கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள், அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள் (ஏசாயா 40:31).
கர்த்தருக்காகக் காத்திருப்பது என்பது பொறுமையோடும், நம்பிக்கையோடும், அவருடைய வேளை வரும்வரைக்கும் காத்திருப்பதாகும். நமது ஆண்டவர் எல்லாவற்றையும் அவருடைய நேரத்தில் செய்கிறவர். கானாவூர் கலியாண வீட்டில் திராட்சை ரசம் குறைவு பட்டதை மரியாள் இயேசுவுக்கு அறிவித்த வேளையில் என் வேளை இன்னும் வரவில்லை என்றார். லாசரு மரித்துப் போனான் என்ற செய்தியை அறிந்தபின்னும் இரண்டு நாட்கள் காலதாமதம் செய்தார். காலமும் நேரமும் அவரைக் கட்டுப்படுத்த முடியாது. எல்லாவற்றையும் அவருடைய நேரத்தில் நேர்த்தியாய் செய்கிறவர். நாம் ஆண்டவரிடத்தில் கேட்பதையெல்லாம் உடனடியாகக் கர்த்தர் கொடுத்தால், நாம் அவரைக் கட்டுப்படுத்துவதாக ஆகிவிடும். அவருக்காகப் பொறுமையோடு காத்திருக்கிறவர்களுக்கு அற்புதங்களைச் செய்கிறவர், அவர்கள் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்கிறவர். சங்கீதக்காரன், கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்த வேளையில், கர்த்தர் அவனிடத்தில் சாய்ந்து அவனுடைய கூப்பிடுதலின் சத்தத்தைக் கேட்டார் என்று வேதம் கூறுகிறது. கர்த்தருடைய இரட்சிப்பிற்காக நம்பிக்கையோடு காத்திருப்பது நல்லது. யோபின் பொறுமையையும், தேவனுடைய செயலின் முடிவையும் வேதத்தின் வாயிலாக அறிந்திருக்கிறீர்களே.
ஆபிரகாம் பொறுமையை இழந்து, வாக்குத்தத்தின் நிறைவேறுதலுக்காகக் காத்திராமல் இருந்ததினால் இஸ்மவேல் என்ற ஒரு துஷ்ட சந்ததி தோன்றுவதற்குக் காரணமானான். மோசே சீனாய் மலையிலிருந்து இறங்கி வருவதற்குக் காலதாமதம் ஆனவுடன், இஸ்ரவேல் ஜனங்கள் நாற்பது நாட்களுக்கு மேலாகப் பொறுமையாகக் காத்திருக்க முடியாததினால், பொன் கன்றுக்குட்டியை உண்டாக்கி, அதை ஆராதித்து, எகிப்திலிருந்து எங்களை விடுவித்த தெய்வங்கள் இவைகளே என்றதின் நிமித்தம் கர்த்தருடைய கோபத்தைச் சம்பாதித்தார்கள். இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுல், ஜனங்கள் தன்னை விட்டுப் பிரிந்து சென்றதினால், சாமுவேல் தீர்க்கதரிசிக்காகக் காத்திராமல் தானே சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினதின் நிமித்தம் தன்னுடைய ராஜ்யபாரத்தையே இழந்து போனான். கர்த்தருடைய பிள்ளைகளே, ஒரு துரித உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எல்லாம் உடனடியாகக் கிடைக்க வேண்டும் என்பது எல்லாருடைய விருப்பமாகக் காணப்படுகிறது, பொறுமை என்றால் என்ன? என்ற நிலைக்கு உலகம் கடந்து செல்லுகிறது. நீங்களும் உலகத்தோடு இணைந்து பொறுமையை இழந்து பாவத்தைச் சம்பாதித்து விடாதிருங்கள்.
மேற்குறிப்பிடப்பட்ட வசனத்தில், கர்த்தருக்காகக் காத்திருக்கிறவர்களுக்கு அவர் புதுப்பெலனை வாக்களித்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் புதுப்பெலனையும், புதிய கிருபைகளையும், புது அபிஷேகத்தையும் தந்து உங்களை நடத்துகிறவர். நீங்கள் கர்த்தருக்காக ஜெபத்திலே காத்திருக்கும் போது, உன்னதத்தின் பெலனால் உங்களை இடைகட்டுவார். உங்கள் கால்களை மான்கால்கள் போலாக்கி, உயரமான இடங்களில் நடக்கும் படிக்குச் செய்வார். காலேப்பை போல நாற்பது வயதிலிருந்த பெலன் எண்பத்து ஐந்து வயதிலும் இருக்கிறது என்ற ஒரு நம்பிக்கையைத் தந்து உங்களைத் தொடர்ந்து ஓடும் படிக்குச் செய்வார். அவருடைய பெலன் உங்களை நிரம்பும் போது, ஒவ்வொரு நாளும் உங்களைப் புதுப்பித்து கழுகைப் போல உயர, உயர எழும்பும் படிக்குச் செய்வார். நீங்கள் ஓடினாலும், நடந்தாலும் இளைப்படைவதுமில்லை, சோர்ந்து போவதுமில்லை. இந்த புதிய ஆண்டில் புதிய பெலனைத் தந்து கர்த்தர் உங்களை அனுதினமும் நடத்துவாராக.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar