என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும் (ஏசாயா 32:18).
கர்த்தர் தன்னுடைய ஜனங்களை, என் ஜனம் என்று உரிமை பாராட்டி அழைக்கிறவர். என் ஜெபவீடு, என் சபை என்று அழைப்பதைப் போல நம்மை என் ஜனம் என்று அழைக்கிறார். கர்த்தருடைய பிள்ளைகளே, நாம் அவருடைய நாமம் தரிக்கப்பட்ட அவருடைய ஜனங்கள் என்பதை உணர்ந்து கொள்ளுவது நம்மை உற்சாகம் கொள்ளும்படிச் செய்யும்.
நீங்கள் அவருடைய ஜனங்களாகக் காணப்படும் போது, கர்த்தருடைய ஆவியானவர் உன்னதத்திலிருந்து உங்கள்மேல் ஆவியை ஊற்றுவார். அப்போது நீங்கள் சமாதான தாபரங்களில் குடியிருப்பீர்கள். உங்களைச் சுற்றிலும் கர்த்தர் அக்கினி மதிலாகக் காணப்படுவார். உலக நாடுகளில் பலகாரியங்கள் நடக்கலாம், துர்ச்செய்திகளை அனுதினமும் நீங்கள் கேட்கலாம், எதிர்பாராதச் சம்பவங்கள் சுற்றிலும் நடக்கலாம். ஆனால் உங்கள் தாபரங்களில் சமாதானம் காணப்படும். இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் காணப்பட்ட வேளையில், அவர்களைச் சுற்றிலும் அழிவுகளும், கல்மழையும், கொள்ளை நோய்களும், மரணங்களும் காணப்பட்டது, ஆனால் இவர்கள் ஆட்டுக்குட்டியின் இரத்தம் பூசப்பட்ட தாபரங்களில் காணப்பட்டதினால், இவர்களுடைய கூடாரங்களில் சமாதானம் காணப்பட்டது. இந்த புதிய ஆண்டில் நீங்கள் சமாதான தாபரங்களில் குடியிருக்கும் படிக்குக் கர்த்தர் செய்வார். அதுபோல உங்கள் வாசஸ்தலங்கள் நிலையானதாகக் காணப்படும். தாவீதுக்கு நிலையான வீட்டைக் கட்டுவேன் என்று வாக்களித்தவர் அப்படியே செய்தார். தாவீதின் குமாரனாக இயேசு பிறந்ததினாலே, அவனுடைய வீட்டைக் கர்த்தர் நிலைப்படுத்தினார். நீங்கள் இயேசுவின் பிள்ளைகளாகக் காணப்படுவதினாலே கர்த்தர் உங்களையும் நிலைப்படுத்தி, ஸ்திரப்படுத்துவார். ஆகார் பெயர்செபாவின் வனாந்தரத்தில் இஸ்மவேலோடு அலைந்து திரிந்தாள், ஆபிரகாம் கொடுத்த அப்பமும், ஒரு துருத்தி தண்ணீரும் முடிந்து போனது. அவள் பிள்ளையை ஒரு செடியின்கீழே விட்டு, பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள். ஆபிரகமால் கூட அவளுக்கு ஒரு நிலையான வீட்டைக் கொடுக்க முடியவில்லை. ஆபிரகாமின் அப்பமும் துருத்தியின் தண்ணீர் கூட முடிந்து போகலாம். ஆனால் ஆண்டவர் நம்மைப் பார்த்துச் சொல்லுகிறார், இஸ்ரவேலே, நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார், நீ உன் அருவருப்புகளை என் பார்வையினின்று அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை(எரே. 4:1) என்று வாக்குக் கொடுக்கிறார். நாம் மனந்திரும்பி, நம்முடைய அருவருப்புகளை நம்மைவிட்டு அகற்றிவிட்டால், கர்த்தர் நம்மை ஸ்திரப்படுத்தி, நிலைப்படுத்துவார்.
கர்த்தருடைய ஜனங்கள் தொந்தரவு செய்வார் இல்லாமல் அமைதியாய் தங்கும் இடங்களிலும் குடியிருப்பார்கள். வசதிகள் எவ்வளவு இருந்தாலும் சுற்றிலுமிருந்து தொந்தரவுகள் காணப்படும் போது அமைதியையும், சமாதானத்தையும் இழந்து விடுவோம். தாவீது கர்த்தரைத் தன் மேய்ப்பராகவும் தன்னை அவருடைய மந்தையின் ஆடாகவும் கண்டு, கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன். அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்(சங். 23:1,2) என்று, பிரதான மேய்ப்பன் இயேசு அவருடைய மந்தையின் ஆடுகளாகிய நமக்கு வைத்திருக்கிற அமைதலுள்ள ஜீவியத்தைக் குறித்துக் கூறுவதைப் பார்க்கமுடிகிறது. நீங்கள் இயேசுவின் பிள்ளைகளாகக் காணப்படும் போது உங்கள் கூடாரங்களிலும், குடும்பங்களிலும் அமைதியும் சமாதானமும் காணப்படும். இந்த புதிய ஆண்டில் கர்த்தர் உங்களைச் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும் படிக்குச் செய்வாராக.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar