எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது, எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன் (1 கொரி. 6:12).
அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து சபை விசுவாசிகளுக்கு எழுதும் போது, எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆனால் எல்லாம் எனக்கு தகுதியாயிராது, நன்மை பயக்காது, பக்திவிருத்தியை உண்டாக்காது, ஆகையால் அப்படிப்பட்டவற்றுக்கு நான் அடிமைப் படுவதில்லை என்று எழுதினார். இப்பிரபஞ்சத்தின் அதிபதி உலகத்தில் காணப்படுகிற எல்லா பாவப் பழக்கவழக்கங்களையும் காட்டி, அதற்கு நேராக ஜனங்களை இழுக்கிறான். இவற்றை இந்த வயதில் தான் அநுபவிக்க முடியும், ஆகையால் காலம் தாழ்த்தாதே என்று நயம் காட்டுகிறான். அனேகர்கள், குறிப்பாக வாலிபர்கள் அவனுடைய வஞ்சக வலையில் சிக்கி தவிக்கிறார்கள். கர்த்தருடைய பிள்ளைகளே, உலகம் எல்லாவற்றையும் ருசித்துப் பார் என்று கவர்ச்சிகளைக் காட்டினாலும், உங்களுக்குத் தகுதியானது எவை என்பதை நீங்கள் ஆராய்ந்து அறியவேண்டும்.
அனேக ஆண்டுகள் மனோவா தம்பதிகளுக்குக் குழந்தை இல்லாமலிருந்தது. அவர்களுடைய வேண்டுதலைக் கேட்டு சிம்சோன் என்ற குமாரனைக் கர்த்தர் கொடுத்தார். நல்ல பெற்றோராக மனோவாக் குடும்பம் காணப்பட்டதினால், அவனை எப்படி வளர்க்க வேண்டும் என்று கர்த்தரிடம் கேட்டு, அதன்படி நசரேய விருதத்தோடு அவனை வளர்த்தினார்கள். அவன் வாலிபனாக வளர்ந்த வேளையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத் துவங்கினார். பெலிஸ்தியர்களுடைய கரங்களிலிருந்து இஸ்ரவேலர்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கும் படிக்கு ஒரு பராக்கிரமசாலியாகக் கர்த்தர் அவனை முன்குறித்து, அபிஷேகித்திருந்தார். ஆனால் அவன் தன்னுடைய வாலிப நாட்களில் கண்களுக்கு காவல் வைக்காதபடிக்கு, அபிஷேகிக்கப்பட்ட தனக்குத் தகுதியானவற்றை விட்டு, விபச்சாரியோடும், பெலிஸ்திய ஸ்திரீயோடும் தகாததை நடப்பித்தான். ஆகையால் கண்கள் பிடுங்கப்பட்டவனாய், வேடிக்கைக் காட்டுகிறவனா காணப்பட்டான். ராஜாக்கள் யுத்தம் செய்யும் காலத்தில், தாவீது யுத்தத்தை விட்டு ஓய்ந்து, மகிழ்ச்சியாய் காணப்படும் படிக்கு விரும்பினான். அரண்மனையின் உப்பரிக்கையின் மேல், சோம்பலின் நிமித்தம் உலாவினதினால், கண்களை அலையவிட்டான். பச்சேபாளை இச்சித்து, அபகரித்து, அவளோடு பாவத்தை நடப்பித்தான். கர்த்தர் அவனைத் தைலக்கொம்பினால் அபிஷேகித்த நோக்கத்தை மறந்து, தனக்கு பொருந்தாதையும், தகுதியில்லாததையும் நடப்பித்தான். பாவத்திற்குத் தன்னை அடிமைப்படுத்தியதின் நிமித்தம் அதின் தண்டனைகளை அநுபவித்தான்.
கொரிந்து சபை ஜனங்கள் நடுவிலும், மாம்சீக பாவங்கள் அதிகமாகக் காணப்பட்டதை பவுல் அறிந்து, அவர்களைக் கடிந்து கொண்டு, தன்னை மாதிரியாய் வைத்து எழுதின வார்த்தைதான் மேற்குறிப்பிட்ட வசனமாகக் காணப்படுகிறது. உங்களைப் போல எல்லாவற்றையும் எனக்கும் அநுபவிக்கமுடியும். ஆனால் கர்த்தருக்கு முன்பாக எல்லாம் எனக்கு தகுதியாயிராது, ஒன்றிற்கும் நான் அடிமைப்படுவதில்லை என்றான். கர்த்தருடைய பிள்ளைகளே! ஒவ்வொரு காரியங்களையும் செய்யுமுன், அவைகள் உங்களுக்கு கர்த்தருக்குள் தகுதியானதா என்பதைச் சோதித்தறியுங்கள். சில நட்புகளைத் தெரிந்தெடுக்கும் போதும் அவர்கள் கர்த்தருக்குள் நண்பர்களாய் காணப்படுவதற்குத் தகுதியானவர்களா என்பதை ஆராய்ந்து அறியுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar