தானி 3:27. தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், ராஜாவின் மந்திரிகளும் கூடிவந்து, அந்தப் புருஷருடைய சரீரங்களின்மேல் அக்கினி பெலஞ்செய்யாமலும், அவர்களுடைய தலைமயிர் கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும், அக்கினியின் மணம் அவர்களிடத்தில் வீசாமலும் இருந்ததைக் கண்டார்கள்.
அக்கினியில் இரண்டு வகையான தன்மைகள் உண்டு. ஒன்று அழிவை, தீமையை கொண்டு வரும் உலகப்பிரகாரமான அக்கினி. மற்றொன்று பரிசுத்த ஆவியானவரால் உண்டாகும் பரலோக அக்கினி. அரசியல்வாதிகள் போராட்டம் நடத்தும்போது பேருந்துகள், இரயில் வண்டியின் மீது அக்கினியை கொளுத்தி விடுவார்கள். அது பெரிய அழிவை கொண்டு வரும். சில வருடங்களுக்கு முன்பு பேருந்தில் அக்கினி பற்றி பல பச்சிளங்குழந்தைகள் மரித்து போனார்கள். குடிசைப்பகுதிகளில் தீயை பற்ற வைத்து பலர் மரணத்தை சந்தித்தார்கள் என்று செய்திதாள்களை வாசிக்கும்போது அறிந்துகொள்ளுகிறோம்.
இந்த இரண்டு வகையான அக்கினியும் ஒரு இடத்தில் சந்தித்தது. நேபுகாத்நேச்சார் உண்டாக்கிய அக்கினி. மற்றொன்று தேவ பிரசன்னமாகிய அக்கினி. நேபுகாத்நேச்சார் அவன் உண்டாக்கிய அக்கினியை ஏழு மடங்கு அதிகரித்தான். அந்த அக்கினிக்குள் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவை அவன் போட்டான். ஏழு மடங்கு அதிகரித்த அக்கினிக்குள் அவன் மூன்று பேரையும் போட்டான். இதுபோல நீங்கள் கடந்து செல்லுகிற பாதை ஏழு மடங்கு அதிகமான வேதனையுள்ள அக்கினிபோல பாடுகளாய் இருக்கலாம், அக்கினி போன்ற சோதனைகளின் மத்தியில் நீங்கள் இருக்கலாம், மற்றவர்கள் பேசிய வார்த்தைகள் அக்கினியை போல காயப்படுத்தியிருக்கலாம், சுற்றிலும் அநேகர் எதிர்த்து இருக்கலாம். இப்படித்தான் அக்கினியின் மத்தியில் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவை போட்டார்கள். ஆனால் அங்கே அக்கினிமயமானவர் உள்ளே இருந்ததால் அவர்களுக்குள் இருந்த அக்கினி, உலக அக்கினியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்கள் தலை மயிர் கூட கருகவில்லை.
அதுபோல நீங்களும் அக்கினிமயமானவரால் எப்பொழுதும் நிரப்பப்படும்போது, உலகத்தில் நீங்கள் சந்திக்கும் போராட்டங்களும், நெருக்கங்களும் உங்களை ஒன்றும் செய்ய முடியாது. உங்களை சுற்றிலும் அநேகர் படையெடுத்து வந்தாலும், அது உங்களை அணுகாது. நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது (ஏசா 43:2) என்ற வசனத்தின்படி நீங்கள் பரலோக அக்கினியால் நிரப்பப்படும் போது, இந்த உலக அக்கினியில் நடக்கும்போது நீங்கள் வேகாதிருப்பீர்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org