மல் 3 : 2,3 …அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார். அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார்.
அக்கினி வெள்ளியையும் பொன்னையும் புடமிடுவதால் அது விலையுயர்ந்ததாக மாறுகிறது. கர்த்தர் உங்களை விலையேறப்பெற்றவர்களாக மாற்ற விரும்புகிறார். பூமிக்கடியிலிருந்து எடுக்கும் பொன்னானது சுத்திகரிக்கப்படாமல் இருக்கும். அவற்றில் சுமார் 95 சதவீதம் மண்ணும், களிம்புகளும் ஒட்டிக்கொண்டிருக்கும். அவற்றை சுத்தப்படுத்துவதற்கு அவற்றை அக்கினியால் புடமிடுவார்கள். புடுமிடுகிறவனுடைய முகம் அந்த பொன்னில் தெரியும் வரை அதை புடமிடுவான். அந்த பொன்னில் சில செம்பு கலந்திருந்தால் அதை 22 கேரட் பொன் என்று சொல்லுவார்கள். அதிக செம்பு கலந்திருந்தால் அந்த நகை 20,18 கேரட் பொன்னாக இருக்கும். ஆனால் எல்லாரும் எதிர்பார்ப்பது 24 கேரட் சுத்த பொன். அந்த பொன் மிகவும் மெதுவானதாகவும், சுத்தமாகவும் காணப்படும். அதுபோல சுத்த பொன்னாக நீங்கள் இருக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். இயேசு நம்மில் தெரியும் வரை அவர் நம்மை அவருடைய அக்கினியால் புடமிடுகிறார்.
யோபு சொல்லுகிறான் அவன் என்னை சோதித்தபிறகு சுத்தப்பொன்னாய் இருப்பேன் என்று. நம்முடைய வாழ்க்கையில் சோதனைகள் வராது என்று சொல்லமுடியாது. சோதனைகளை சகிக்கிற மனுஷன் பாக்கியவான் என்று வசனம் சொல்லுகிறது. யோபு கடந்த சென்ற சோதனைகள் ஏராளம். அவன் சோதனைகளை கடந்த பிறகு அல்ல சோதனைகளின் மத்தியில் சொல்லுகிறான் அவர் என்னை சோதித்தபிறகு சுத்தப்பொன்னாய் இருப்பேன். நீங்களும் இப்படி விசுவாசத்துடன் காணப்பட வேண்டும். எலியாவுக்கும் யேசபேலின் மூலம் சோதனை வந்தது. அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும் (1 பேது 1:7).
இந்த உலகத்தில் நாம் படுகிற உபத்திரவத்தினால் எல்லாம் முடிந்து போவதில்லை. இதற்கு பின்பு நீங்கள் வாழப்போகும் பரலோகம் முழுவதும் தங்கத்தால் இருக்கும். தங்கத்தால் இருக்கும் ரோட்டில் நீங்கள் நடந்து சொல்லுவீர்கள். இக்காலத்து பாடுகள் இனிவரும் மகிமைக்கு ஒப்பானதல்ல. ஆகையால் புடமிடும் அக்கினி உங்களை சுத்த பொன்னாக மாற்ற உங்களை அற்பணியுங்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org