என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் (எரேமியா 33:3).
யூதாவின் கடைசி ராஜாவாகிய சிதேக்கியாவின் நாட்களில், அவன் பாபிலோனுக்கு, நேபுகாத்நேச்சாரால் சிறையாகக் கொண்டு போகப்படுவான் என்று கர்த்தருடைய வார்த்தை எரேமியா தீர்க்கதரிசியின் மூலம் தீர்க்கதரிசனமாக வெளிப்பட்டது. அதினிமித்தம், சிதேக்கியா எரேமியாவைப் பிடித்து சிறைச்சாலையில் அடைத்து வைத்தான். அப்பொழுது யெகோவா என்னும் நாமமுள்ள தேவன், எரேமியாவை நோக்கி நீ விசுவாசத்தோடு என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உனக்குப் பதில் கொடுத்து நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களைச் செய்வேன் என்று வாக்கு கொடுத்தார். கர்த்தருடைய வார்த்தையின் படி நடந்தது. அவருடைய சத்தத்திற்குச் செவிசாய்க்காத சிதேக்கியா சிறைபிடிக்கப்பட்டு, பாபிலோனுக்கு கொண்டு போகப்பட்டான். அவனுடைய கண்களுக்கு முன்பாக அவனுடைய குமாரர்கள் வெட்டுண்டு மரித்தார்கள், பின்பு சிதேக்கியாவின் கண்களும் கெடுக்கப்பட்டு குருடனாகக் காணப்பட்டான் என்று வேதம் கூறுகிறது. ஆனால் கர்த்தரை நோக்கி நம்பிக்கையோடு கூப்பிட்ட எரேமியா சிறையிருப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதுமின்றி, அவன் நேபுகாத்நேச்சாராலும், அவன் பிரதானியாகிய நேபுசராதன் மூலமும், அந்த கடினமான நாட்களில் கூட நன்கு விசாரிக்கப்பட்டான்.
எரேமியாவைப் போல நெருக்கமான சூழ்நிலைகளில் நீங்கள் காணப்படக் கூடும். பலவிதமான கஷ்டங்களின் பாதையில் கூட நீங்கள் கடந்து செல்லாம். ஆண்டவர் உங்களைப் பார்த்து, என்னை நோக்கிக் கூப்பிடுங்கள் என்று சொல்லுகிறார். எசேக்கியா தன்னுடைய வியாதியின் நிமித்தம் மரித்துப்போவான் என்ற செய்தியைக் கேட்டவுடன் சுவர் புறமாக்கத் திரும்பி ஆண்டவரை நோக்கிக் கூப்பிட்டான். கர்த்தர் உடனடியாக அவனுக்கு மறு உத்தரவு கொடுத்தார். செய்தியைச் சொன்ன ஏசாயா முற்றத்தைத் தாண்டுவதற்கு முன்பு தேவனுடைய பதில் வந்தது, பதினைந்து வருஷங்களை அவனுடைய ஆயுசின் நாட்களோடு கர்த்தர் கூட்டிக் கொடுத்தார். நம்முடைய தேவன் கூப்பிடுதலுக்கு இரங்குகிற கர்த்தர். பர்திமேயு என்கிற ஒரு குருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சைகேட்டுக்கொண்டிருந்தான். அவன் நசரேயனாகிய இயேசு வருகிறாரென்று கேள்விப்பட்டு, இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத் தொடங்கினான். அவன் பேசாதிருக்கும்படி அநேகர் அவனை அதட்டினார்கள். அவனோ, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான் என்று வேதம் கூறுகிறது. இயேசு நின்றார், அவனை அழைத்து வரும்படிக்குச் சொன்னார். அவர்கள் அந்தக் குருடனை அழைத்து வந்த வேளையில், நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான். கர்த்தருடைய ஜனங்கள் எப்பொழுதும் அழுதுகொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, உங்கள் கூப்பிடுதலைக் கேட்டவுடனே உங்களுக்கு மறு உத்தரவு அருளுவார் (ஏசாயா 30:19). கூப்பிடுகிற காக்கை குஞ்சுக்குக் கூட பதிலளிக்கிற தேவன், அவருடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட, அவருடைய பிள்ளைகளாகிய உங்களுக்குப் பதில் தருவது அதிக நிச்சயம்.
கர்த்தர் பதில் தருவார் என்ற நிச்சயத்தோடு உங்கள் எல்லா சூழ்நிலைகளிலும் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். அவர் கொடுக்கிற பதில்கள் நீங்கள் அறியாததும், உங்கள் புத்திக்கு எட்டாததுமான பெரிய காரியங்களாகக் காணப்படும். அப்படிப்பட்ட பதில்கள் உங்களுக்கு ஆச்சரியமாகவும், கிரகிக்கக் கூடாததுமாகக் காணப்படும். ஆகையால் விசுவாசத்தோடு கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள், அவருடைய வேளையில் அவர் உங்களுக்குப் பதிலைத் தந்து உங்களை மகிழச்செய்வார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar