உன் 8:6,7 …நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது. திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது; ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைபண்ணப்படும்.
இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக நேச அக்கினி பற்றியெரிந்ததால் தான் அவர் இந்த உலகத்திற்கு வந்தார். அவர் நம்மீது வைத்த நேசத்தினால் தான் கல்வாரி சிலுவையில் தன்னை பூரணமாக ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தார். இயேசுவுக்குள்ளாக இருந்த நேச அக்கினி நமக்குள்ளாகவும் இருக்க வேண்டும். உலகத்திலிருக்கும் எந்த பொருட்கள், நபர்களை காட்டிலும் இயேசுவை நாம் அதிகமாக நேசிக்க வேண்டும். ஒரு சிறு பொருள் தீ பற்றி எரிந்தால், அதை தண்ணீரால் அவித்துவிடலாம். ஆனால் அந்த தீ பெரிய காட்டையே கொளுத்துமானால், அதை தண்ணீரால் அணைப்பது இயலாத காரியம்.
ரிச்சர்ட் உம்ப்ராண்ட் என்ற தேவ மனிதர் கம்யூனிய தேசமாகிய ருமேனியா என்னும் நாட்டில் சிறையிலடைக்கப்பட்டார். இயேசுகிறிஸ்துவை குறித்து பிரசங்கித்ததால் அவரை சிறைச்சாலையில் அடைத்து துன்புறுத்தினார்கள். அவர் பல பாடுகளை சிறைச்சாலையில் அனுபவித்தார். ஆனால் அவருக்குள் நேச அக்கினி பற்றி எரிந்து கொண்டேயிருந்தது. அதை அணைப்பதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் அவரை நெருக்கினார்கள். அவருடைய சரீரத்தில் கத்தியினால் குத்தினார்கள். சுமார் பதினேழு இடங்களில் அவருடைய சரீரத்தை அறுத்து எடுத்தார்கள். இருந்தாலும் இயேசுவின் மீது இருந்த நேச அக்கினியை அவிழ்த்துப்போட முடியவில்லை. ஒருமுறை ரிச்சர்ட் உம்ரானிடம் சில நிபுணர்கள் பார்த்து, இவ்வளவு சோதனை, கொடுமை, சித்திரவதை, அடிகள், பாடுகள் மத்தியிலும் கிறிஸ்துவை மறுதலிக்காமல் இருப்பதன் காரணம் என்ன என்று கேட்டார்கள். அதற்கு அவர் சொன்னார் “எனக்குள்ளே ஒரு நேச அக்கினி பற்றி எரிந்து கொண்டேயிருக்கிறது. அது கல்வாரியின் நேச அக்கினி. எந்த தண்ணீரும் அதை அனைத்துப்போட முடியாது” என்றார்.
எவ்வெளவுக்கெவ்வளவு பாடுகளும் சோதனைகளும் அதிகரிக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு கல்வாரியின் நேச அக்கினி பற்றி எரிய வேண்டும். எல்லாரும் சொல்ல வேண்டும் எனக்குள்ளாக ஆவியானவர் நேச அக்கினியை ஊற்றியிருக்கிறார். ஆகையால் எந்த தண்ணீரும் எனக்குள்ளாக இருக்கும் நேச அக்கினியை அவிக்க முடியாது என்று. கிறிஸ்துவின் நேசம் என்னும் ஜமுக்காலத்திற்குள்ளாக எப்பொழுதும் காணப்படுங்கள். மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது (ரோம 5:5).
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org