நியாயஞ்செய்கிற மனுஷனைக் கண்டு பிடிப்பீர்களோ என்றும், சத்தியத்தைத் தேடுகிறவன் உண்டோ என்றும், எருசலேமின் தெருக்களிலே திரிந்துபார்த்து, விசாரித்து, அதின் வீதிகளிலே தேடுங்கள், காண்பீர்களானால் அதற்கு மன்னிப்புத் தருவேன் (எரேமியா 5:1).
கர்த்தருடைய கண்கள் நியாயஞ்செய்து, சத்தியத்தைத் தேடுகிறவர்களை நோக்குகிறது. அப்படிப்பட்டவர்கள் பட்டணங்களிலும், தேசங்களிலும் காணப்படும் போது, அவர்களை நினைத்து, அந்த பட்டணத்தின் குடிகளுக்கு மன்னிப்பைத் தருவேன் என்று ஆண்டவர் கூறுகிறார். எரேமியா தீர்க்கதரிசியின் நாட்களில் எருசலேம் பட்டணத்தின் குடிகள் கர்த்தரை விட்டு வெகுதூரம் சென்று விட்டார்கள். சத்தியத்திற்குப் பதிலாகப் பொய்களைச் சொல்லுகிற திரளான பொய் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நம்பினார்கள். அநியாயத்தைத் திரளாய் விதைத்தார்கள், கர்த்தருடைய தீர்க்கதரிசியாகிய எரேமியாவைக் அடித்து, காவலறைகளிலும், குழியிலும் போட்டார்கள். இப்படி பொய்யையும், அநியாயத்தையும், திரளாய் விதைததினிமித்தம் எருசலேம் பட்டணத்தின் குடிகளை நேபுகாத்நேச்சாரிடம் கர்த்தர் விற்றுப் போட்டார். சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே, அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு (நீதி. 23:23) என்று வேதம் கூறுகிறது. ஆனால் சத்தியத்தை விற்று அதன் மூலம் தங்களை ஐசுவரிய வான்களாக்கிக் கொள்ளுகிற திரளான ஊழியர்களின் நிமித்தம், சத்திய மார்க்கம் தூஷிக்கப்படுகிறது. இதைக்குறித்து பேதுரு அப்போஸ்தலன் எழுதும் போது, கள்ளத்தீர்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள், அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள், அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள், அவர்கள் நிமித்தம் சத்திய மார்க்கம் தூஷிக்கப்படும், பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள் (2 பேதுரு 2:1-3) என்று எழுதினார். அதுபோல இன்றைய விசுவாசிகளும் சத்தியத்தை வாங்கவேண்டும் என்று விரும்புவதில்லை. யோவான் காயுவுவைக் குறித்துக் கூறும்போது, சகோதரர் வந்து நீ சத்தியத்தில் நடந்துகொள்ளுகிறாய் என்று உன்னுடைய உண்மையைக்குறித்துச் சாட்சி கொடுத்தபோது மிகவும் சந்தோஷப்பட்டேன். என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை (3 யோவான் 1:3,4) என்றார். இந்நாட்களில் சத்தியத்தை வாஞ்சிக்கிறவர்களும், அதில் நடக்கப் பிரியப்படுகிற விசுவாசிகளும் குறைந்து கொண்டு வருகிறார்கள்.
கர்த்தருடைய பிள்ளைகளே, நீதியைச் செய்யுங்கள், அநீதி எல்லாம் பாவம் என்று வேதம் கூறுகிறது. அநீதி செய்கிற ஜனங்கள் நடுவில் நாம் வாழ்ந்து கொண்டிருந்தாலும், நாம் நீதியையும் நியாயத்தையும் மாத்திரம் செய்யவேண்டும். தேவனுடைய பார்வையிலும், மனுஷனுடைய பார்வையிலும் செம்மையானவற்றைச் செய்யப் பழகுங்கள். நாம் ஆராதிக்கிற தேவன் நீதிபரர், நியாயம் செய்கிறவர். பரலோகம் திறந்திருக்கக் கண்டேன், இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதன்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர், அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம் பண்ணுகிறார் (வெளி. 19:11) என்று இயேசுவைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. அவருடைய சீஷர்களாகிய நாமும் நீதியாய் ஜீவித்து, நியாயத்தைச் செய்ய வேண்டும். சமூலமும் சத்தியமாகிய அவருடைய வசனத்தைப் புதையல்களைப் போலத் தேடுங்கள். உலக நாடுகளில் யுத்தங்களும், பூமியதிர்ச்சிகளும், ரசாயன ஆயுதங்களும், உள்நாட்டுப் பிரச்சினைகளும், கொள்ளை நோய்களும், திரளாய் காணப்படுகிறது. சமாதானக் கேடு எங்கும் காணப்படுகிறது. இனியொரு தலைமுறை பூமியில் எழும்புமா என்பதே கேள்விக்குறியாகக் காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கர்த்தருடைய பிள்ளைகள் நீதியையும், நியாயத்தையும் விரும்பி, அதைச் செய்யும் போதும், சத்தியத்தைத் தேடுகிறவர்களாகக் காணப்படும் போது உங்கள் நிமித்தம் தேசங்களிலும், பட்டணங்களிலும் சமாதானம் காணப்படும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar

