அடியேனுக்குத் தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன், இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன் (ஆதி. 32:10).
நம்முடைய முற்பிதாவாகிய யாக்கோபு நன்றி நிறைந்த இருதயத்தோடு கர்த்தரை நோக்கி ஏறெடுத்த ஜெபமாய் மேற்குறிப்பிடப்பட்ட வசனம் காணப்படுகிறது. யாக்கோபு என்ற பெயரினுடைய அர்த்தம் எத்தன் அல்லது ஏமாற்றுக்காரன் என்பதாகும். அவனுடைய பெயரைப் போல, தன் சகோதரனுடைய சேஷ்ட புத்திர பாகத்தை, அவன் பசியாயிருந்த வேளையில் அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்துத் திருடிவிட்டான். அதன்பின்பு, அவன் தகப்பனாகிய ஈசாக்கின் வயோதிபத்தைப் பயன்படுத்தி, அவனை ஏமாற்றி. ஈசாக்கு தன் மூத்த குமாரனாகிய ஏசாவுக்கு வைத்திருந்த ஆசீர்வாதத்தையும் பொய்சொல்லி திருடிவிட்டான். பின்பு யாக்கோபு தன் சகோதரனுக்கு பயந்து, மாமனாகிய லாபானிடத்தில் கடந்து சென்றான். அங்கே சுமார் இருபது வருடங்கள் கடினமான வேலைகளைச் செய்து மனைவிகளையும், பிள்ளைகளையும், ஆஸ்திகளையும் உயைவனான். அவன் தன் தகப்பன் தேசத்திற்குத் திரும்பி வரத் தீர்மானித்து, வரும் வழியில்; தேவனை நோக்கி, உம்முடைய தயவுக்கும், சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன், இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன் என்றான். கர்த்தர் அவனுடைய வாழ்க்கையில் பாராட்டின தயவிற்காக நன்றி செலுத்தினான், அத்துடன், அவன் ஓடிப்போன வேளையில், கர்த்தர் அவனுக்கு பெத்தேலில் ஒரு வாக்குத் தத்தையும் கொடுத்திருந்தார், நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன், நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்று. கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தை நிறைவேற்றின பொழுது, வார்த்தையில் சத்தியமுள்ள தேவனை, யாக்கோபு தாழ்மையோடு நினைத்துப் பார்த்து நன்றி செலுத்தினான்.
கர்த்தருடைய பிள்ளைகளே, ஒரு வருடத்தின் கடைசி நாட்களில் காணப்படுகிறோம். கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் அனேக நன்மைகளை இந்த வருடம் முழுவதும் செய்திருக்கிறார். அவருடைய தயவு நம்மை இதுவரைக்கும் நடத்திக் கொண்டு வந்தது. நாம் நினைக்காத நன்மைகளை நம்முடைய வாழ்க்கையில் கர்த்தர் ஈந்தளித்திருக்கிறார். அவைகளை ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்து நன்றி செலுத்த வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். அவர் சத்தியமுள்ள தேவன், அவருடைய வார்த்தைகள் சமூலமும் சத்தியம் என்று வேதம் கூறுகிறது. அவர் உங்களுக்கு அருளின எல்லா வாக்குத்தத்தங்களையும் நிறைவேற்றியிருக்கிறார், இன்னும் நிறைவேற்றுவார். நீங்கள் அவரை நோக்கி விண்ணப்பம் பண்ணின வேளையிலெல்லாம் அவர் உங்கள் மேல் பிரியமாகி, உங்கள் நீதியின் பலனைத் உங்களுக்கு தந்தருளி உங்களை நடத்தினார். யாக்கோபைப் போல, அடியேனுக்குத் தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல என்று நம்மைத் தாழ்த்தி, நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறோம். எல்லாம் உங்களுடைய கைபெலன், ஞானம், திறமைகளினால் வந்தது என்று மேட்டிமை கொண்டுவிடாதிருங்கள். உங்கள் ஆசீர்வாதங்கள் எல்லாம் கர்த்தரிடத்திலிருந்து வந்தது, அவர் அருளிய எல்லா உபகாரங்களுக்காகவும் இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு நன்றி செலுத்தி அவரை தொழுதுகொள்ளுங்கள். அதுவே நீங்கள் மேன்மேலும் ஆசீர்வதிக்கப்பட்டு விருத்தியடைந்து பெருகுவதின் வழி என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar