நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள் (1 கொரி. 11:1).
அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து சபை விசுவாசிகளைப் பார்த்து நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள் என்றார். இந்நாட்களில் கிறிஸ்துவை அறியாதவர்களும், கிறிஸ்தவர்களும், குறிப்பாக இளம் கிறிஸ்தவர்கள் உதாரணங்களையும், மாதிரிகளையும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் என்னைப் பாராதிருங்கள், இயேசுவைப் பாருங்கள் என்று கூறி இன்றைய மூத்த விசுவாசிகளும், ஊழியர்களும் தப்பித்து விடுகிறார்கள். ஆம், நாம் குறைவுள்ளவர்கள்தான், நிர்ப்பந்தமானவர்கள்தான், இருந்தாலும் இப்படியே கூறி எந்நாளும் காணப்பட முடியாது. மற்றவர்கள் இயேசுவை நோக்கிப் பார்ப்பதற்கு நாம் அவர்களுக்கு முன்பு மாதிரியை வைக்கவேண்டும். உலகம் உங்களில் இயேசுவைக் காண விரும்புகிறது. அதுபோல உலகத்தின் ஜனங்களும், கிறிஸ்தவர்களிடத்தில் மாதிரியை எதிர்பார்க்கிறார்கள். கனம் பொருந்திய சுனேம் ஊராளாகிய ஸ்திரீ, தன் புருஷனிடத்தில், நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனுஷனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன். நாம் மெத்தையின்மேல் ஒரு சிறிய அறைவீட்டைக் கட்டி, அதில் அவருக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும், நாற்காலியையும், குத்துவிளக்கையும் வைப்போம், அவர் நம்மிடத்தில் வரும்போது அங்கே தங்கட்டும் என்று எலிசாவைக் குறித்துக் கூறினாள். கர்த்தருடைய பிள்ளைகளுடைய வெளிச்சம் இன்று உலக ஜனங்களுக்கு முன்பாக பிரகாசிக்க வேண்டும் என்று இயேசு எதிர்பார்க்கிறார். ஆகையால் நீங்கள் பூமிக்கு உப்பாகவும், உலகத்திற்கு வெளிச்சமாகவும் காணப்படுங்கள், உங்கள் நற்கிரியைகளையும், நன்னடக்கைகளையும், நம்பகத்தன்மைகளையும் உலகத்தின் ஜனங்கள் காணட்டும்.
அப்போஸ்தலனாகிய பவுல், இளம் ஊழியனாகிய தீமத்தேயுவைப் பார்த்து, உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டை பண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு(1 தீமத். 4:12) என்றார். வயதில் மூத்தவர்கள் மாத்திரமல்ல, இளம் கிறிஸ்தவர்களும் மற்றவர்களுக்கு மாதிரிகளாகக் காணப்பட வேண்டும். உங்கள் வார்த்தைகள் உப்பால் சாரமேறினதாகக் காணட்டும். கெட்ட பேச்சுக்கள் உங்கள் நாவிலிருந்து வரவேண்டாம். உங்கள் நன்னடத்தை அனேகரை உங்கள் பட்சம் இழுக்கட்டும், ஒழுக்கமான ஆடைகளை அணியுங்கள். ஒருநாளும் ஒருவருக்கும் இடறுதலாய் காணப்படாதிருங்கள். அன்போடு காரியங்களை நடப்பியுங்கள். நீங்கள் செல்லுகிற இடங்களிலெல்லாம் கிறிஸ்துவின் வாசனையை வீசுங்கள். அப்போது யோவான்ஸ்நானகனுடைய வெளிச்சத்தில் அனேகர் நடக்க மனதாயிருந்தது போல உங்கள் வெளிச்சத்திலும் அனேகர் நடப்பார்கள், உங்கள் மூலம் கிறிஸ்து வண்டை வருவார்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar