்கள் என்றார்கள். தாவீதின் நிலமை சவுலுக்கு தப்பி, பெலிஸ்தியன் கையில் அகப்பட்டதாய் மாறினது. அவன் ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டு, அவனிடத்திலிருந்து தப்புவதற்கு ஒரு பயித்தியக்காரனைப் போல நடித்தான். ஆகீஸ், தன் ஊழியக்காரரை நோக்கி, இந்த பித்தங் கொண்டவனை என்னிடத்தில் கொண்டு வந்தது என்ன? என்று சொல்லி அவனைத் துரத்தி விட்டான். தாவீது அவனுக்குத் தப்பி, அதுல்லாம் என்னும் கெபிக்குப் போனான். அங்குக் கர்த்தரை ஸ்தோத்தரித்து, கூறின வார்த்தையாய் மேற்குறிப்பிடப்பட்ட வசனம் காணப்படுகிறது. இக்கட்டான சூழ்நிலையில் தன்னை விடுவித்த கர்த்தரை நல்லவராகப் பார்க்கிறான். தான் நல்லவராக ருசித்த கர்த்தரை, மற்றவர்களும் ருசித்துப் பார்க்கும் படிக்கு ஆலோசனைக் கூறுகிறான்.
ருசிப்பதும், பார்ப்பதுமான வாய், கண், புலன் உறுப்புகளாக (Sense Organs) காணப்படுகிறது. அதுபோல கர்த்தருடைய ஜனங்கள், கர்த்தரை ஆவிக்குரிய விதங்களில் ருசித்துப் பார்க்க வேண்டும். தேனிலும் தெளி தேனிலும் மதுரமான அவருடைய வசனத்தை அனுதினமும் ருசித்து, அவர் மேல் முழு விசுவாசத்தையும் வைத்து, எப்பொழுதும் அன்பு கூர்ந்து, அவர் உடன் நடந்து, அவருடைய முகத்தையே நோக்கிப்பார்த்து, அவருக்குச் சித்தமானதைச் செய்து ஜீவிப்பது தான் அவரை ருசிக்கிற ஜீவியமாகக் காணப்படுகிறது. வாழ்ந்து சுகமாய் காணப்படும் போது கர்த்தர் நல்லவர் என்றும், கர்த்தரை ருசித்துப் பார்க்கிறேன் என்றும் சொல்லுவதும் எழிது. ஆரோக்கியத்தோடு காணப்படும் போதும் கூட அவ்வாறு கூறிவிடலாம், ஆனால் தாவீதைப் போல நம்முடைய கடினமாக சூழ்நிலைகளிலும் கர்த்தரை நல்லவராகக் கண்டு ஜீவிக்க வேண்டும். கஷ்டங்களும், பாடுகளும் வரும் போது, கர்த்தரை விட்டு விலகிவிடாதிருங்கள், அவரை உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். ஒருதரம் பரம ஈவை ருசி பார்த்தும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசி பார்த்தும், மறுதலித்துப் போனவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம். ஆகையால் கர்த்தரை எப்பொழுதும் நல்லவராகக் கண்டு, அவரை ருசித்துப்பார்த்து ஜீவியுங்கள். அப்பொழுது என்றும் கர்த்தர் உங்களுக்கு நல்லவராகவே காணப்படுவார், நன்மையானதைத் தருவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar