நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும், என் நம்பிக்கை விருதாவாய்ப்போக என்னை வெட்கத்திற்கு உட்படுத்தாதேயும் (சங்கீதம் 119:116).
புதிய மாதத்திற்குள் பிரவேசிக்கும் படிக்கு நமக்கு உதவி செய்த தேவனை நன்றியோடு துதிப்போம். இந்த மாதம் முழுவதும் நீங்கள் பிழைத்திருப்பதற்குக் கர்த்தர் தமது வார்த்தையின்படி உங்களை ஆதரித்து, தாங்கி நடத்துவார். சங்கீதக்காரனாகிய தாவீதிற்குத் திரளான எதிரிகள் காணப்பட்டார்கள். அவனுடைய ஆபத்து நாளில் அனேகர் அவனுக்கு எதிராக வந்தார்கள், கர்த்தரோ அவனுக்கு ஆதரவாயிருந்தார். ஆகையால் ஒருவரும் அவனை மேற்கொள்ள முடியவில்லை. அப்படியே கர்த்தர் உங்களையும் நடத்துவார். கர்த்தர் உங்களை ஆதரிக்கும் போது நீங்கள் வாழ்ந்து, பிழைத்திருப்பீர்கள். நீங்கள் ஒருநாளும் வெட்க்பட்டு போவதில்லை.
கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களைக் குறித்துச் சொல்லும் போது, நீ பிறந்த நாளிலே உன் தொப்புள் அறுக்கப்படவுமில்லை, நீ சுத்தமாவதற்குத் தண்ணீரினால் குளிப்பாட்டப்படவுமில்லை, உப்பால் சுத்திகரிக்கப்படவுமில்லை, துணிகளில் சுற்றப்படவுமில்லை. உனக்காகப் பரிதபித்து, இவைகளில் ஒன்றையாகிலும் உனக்குச் செய்ய ஒருகண்ணும் உன்பேரில் இரக்கமாயிருந்ததுமில்லை நீ பிறந்தநாளில் நீ அருவருக்கப்பட்டதினால் வெளியில் எறிந்துவிடப்பட்டாய். நான் உன் அருகே கடந்துபோகும்போது, மிதிக்கப்படுவதற்கு ஏதுவாய் நீ உன் இரத்தத்தில் கிடக்கிறதைக் கண்டு, உன்னைப் பார்த்து, பிழைத்திரு என்று சொன்னேன் என்று. ஆகையால் அவர்கள் இன்றும் வாழ்ந்து செழித்திருக்கிறார்கள். அனேக தேசத்தின் குடிகள், இஸ்ரவேலுக்கு மரணம் சம்பவிக்கட்டும், அதின் குடிகள், அழிந்து ஒழிந்து போகட்டும் என்று சபித்தும், அதையே அனுதினமும் எதிர்பார்த்தும் ஒன்றும் சம்பவிக்கவில்லை. தொழில் நுட்பங்களிலும், ஐசுவரியத்திலும், புதிய கண்டுபிடிப்புகளிலும் அவர்கள் தான் இன்றும் உலகின் முதலிடத்தில் காணப்படுகிறார்கள். நீங்கள் எந்த நிலையிலிருந்தாலும் கர்த்தர் உங்களைப் பார்த்துப் பிழைத்திரு என்று ஒரு வார்த்தையைச் சொன்னால் போதும், உங்கள் நிலைமைகள் மாறும், உங்கள் வாழ்க்கைச் செழிக்கும். பலவீனப்பட்ட உங்கள் சரீரத்தின் அத்தனை அவயவங்களும் உயிர்பெறும், உங்கள் சுகவாழ்வு துளிர்க்கும், உங்கள் காத்திருப்புகள் முடிவுக்கு வரும், அற்புதங்கள் நடக்கும், நீங்கள் ஆசீர்வாதமாகக் காணப்படுவீர்கள்.
இஸ்ரவேலரே, நீங்கள் பிழைத்திருக்கும் படிக்கும், உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற தேசத்தில் நீங்கள் பிரவேசித்து அதைச் சுதந்தரித்துக்கொள்ளும் படிக்கும், நீங்கள் கைக்கொள்வதற்கு நான் உங்களுக்குப் போதிக்கிற கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள் (உபா. 4:1) என்று மோசே கூறினார். கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் வாழ்ந்து பிழைத்திருப்பதற்கு, கர்த்தர் அவருடைய வார்த்தையின் படி உங்களை ஆதரிக்கிறவர். அவர் வார்த்தை மீறாதவர், வாக்கு மாறாதவர். ஆகையால் கர்த்தருடைய வார்த்தைகளுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படியுங்கள். வேதத்தின் படி உங்கள் வாழ்க்கையைக் கட்டுங்கள். நாம் மல்யுத்தம் பண்ணினாலும் சட்டத்தின்படி பண்ணவேண்டும் என்று வேதம் கூறுகிறது. ஆகையால் நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொண்டு நடக்கும் போது, இந்த மாதம் முழுவதும் மாத்திரமல்ல, உங்கள் ஆயுள் முழுவதும் நீங்கள் வாழ்ந்து பிழைத்திருக்கும் படிக்குக் கர்த்தர் உங்களுக்கு ஆதரவாயிருப்பார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar