உன்னைப் பார்த்து பிழைத்திரு என்றேன்:-

எசே 16:6. நான் உன் அருகே கடந்துபோகும்போது, மிதிக்கப்படுவதற்கு ஏதுவாய் நீ உன் இரத்தத்தில் கிடக்கிறதைக் கண்டு, உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப் பார்த்து: பிழைத்திரு என்றேன்; ஆம், உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப் பார்த்து: பிழைத்திரு என்று சொன்னேன்.

சிறு வயதிலிருந்து நம்மை ஒருவரும் பாவத்திலிருந்து சுத்திகரிக்கவில்லை. நம் மேல் பரிதபிக்கவும், இரக்கமாய் இருக்கவும் ஒருவரும் இல்லாமல் இருந்த நாட்களும் வருஷங்களுக்கு அநேகமுண்டு. எல்லாராலும் புறக்கணிக்கப்பட்டு, வெளியே எரிந்து விடப்பட்ட சூழ்நிலையில் நாம் இருந்தோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இயேசு நம் அருகே கடந்து சென்றார். மிதிக்கப்படுவதற்கு ஏதுவாக இரத்தத்தில் கிடந்ததை இயேசு கண்டார். அதை பார்த்து இயேசு நம் ஒவ்வொருவரையும் பிழைத்திரு என்று சொன்னார்.

ஒரு கிராமத்தில் ஒரு விதவைக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். அவளை கடினப்பட்டு படிக்க வைத்தால் அந்த பெண்மணி. மகள் நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தோடு பாறை உடைக்கும் வேலை செய்து கொண்டு வந்தாள் அந்த விதவை. மலை என்றும், காடு என்றும் பாராமல் கடினமாக வேலை செய்து படிக்க வைத்தாள். அந்த பிள்ளை நன்றாக படித்து பெங்களூர் பட்டணத்தில் மிக பெரிய மென்பொருள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தாள். அங்கே சேர்ந்த பிறகு தவறான நண்பர்களோடு சேர்ந்து தன்னை பாலியல் வேலைக்கு விற்றுப்போட்டாள். அவளுடைய தவறான பழக்கத்தின் மூலம் தன்னுடைய தாயிடம் பேசவும், கடிதம் எழுதவும் தவறினாள். தன் மகளை குறித்து செய்தியை அறிந்த தாய்க்கு தாங்கமுடியாத வேதனை. அவளுக்காக இரவும் பகலும் ஆண்டவருடைய பாதத்தில் கண்ணீரோடு ஜெபித்தார்கள். தன் மகள் மனம் திரும்ப வேண்டும் என்று கதறி ஜெபித்தார்கள். அந்த மகளை காலப்போக்கில் அநேகர் பாலியல் சித்தரவதை செய்யவும், துன்புறுத்தவும், கடினமாக நடத்தவும் தொடங்கினார்கள். அந்த மகள் மிகுந்த வேதனையில் இருந்தாள். உடலிலும் வேதனை, மனதிலும் வேதனை. இந்நேரத்தில் தன்னுடைய தாயிடம் திரும்பி செல்லலாம் என்று நினைத்தால், அவளுடைய தாயின் முகத்தை பார்க்க மிகுந்த தயக்கம். இறுதியாக, ஒரு முடிவெடுத்து தன் தாயிடம் சென்றாள். அந்த தாய்க்கு தன் மகள் வந்ததை பார்த்தவுடன் கண்ணீர் விட்டு அழுது இயேசுவுக்கு நன்றி செலுத்தினார்கள். தாய் தன் மகளை பார்த்து சொன்னார்கள் இயேசு உனக்கு புது வாழ்வை தருவார், உன் வாழ்க்கையை மீண்டும் எடுத்து காட்டுவார் என்று சொன்னார்கள்.

அந்த வாலிப பிள்ளை மிதிக்கப்படுவதற்கு ஏதுவாய் இரத்தத்தில் கிடந்தாள். அவள் பிழைக்கும்படி செய்து அவளுக்கு கர்த்தர் நல்வாழ்வை கொடுத்தார். அதே இயேசு உங்களையும் பார்த்து சொல்லுகிறார் பிழைத்திரு என்று. அவர் சொல்லும் இந்த ஒரு வார்த்தை உங்கள் வாழ்க்கையை புரட்டிப்போடும் என்பதில் சந்தேகமில்லை.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *