சோர்ந்து போகாதே:-

என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே (நீதி 3:11)

கர்த்தர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோய் விட கூடாது. என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே (நீதி 3:11) என்று ஞானி சொல்லுகிறான். நல்ல தகப்பன் எப்பொழுதும் தன் மகன் நன்றாக இருக்கும்படி பிரம்பை கையாளுவான். அதுபோல தான் கர்த்தர் சிட்சிக்கும்போது சோர்ந்துபோகாதிருங்கள்.என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே (எபி 12:5) என்று வசனம் சொல்லுகிறது.

எதிர்பார்க்கிற காரியம் தாமதம் ஆகும்போது சோர்வுகள் வரும். நீண்ட நாள் காத்திருப்பு சில வேளைகளில் நம்மை சோர்வுற செய்கிறது. ஆனால் கர்த்தருடைய வசனம் சொல்லுகிறது கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள் (ஏசா 40:31). ஆகையால் ஆசிர்வாதத்திற்காக, நமைக்காக காத்திருக்கும்போது சோர்ந்து போகாதிருங்கள்.

ஜெபம் செய்வதில் சோர்ந்து போகாதிருங்கள். சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் (லுக் 18:1) என்று இயேசு சொன்னார். சில வாரங்கள் அதிகாலையில் எழுந்து ஜெபித்து விட்டு பின்பு தூக்க மயக்கத்தினால், உலகத்தின் கவலைகளினால், பாடுகளினால் சோர்ந்து போய்விடக்கூடாது. மாம்சம் பெலவீனமுள்ளது; ஆனால் ஆவியோ உற்சாகமுள்ளது. உங்களுக்காக, உங்கள் குடும்பத்திற்காக, சபைக்காக, தேசத்திற்காக ஜெபம் செய்வதில் சோர்ந்து போகாதிருங்கள்.

பிறருக்கு நன்மை செய்வதில், பிறருக்கு நற்கிரியைகள் செய்வதில் சோர்ந்து போகக்கூடாது என்று கர்த்தர் சொல்லுகிறார். நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக (கலா 6:9, 2 தெச 3 :13). வேலை தேடுகிறவர்களுக்கு, பசியோடு இருப்பவர்களுக்கு, ஆடை இல்லாமல் இருப்பவர்களுக்கு, தங்க இடம் இல்லாமல் இருப்பவர்களுக்கு நன்மை செய்வதில் கர்த்தருடைய பிள்ளைகள் சோர்ந்து போகலாகாது.

மாத்திரமல்ல, உபத்திரவங்கள் வரும்போது கர்த்தருடைய பிள்ளைகள் சோர்ந்து போகலாகாது. ஆகையால் உங்கள்நிமித்தம் நான் அநுபவிக்கிற உபத்திரவங்களினால் நீங்கள் சோர்ந்துபோகாதிருக்க வேண்டிக்கொள்ளுகிறேன்; அவைகள் உங்களுக்கு மகிமையாயிருக்கிறதே (எபே 3:13) என்று பவுல் சொல்லுகிறான். கடைசி நாட்களில் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு உபத்திரவங்கள் பெருகுகிறது. சபைகளுக்கு நெருக்கங்கள் அதிகரிக்கிறது. இயேசு சொன்னார் உலகத்திலே உங்களுக்கு உபத்திரவம் உண்டு. ஆனாலும் திடன்கொள்ளுங்கள். நான் உலகத்தை ஜெயித்தேன் என்பதாக. ஆகையால் உங்களுக்கு வரும் உபத்திரவத்தினிமித்தம் சோர்ந்து போகாதிருங்கள்.

அருமை ஐயா DGS தினகரன் பாடுவார்கள் சோர்ந்து போகாதே மனமே சோர்ந்து போகாதே.கண்டுன்னை அழைத்த தேவன் கைவிடுவாரோ என்று பாடுவார். கண்டு உங்களை அழைத்தவர் ஒருநாளும் கைவிட மாட்டார். ஆகையால் எந்த காரித்ததிற்கும் சோர்ந்து போகாமல் உற்சாகமாக காணப்படுங்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *