இயேசுபிறந்த பட்டணம்: பெத்லகேம் என்னும் ஊரில் இயேசு சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக பிறந்தார் என்று வசனம் சொல்லுகிறது. அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அதேனென்றால்: யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள் (மத் 2:5-6). ஒரு சிறு பட்டணத்தில் பிறந்த இயேசு உலகம் முழுவதும் ஆளப்போகும் இராஜாவானார். பெத்லகேம் என்றால் அப்பதின் வீடு என்று அர்த்தம். நானே ஜீவ அப்பம் என்று இயேசு சொன்னார். நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார் (யோவா 6:51).
இயேசு வளர்த்த பட்டணம்: இயேசு வளர்ந்த பட்டணத்தின் பெயர் நாசரேத். பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான். அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான் (யோவா 1:45,46). சாதாரண தச்சனுடைய மகனாக இயேசு நாசரேத் என்னும் ஊரில் வளர்ந்து வந்தார். நாசரேத் என்னும் ஊரில் இருந்து என்ன நன்மை உண்டாகும் என்று இயேசுவை பார்த்து கிண்டல் செய்கிற ஜனங்களாக அந்நாட்களில் இருந்தார்கள்.
இயேசு மரித்த பட்டணம்: எருசலேம் என்னும் பட்டணத்தில் இயேசு உங்களுக்காக தன் ஜீவனை கொடுத்தார். அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார். ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம் (எபி 13:12,13). எருசலேம் என்றால் சமாதானம் என்று அர்த்தம். இயேசு சமாதான பிரபுவாக இந்த உலகத்தில் வந்தார். அவர் எருசலேமில் மரித்தது உங்களுக்கு அவருடைய சமாதானத்தையே விட்டு செல்வதற்காக என்பதை தேவ ஜனங்கள் அறிந்து கொள்ளவேண்டும். இயேசுவின் பிறப்பை கொண்டாடுகிற இந்நாட்களில், இயேசு உங்களுக்காக சமாதானத்தை வைத்து செல்லும்படி சிலுவையில் மரித்து, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார் என்பதையும் எப்பொழுதும் நினைத்துக்கொள்ளுங்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org