அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார் (2 கொரி. 6:18).
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள், 2023ம் வருடம் உங்கள் ஒவ்வொருவருக்கும் சமாதானமும், சந்தோஷமும், உங்கள் மனவிருப்பங்கள் நிறைவேறுகிற ஆண்டாகக் காணப்படும் படிக்கு உங்களுக்காக ஜெபிக்கிறேன்.
முதன்முதலாக சர்வ வல்லமையுள்ள தேவன் என்ற தன் நாமத்தை விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாமுக்குக் கர்த்தர் வெளிப்படுத்தினார் (ஆதி.17:1). ஆபிரகாமுக்கு சர்வ வல்லவராகவே அவன் வாழ்நாட்கள் முழுவதும் காணப்பட்டார். அந்த சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர், உங்களைப் பார்த்துச் சொல்லுகிறார், 2023ம் ஆண்டு, நான் உங்களுக்குப் பிதாவாக, தகப்பனாகயிருப்பேன் என்று. நாம் அவருடைய குமாரர்களும், குமாரத்திகளாகவும் காணப்படுவோம் என்றும் வாக்களிக்கிறார். வேதத்தில் பிதாவுக்கும் நமக்கும் உள்ள உறவு பலவிதங்களில் எழுதப்பட்டிருக்கிறது, அவர் குயவன் நாம் களிமண் என்றும், சிருஷ்டிகர் சிருஷ்டிகள் என்றும், மேய்ப்பன் மந்தை என்றும், திராட்சை செடி கொடிகள் என்றும் காணப்படுகிறது. ஆனால் எல்லாவற்றைப் பார்க்கிலும் மேலானது, அப்பா-பிள்ளைகள் என்ற உறவாகக் காணப்படுகிறது. நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள் என்று 1யோவான் 3:1 கூறுகிறது. பூமிக்குரிய தகப்பன் இரவும், பகலும் கடினமாக உழைத்து, பிள்ளைகளுக்காக தன் முழுப் பிரயாசத்தைக் கொடுத்தாலும், வயோதிபம் வரும்போது, பலவீனம் வந்து, குறிப்பிட்ட நாட்களில் மரித்துப் போவார். ஆனால் பரலோகப் தேவன், நம்முடைய நித்தியப் பிதாவாக, எல்லா வயதினவர்களுக்கும், எல்லா நாட்களிலும் பிதாவாகக் காணப்படுகிறார்.
பிதாவாகிய தேவனுடைய சுபாவங்களைப் பார்க்கும் போது, அவர் இரக்கமுள்ள தேவன் என்று வேதம் கூறுகிறது, தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார் (சங். 103:11). இளைய குமாரன் தன் வாழ்க்கையைப் பாழாக்கின பின்பு கூட, வீட்டிற்குத் திரும்பி வந்தவேளையில் தகப்பனுடைய இரக்கம் வெளிப்பட்டது, அதைப் போல, 2023ம் ஆண்டு உங்களுக்குப் பிதாவின் இரக்கம் வெளிப்படும். அவர் உங்கள் குறைகளையும், குற்றங்களையும் நோக்கிப் பார்த்துத் தீர்ப்புச் செய்யாதபடி, தன்னுடைய இரக்கத்தின் படியும், அன்பின் படியும் உங்களுக்கு இரங்குவார். ஒரு தகப்பன் தன் பாலகனைச் சுமப்பது போல, கர்த்தர் உங்களைச் சுமப்பவராக் காணப்படுவார், ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல, நீங்கள் இவ்விடத்திற்கு வருகிறவரைக்கும், நடந்துவந்த வழிகள் எல்லாவற்றிலும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுமந்துகொண்டு வந்ததைக் கண்டீர்களே (உபா. 1:31) என்று மோசே கூறினார், அதுபோலக் கர்த்தர் உங்களைச் சுமப்பார். அவர் உங்களைத் தோளின் மேல் வைத்து மாத்திரமல்ல, மடியில் வைத்தும் உங்களைச் சுமப்பார்(ஏசாயா 40:11). நீங்கள் அவருடைய இருதயத்தின் அருகில் காணப்படுவீர்கள், அவருடைய அன்பு உங்களை மூடிக்கொள்ளும். நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது என்று யாக்கோபு 1:17ல் எழுதப்பட்டிருக்கிறது. அவரே எல்லா நன்மைக்கும் ஊற்றுக் காரணர். அவர் உங்களுக்குப் பூமிக்குரிய, சரீரத்திற்குரிய எல்லா நன்மைகளையும் தந்து புதிய வருடத்தில் உங்களைக் கனம் பண்ணுவார். அவர் இம்மைக்குரிய ஆசீர்வாதங்களை மாத்திரமல்ல, உன்னதங்களுக்குரிய ஆசீர்வாதங்களையும் தருவார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம், அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களில் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார் (எபே. 1:3). 2023ம் ஆண்டு ஆவிக்குரிய வாழ்க்கையிலும் வளர்ச்சியைக் கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிடுவார். உங்களை அவரோடு சஞ்சரிக்கும் படிக்குச் செய்வார், கிருபை வரங்களினால் உங்களை அலங்கரிப்பார். சிறு மந்தையாகக் காணப்படுகிற உங்களுக்குப் பிதா தன்னுடைய இராஜ்யத்தையும் கொடுத்து மகிமைப்படுத்துவார்.
கர்த்தருடைய பிள்ளைகளே, ஆண்டவருடைய இரட்சிப்பைத் தவிர மற்ற எல்லா ஆசீர்வாதங்களும் நிபந்தனைகளோடு கூடியது என்பதை அறிந்து கொள்ளுங்கள். தேவனுடைய குமாரர்களாகவும், குமாரத்திகளாகவும் காணப்படுகிற உங்களுக்கு மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஆசீர்வாதங்களை அவர் தருவதற்கு, நீங்கள் அவருடைய ஆலயமாகக் காணப்படவேண்டும் என்று அதே வேதப்பகுதி கூறுகிறது (2 கொரி. 6:16). கர்த்தர் உங்களுக்குள், உங்கள் குடும்பங்களில், சபைகளில் வாசம் பண்ணவும், உலாவவும் விரும்புகிறார். லவோதிக்கேயா சபை மக்கள் வாசம் பண்ணவும், உலாவவும் இடம் கொடாமல் இயேசுவை வெளியே விட்டுவிட்டார்கள், சூலமித்தி கதவைப் பூட்டி விட்டாள், அவர்களைப் போலக் காணப்பட்டுவிடாதிருங்கள். அது போலப் பூமிக்குரிய இந்த ஜீவியத்தில் பிரித்தெடுக்கப்பட்ட ஜீவியம் செய்யுங்கள் (2 கொரி. 6:17). கிறிஸ்தவர்களுடைய அடையாளமே பிரித்தெடுக்கப் பட்ட வாழ்க்கையாய் காணப்படுகிறது. நாம் இந்த பூமியில் காணப்பட்டாலும் பூமிக்குரியவர்கள் அல்ல. உலகத்து ஜனங்களுக்கும் நமக்கும் சம்பந்தமேது? ஐக்கியமேது? இசைவேது? பங்கேது? (2 கொரி. 6:14-16) என்று வேதம் கேட்கிறது. ஆகையால் உலகத்திற்கு ஒத்த வேஷத்தைத் தரித்து விடாதிருங்கள். அதுபோல உங்களைச் சுத்திகரித்துக் கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுததுங்கள் (2 கொரி. 7:1). பரிசுத்தத்தை வாஞ்சியுங்கள். நம்முடைய தேவன் பரிசுத்தர், அதே பரிசுத்தத்தை நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார். ஆகையால் அனுதினமும் பரிசுத்தமாக ஜீவிக்க உங்களை அர்ப்பணியுங்கள். அப்போது இந்த வருடம் முழுவதும், தேவன் உங்களுடைய அப்பாவாக இருந்து உங்களுக்கு இரங்கி, உங்களைச் சுமந்து, உங்களை ஆசீர்வதித்து அனுதினமும் நடத்துவார். நீங்கள் வாழ்ந்து செழித்திருப்பீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar