வேதத்தைக் கேளாதவர்களின் ஜெபம்.

வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது (நீதி. 28:9).

உங்களுடைய ஜெபம் கர்த்தருக்குப் பிரியமானது. நாம் எப்பொழுதும் ஜெபிக்க வேண்டும் என்றும்,   இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும் என்றும் கர்த்தர் எதிர்பார்க்கிறார். சத்துருவுக்கு எதிரான  போராயுதங்களில்  ஒன்று ஜெபமாகக் காணப்படுகிறது. எலியாவின் ஜெபம் வானத்திலிருந்து அக்கினியை இறக்;கியது. கொர்நேலியுவின் இடைவிடாத ஜெபம் தேவனுடைய சமூகத்தை எட்டியது,   உடனே தேவ தூதனைப் பதிலோடு  கர்த்தர் அனுப்பினார்.  யாபேசுடைய  ஜெபத்தைக் கேட்டு,   அவன் வேண்டிக்கொண்டதைக்; அவனுக்கு அருளிச் செய்து,   சகோதரர்களுக்குள்ளே அவனை கனத்திற்குரிய பாத்திரமாய் கர்த்தர் மாற்றினார். ஆனால் வேத வசனங்களை கேளாதபடி தங்கள் செவியை அடைத்து,   அவைகளுக்கு  கீழ்ப்படியாதவர்களுடைய  ஜெபங்கள்  ஆண்டவருக்கு அருவருப்பானது.

யூதாவின் ஜனங்களைப் பார்த்து கர்த்தர் கூறினார்,   நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும்,   என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்,   நீங்கள் மிகுதியாய் ஜெபம் பண்ணினாலும் கேளேன் உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது (ஏசா. 1:15) என்று. திரளான பாவங்களைச் செய்து,   தீர்க்கதரிசிகள் மூலம் வெளிப்பட்ட கர்த்தருடைய வார்த்தைகளுக்கு; செவிசாய்க்காமல் காணப்பட்டதினால் உங்கள் ஜெபங்களை நான் கேட்பதில்லை என்று ஆண்டவர் கூறினார். பெருமையுள்ளவர்களின் ஜெபங்களுக்குக் கர்த்தர் பதில் கொடுப்பதில்லை(யோபு 35:12). ஆயக்காரனும் பரிசேயனும் ஜெபிக்கும் படிக்குத் தேவாலயத்திற்குச் சென்ற வேளையில்,   பரிசேயன்  மேட்டிமையான வார்த்தைகளைக் கூறி ஜெபித்தான். ஆகையால் அவனுடைய ஜெபம் கேட்கப் பட வில்லை. பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்று தன்னை தாழ்த்தி ஜெபித்த ஆயக்காரனுடைய ஜெபத்தைக் கேட்டு அவனுக்குப் பதிலளித்தார். நம்முடைய இருதயங்களில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தால்,   ஆண்டவர் நமக்குச் செவிகொடுப்பதில்லை (சங். 66:18). கர்த்தர் இருதயங்களையும்,   நினைவுகளையும்,   அவைகளின் தோற்றங்களையும் அறிகிறவர். ஆகையால் நம்முடைய இருதயங்களிலும்,   நினைவுகளிலும்,   சிந்தைகளிலும் பொல்லா எண்ணங்கள் காணப்படலாகாது,   அவைகள் கர்த்தரைக் குறித்த காரியங்களினால் நிறைந்திருக்க வேண்டும். ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன்,   தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான் (நீதி. 21:13) என்றும் வேதம் கூறுகிறது. யோபு ஏழைகளை அதிகமாக விசாரித்த நீதிமான்,   ஆகையால் அவன் உபத்திரவப்பட்ட போது,   அவனுடைய வேண்டுதல்களைக் கேட்டு கர்த்தர் அவனுடைய சிறையிருப்பை மாற்றினார்.

கர்த்தருடைய பிள்ளைகளே,   வேத வார்த்தைகளுக்கு நேராக உங்கள் வாழ்க்கையைத் திருப்புங்கள். கர்த்தருடைய சத்தத்தை நீங்கள் கேட்கும் போது,   அந்த சத்தத்திற்கு உடனே கீழ்ப்படியுங்கள். பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலே உத்தமம் என்ற கர்த்தருடைய வார்த்தையை மறந்து விடாதிருங்கள். நிலைக் கண்ணாடியாகிய  கர்த்தருடைய வார்த்தை உங்களில் காணப்படுகிற குறைவுகளையும் குற்றங்களையும் சுட்டிக் காட்டும் போது,   அவற்றை உடனே சரிசெய்து விடுங்கள். நீங்கள் இடது புறம் வலது புறம் சாயும் போது வழியிதுவே,   இதிலே நடவுங்கள் என்று சொல்லுகிற ஆண்டவருடைய  சத்தத்திற்குச் செவிசாய்த்து,   கீழ்ப்படிந்து விடுங்கள். அப்போது உங்கள் ஜெபங்கள் கர்த்தருக்குப் பிரியமானதாக இருக்கும். உங்கள் ஜெபங்களைக் கர்த்தர் கேட்டு நன்மையான ஈவுகளைத் தந்தருளி,   உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *