1 யோவா 2:2. நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.
இயேசுகிறிஸ்து சிலுவையில் மரித்து உயிரோடு எழுந்தது சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்வதற்காக என்பதை தேவ ஜனங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இயேசு சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். இயேசுவை சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக தேவன் நியமித்தார். சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராக இயேசு காணப்படுகிறார். ஆகையால் இயேசு கிறிஸ்தவர்களை மாத்திரம் மீட்க பலியாகவில்லை. ஏதோ குறிப்பிட்ட சமுதாயத்திற்கு, இனங்களுக்கு அல்ல; மானிட மக்கள் அனைவருக்காகவும் இயேசு சிலுவையில் பலியானார். இயேசு சிலுவையில் அறையப்பட்ட அதே நேரத்தில் கள்ளர்கள் இரண்டு பேரும் சிலுவையில் அறையப்பட்டார்கள். அவர்களையும் சேர்த்து இதுவரைக்கும் பிறந்தவர்கள், இனி பிறக்கப்போகிறவர்கள், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வித்தியாசப்படுத்தாமல், அனைவருக்காகவும் இயேசு ஒருவர் பலியானார். ஆகையால் தான் நாம் இரட்சிக்கப்பட இயேசுவை தவிர வேறொரு வழி இல்லை.
அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை (யோவா 1:10). யாரெல்லாம் இயேசுவை மீட்பராக ஏற்றுக்கொள்ளுகிறார்களோ அத்தனை பேரின் பாவத்தையும் கழுவி மீட்டெடுக்க அவர் போதுமானவராகவும் உண்மையுள்ளவராகவும் இருக்கிறார்.
இயேசு சொன்னார் நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார் (யோவா 6:51). குறிப்பிட்ட ஜனங்களுக்கு மாத்திரமென்று அவர் சொல்லவில்லை. அவர் சிலுவையில் பிட்டு கொடுத்த மாம்சம், உலகத்தின் ஜீவன்கள் எல்லாருக்கும் என்று இயேசு சொன்னார். உலகத்திலிருக்கும் அதைப்பெருக்காகவும் இயேசு சிலுவையில் இரத்தம் சிந்தினார். கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார் (ரோம 3:26) என்று வசனம் சொல்லுகிறது.
ஆகையால் சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற இயேசுவண்டை வாருங்கள். இயேசுவை பற்றி அறியாதவர்களுக்கு, அவர் எல்லாருக்காகவும் பலியானார் என்ற சத்தியத்தை, நற்செய்தியை கூறுங்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org