அப் 28:5. அவன் அந்தப் பூச்சியைத் தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான்.
பவுல் மெலித்தா என்ற தீவிற்குள்ளாக வருகிறான். இன்றைக்கு அந்த பட்டணம் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் மால்ட்டா (Malta) என்றழைக்கப்படுகிறது. அங்கே குளிர் காயும்படியாக பவுல் சில விறகுகளை நெருப்பில் போட துவங்கினான். நெருப்பு பற்றி எரியும்போது உள்ளே இருந்த சர்ப்பம் வெளியே தலையை கொண்டுவருகிறதாய் காணப்படுகிறது. அதுவரைக்கும் குளிர்ந்த நிலையில் இருந்த பாம்பானது சுகமாக உள்ளே படுத்துக்கொண்டிருந்தது. எப்பொழுது அக்கினி பற்றி எரிய ஆரம்பித்ததோ அப்பொழுது அந்த பாம்பினால் உள்ளே சுகமாக படுத்துக்கொள்ள முடியாமல் வெளியே வர ஆரம்பிக்கிறது.
எப்படி விறகின்க்குள் பாம்பு இருந்ததோ அதேபோல நமக்குள்ளும் சாத்தானால் உண்டாகும் மாம்சகிரியைகள் சுகமாய் தங்குகிறதாய் காணப்படுகிறது. மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே(கலா 5 :19-21) என்று வசனம் பெரிய பட்டியலை காண்பிக்கிறது. நமக்குள்ளாக அக்கினி அபிஷேகம் ஊற்ற தொடங்கும்போது உள்ளே இருக்கும் மாம்சத்தின் கிரியைகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியே வர ஆரம்பிக்கிறது. ஆகையால் நாம் ஒவ்வொருவரும் எப்பொழுதும் அக்கினியால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும்.
வெளியே வந்த பாம்பானது பவுலின் கையை கவ்விக்கொண்டது. இப்படி அநேக வேளைகளில் சர்ப்பம் நம்மை கவ்வி கொண்டதை உணராமலே இருந்து விடுகிறோம். தேவனுக்கு கொடுக்க வேண்டிய நேரத்தை மற்றவர்களுக்கு கொடுக்கும்போது சர்ப்பம் கவ்வி கொண்டதை உணராதிருக்கிறோம். குளிர்காலத்தில் இன்னும் கைமுடங்கிக்கொண்டு தூங்குவோம் என்று சொல்லி அதிக நேரம் தூங்கும்போது சர்ப்பம் கவ்வி கொண்டதை உணராமல் காணப்படுகிறோம். மனைவியை தவிர பிற பெண்களிடம் அதிக நெருக்கமாக பழகும்போது சர்ப்பம் கவ்விக்கொண்டதை உணராமல் காணப்படுகிறோம். கணவனை தவிர பிற நபர்களிடம் அதிக நேரம் பேசும்போது சர்ப்பம் கவ்விக்கொண்டதை உணராமல் குளிர்ந்த நிலையில் காணப்படுகிறோம். சினிமா மோகத்தில் மிதந்துகொண்டிருக்கும்போது, மற்றவர்களை கோபத்துடனும் மூர்க்கத்துடனும் கடிந்து கொள்ளும்போது சர்ப்பம் கவ்விக்கொண்டதை உணராமல் காணப்படுகிறோம்.
ஆனால் பவுல் இந்த சூழ்நிலையில் அந்த சர்பத்தை அக்கினியில் உதறி தள்ளினான். உதற வேண்டிய காரியங்களை நீங்கள் தான் உதற வேண்டும். பலிபீடத்தில் எரிகிற அக்கினி எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது (லுக் 10:19) என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆகையால் மாம்சத்தின் கிரியைகளை அக்கினியில் உதறி தள்ளுங்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org