இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக, ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது, நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்(மத்தேயு 15:28).
இயேசு, தன்னுடைய ஊழியத்தின் நாட்களில் கலிலேயா பகுதியிலிருந்து சுமார் ஐம்பது மைல்கள் தொலைவில் உள்ள தீரு சீதோன் பட்டணங்களுக்குக் கடந்து சென்றார். இந்நாட்கள் இந்த பட்டணங்கள் லெபனான் தேசத்தில் காணப்படுகிறது. கர்த்தர் அங்குச் சென்ற வேளையில் கானானிய ஸ்திரீ ஒருத்தி இயேசுவிடத்தில் வந்து, ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப் படுகிறாள் என்று கூப்பிட்டாள். சொந்த இஸ்ரவேல் ஜனங்கள் இயேசுவை யாரென்று தெளிவாக அறியாதபோதும், புறஜாதி ஸ்திரீ இயேசுவை ஆண்டவராகவும், ராஜாவாகவும் கண்டு கொண்டாள். கர்த்தருடைய பிள்ளைகளே, கர்த்தர் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் விரும்புவதைச் செய்வதற்கு இயேசுவை யாரென்று அறிந்து கொள்ளுங்கள். அவரை உங்கள் வாழ்க்கையை ஆளுகிற ராஜாவாக ஏற்றுக்கொள்ளுங்கள். அவருடைய ஆளுகைக்கு உங்களைப் பூரணமாகச் சமர்ப்பியுங்கள். கானானிய ஸ்திரீக்கு இயேசு ஒரு வார்த்தையையும் பதிலாகச் சொல்லவில்லை. ஆனால் அவள் பின்தொடர்ந்து ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என்று கூப்பிட்டு கொண்டு காணப்பட்டாள். ஆண்டவர் சிலவேளைகளில் நம்முடைய விசுவாசத்தையும், தேவையின் முக்கியத்துவத்தையும் அறிய விரும்புகிறவர். சோர்ந்து போகாதபடிக்கு நாம் வேண்டுதல் செய்கிறோமா என்பதைச் சோதித்துப் பார்க்கிறவர். சீஷர்கள் இவளை அனுப்பிவிடும் என்று கேட்டுக்கொண்ட பொழுதும் காணாமல்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றபடியல்ல என்றார். தீரு சீதோன் பட்டணம் இஸ்ரவேலர்கள் குடியிருக்கும் பட்டணமல்ல, அவர் அங்குக் கடந்து சென்றதின் நோக்கம் இந்த ஸ்திரீயின் மகளுக்கு ஒரு அற்புதத்தைச் செய்வதற்குத் தான், என்றாலும் இவளுடைய தடுமாற்றமில்லாத விசுவாசத்தைக் கர்த்தர் அறிய விரும்பினார்.
கானானிய ஸ்திரீ ஆண்டவருடைய பாதத்தில் விழுந்து எனக்கு உதவி செய்யும் என்று போராடி, வேண்டுதல் செய்த வேளையில், பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்ற சோர்வை உண்டாக்கும் வார்த்தையைக் கர்த்தர் கூறினார்;. என்றாலும் அவள், மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள். அவள் தன்னுடைய வேண்டுதலில் உறுதியாகக் காணப்படுகிறதைப் பார்க்கமுடிகிறது. கர்த்தருடைய பிள்ளைகளே, சிலவேளைகளில் நீங்கள் ஜெபித்தும் சூழ்நிலைகள் சாதகமில்லாமல் காணப்பட்டாலும் சோர்ந்து போகாதிருங்கள். சோர்வை உண்டாக்குகிற வார்த்தைகளை அனேகர் பேசினாலும் மனம்தளராதிருங்கள். இயேசு தன்னை நாய்க்குட்டிகளுக்கு ஒப்பிட்டுக் கூறினபோதும், கானானிய ஸ்திரீ, மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள். ஆம் ஆண்டவரே, நான் புறஜாதிதான், ஆகிலும் உம்மிடத்திலிருந்து வருகிற ஒரு துணிக்கை கூட, ஒரு வார்த்தை கூட என் மகளுக்கு அற்புதத்தைக் கொண்டு வரும் என்று உறுதியான விசுவாசத்தை அவள் வெளிப்படுத்தினாள். உடனே இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக, ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது, நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள். உன் விசுவாசம் பெரியது என்று ஆண்டவர் வேறு யாரைப்பார்த்தும் கூறியதில்லை. ரோம நூற்றுக்கதிபதிக்குக் கூட, இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று தமக்குப் பின்செல்லுகிறவர்களை நோக்கிக் கூறினாரே தவிர, பெரிய விசுவாசம் என்று கானானிய ஸ்திரீயை நோக்கி மட்டும் ஆண்டவர் கூறினார். நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்று இயேசு சொன்ன உடன் அவள் மகள் சொஸ்தமானாள், ஆண்டவர் மீண்டும் கலிலேயாவின் பகுதிகளுக்குத் திரும்பி வந்துவிட்டார். கர்த்தருடைய பிள்ளைகளே, நம்முடைய விசுவாசம் எப்படிப்பட்டதாகக் காணப்படுகிறது? தடுமாறாத உங்கள் விசுவாசம் உங்கள் வாழ்க்கையிலும், உங்கள் குடும்பத்திலும் அற்புதங்களைக் கொண்டுவரும். ஆகையால் சோர்ந்து போகாதபடிக்கு, விசுவாசத்தோடு, இடைவிடாமல் ஜெபியுங்கள், உங்களுடைய அற்புதம் வருகிறது.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar