ஆதி 39:2. கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான்.
எப்படி ஆண்டவர் யோசேப்போடு இருந்தாரோ, அதே போல இந்த 2022ஆம் வருடம் முழுவதும் கர்த்தர் உங்களோடு கூட இருந்தார். இதை ஒருக்காலும் கர்த்தருடைய பிள்ளைகள் மறுக்கமுடியாது. உயர்வோ தாழ்வோ எல்லாவற்றிலும் கர்த்தர் உங்களோடு கூட இருந்தார். நாம் வாழ்ந்திருக்கும்போது அநேகர் நம்மை சுற்றிலும் இருப்பார்கள். கேட்டர்வர்களுக்கெல்லாம் பணத்தை கொடுக்கும்போதும், மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும்போது அநேகர் கூட இருப்பார்கள். ஆனால் நாம் தாழ்ந்திருக்கும்போது நமக்காக எல்லா சூழ்நிலையிலும் உதவி செய்ய வேண்டிய ஜனங்கள் இருப்பதில்லை. ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த வருடம் முழுவதிலும் எல்லா சூழ்நிலையிலும் உங்களோடு கூட இருந்தார்.
இந்த வருடத்தில் பெரிய பாலம் ஒன்று குஜராத்தில் சரிந்தபோது ஏராளமானோர் மரித்தார்கள். கொள்ளை நோயின் தாக்கம் ஒன்றன் பின் ஒன்றாக வந்தபோது அநேகர் இந்த உலகத்தை விட்டு கடந்து சென்றார்கள். ரஷ்ஷிய உக்ரைன் போரினால் ஆயிரக்கணக்கானோர் வீட்டை இழந்தார்கள், பொருளாதரத்தை இழந்தார்கள், சொந்த பந்தங்களை இழந்தார்கள். டெல்லியில் ஒரு வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தால் அடிபட்டவர்கள் அநேகர். இப்படி அநேக காரியங்கள் நம்மை சுற்றிலும் நடந்தாலும் இந்த வருடம் முழுவதும் கர்த்தரே உங்களை நடத்தினார், அவரே உங்களை பாதுகாத்து உங்களோடு கூட வந்தார்.
யோசேப்பின் வாழ்க்கை மேடும் பள்ளமுமாக இருந்தது. தன் தகப்பனுடைய வீட்டில் இருந்தபோது உயர்ந்த வஸ்திரங்களையெல்லாம் போட்டு மகிழ்ந்தான். கர்த்தர் அப்பொழுது யோசேப்போடு இருந்தார். பின்னாட்களில் அடிமையாக அவன் விற்றுப்போட்டபிறகு அநேக உபத்திரவங்களை சந்தித்தான். அப்பொழுதும் கர்த்தர் யோசேப்போடுகூட இருந்தார். காலம் கடந்தபோது ஒரு நாள் யோசேப்பு முழு தேசத்திற்கும் அதிகாரியாக உயர்த்தப்பட்டான். அப்பொழுதும் கர்த்தர் யோசேப்போடு கூட இருந்தார். காரணம் நம் கர்த்தர் மாறாதவர். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். நீங்கள் கடந்த சென்ற எல்லா பாதைகளிலும் கர்த்தரே உங்களோடு கூட இருந்தார். நீங்கள் இன்று நிற்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும் வருடைய கிருபை. பேதுரு சொல்லுவார் அவர் கிருபை மெய்யான கிருபை என்று. அந்த கிருபையே உங்களை நடத்தியது. அதற்காக உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி செலுத்துகிறவர்களாக இருக்க வேண்டும் என்று கர்த்தர் விருப்பமுடையவராய் இருக்கிறார். எல்லாவற்றிற்காகவும் கர்த்தருக்கு நன்றி செலுத்துங்கள். காரணம் வசனம் சொல்லுகிறது நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள் என்பதாக.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org