எரே 42:6 அது நன்மையானாலும் தீமையானாலும் சரி, எங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்கு நாங்கள் கீழ்ப்படிவதினால் எங்களுக்கு நன்மையுண்டாகும்படி நாங்கள் உம்மை அனுப்புகிற எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிந்து நடப்போம் என்றார்கள்.
யூத ஜனங்கள், தேவனாகிய கர்த்தர் நாங்கள் நடக்கவேண்டிய வழியையும், செய்யவேண்டிய காரியத்தையும் எங்களுக்குத் தெரியப்பண்ணும்படிக்கு நீ கர்த்தரிடம் கேட்டு எங்களுக்கு சொல் என்று எரேமியாவிடம் கேட்டுக்கொண்டார்கள். எரேமியா சொன்னான் கர்த்தர் உரைக்கும் எல்லா வார்த்தைகளையும் மறைக்காமல் உங்களுக்கு தெரிவிப்பேன் என்பதாக. ஜனங்கள் சொன்னார்கள் கர்த்தர் உரைப்பது நன்மையோ இல்லை தீமையோ எதுவாக இருந்தாலும் நாங்கள் கீழ்ப்படிவோம் என்று சொன்னார்கள். இப்படிப்பட்ட மனப்பான்மை நம் எல்லாருக்குள்ளும் இருப்பது நல்லது. நம்முடைய நினைவுகள் அவருடைய நினைவுகள் அல்ல என்று வசனம் சொல்லுகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் எரேமியா கர்த்தருடைய வார்த்தைக்கு காத்திருந்தான். ஜனங்கள் கேட்டவுடன் மறு நிமிடமோ இல்லை ஒரு மணி நேரத்திலோ அவன் பதில் தரவில்லை. மாறாக கர்த்தர் அவனிடம் பேசும் வரை காத்திருந்தான். கர்த்தர் ஜனங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ அதை பெற்றுக்கொள்ளும் வரைக்கும் அவர் பாதத்தில் காத்திருக்க வேண்டும். இன்றைக்கு அநேகர் தங்களை தீர்க்கதரிசி என்று சொல்லுகிறவர்கள் கர்த்தரிடம் காத்திருக்காமல் எதோ தான் மனப்பாடம் செய்த வசனத்தை சொல்லி இது தான் கர்த்தர் உரைப்பது என்று சொல்லி ஜனங்களை வஞ்சிக்கிறார்கள். ஆனால் எரேமியா கர்த்தருடைய வார்த்தைக்கு காத்திருந்தான். பத்து நாட்கள் கழித்து தான் கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டானது. அப்பொழுது கர்த்தர் சொன்ன வார்த்தைகள் அனைத்தையும் அவன் கூறினான். ஜனங்கள் எதிர்பார்க்காததை கர்த்தர் உரைத்தார். அதை அப்படியே சொல்கிறவனாக, வார்த்தையில் பிசகாமல், தற்புகழ்ச்சி கிடைக்க வேண்டும் என்று எண்ணாமல் கர்த்தர் சொன்ன வார்த்தையை உரைத்தான்.
ஆனால் ஜனங்கள் எரேமியா தங்களுக்கு விரோதமாக வார்த்தைகளை சொன்னான், தேவனிடத்திருந்து இந்த வார்த்தைகள் வரவில்லை என்று பழிசொனார்கள். நன்மையானாலும் தீமையானாலும் தேவனுடைய சத்தத்துக்கு கீழ்ப்படிவோம் என்று சொன்ன ஜனங்கள் இப்பொழுது தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடுக்காமல் போனார்கள். கர்த்தருடைய பிள்ளைகள் ஒருபோதும் இப்படி இருக்கலாகாது. எப்பொழுதும் எஜமான் சொல்லும் வார்த்தைக்கு கீழ்ப்படிகிறவர்களாக காணப்பட வேண்டும். கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம் (1 சாமு 15 : 22 ) என்று சாமுவேல் தீர்க்கதரிசி சொல்லுவதை பார்க்கலாம். ஆகையால் கர்த்தர் உங்களுக்கு உறைகின்ற எந்த காரியமாக இருந்தாலும் கீழ்ப்படியுங்கள். அதுவே உத்தமம்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org