தேவபலமுள்ள நம்முடைய போராயுதங்கள்.

எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல்,     அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவ பலமுள்ளவைகளாயிருக்கிறது  (2 கொரி. 10:4).

கர்த்தருடைய பிள்ளைகளுக்கு முன்பாக ஆவிக்குரிய யுத்தம் ஒன்று காணப்படுகிறது. சத்துரு,      அவன் அக்கினி கடலில் தள்ளப்படுகிற   நாட்கள் நெருங்குகிறதை அறிந்து,     தேவ ஜனங்களோடு அதிகமாக யுத்தம் செய்கிறான். மாமிசத்திற்குரிய ஆயுதங்களால் அவனை மேற்கொள்ள முடியாது.  வேதம் அவனை ஆயுதம் தரித்த பலவான் என்றும்,     உங்கள் எதிராளியாகிய பிசாசு என்றும் அழைக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுலைப் போல நாமும் மாமிசத்தில் காணப்பட்டாலும்,     மாமிசத்தின்படி போர் செய்கிறவர்களல்ல.  மாமிசத்தின்படி போர்செய்கிற தேசங்களை நாம் காண்கிறோம்,     பலவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தி யுத்தம் செய்து,     ஜனங்களை அழிக்கிறார்கள்,     அப்படிப்பட்ட ஆயுதங்களால் சத்துருவை வீழ்த்த முடியாது.  ஆவிக்குரிய நம்முடைய ஆயுதங்கள் சத்துருவின் அரண்களையும்,     கோட்டைகளையும் நிர்மூலமாக்குவதற்கு  தேவபலம்  பொருந்தியதாகக் காணப்படுகிறது. அப்படிப்பட்ட  ஆயுதங்களைப் பயன்படுத்தி சத்துருவையும் அவன் சேனைகளையும் மேற்கொண்டு,     சத்துரு  உங்களிடத்திலிருந்து  திருடின சகலகாரியங்களையும் திருப்பிக்கொள்ள வேண்டும். அவன் உங்கள் ஐசுவரியத்தைத் திருடியிருக்கக் கூடும்,     உங்கள் ஆரோக்கியத்தை திருடியிருக்கலாம்,     உங்களுக்கு வரவேண்டிய நன்மைகளைக் கூட தடுத்திருக்கக் கூடும். அவைகளையெல்லாம் யுத்தம் செய்து திருப்புகிற நாட்களாய் இந்நாட்கள் காணப்படுகிறது. தாவீது இழந்து போன எல்லாவற்றையும்,     ஒன்றுங்குறையாமல் திருப்பிக் கொண்டதைப் போல,     நீங்களும் எல்லாவற்றையும் திருப்பிக்கொள்ளவேண்டும். 


தேவபலம் பொருந்திய ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு,     நீங்கள் கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படவேண்டும். பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி,     தேவனுடைய  சர்வாயுதவர்க்கத்தையும்  தரித்தவர்களாயும்,     எடுத்துக்கொண்டவர்களாகவும்  காணப்படுங்கள்.  எபேசியர் 6வது அதிகாரத்தில் அந்த ஆயுதங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது. சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும்,     நீதியென்னும்  மார்க்கவசத்தைத்  தரித்தவர்களாயும்,      சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும், பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம்  அவித்துப்போடத்தக்க தாய்,     எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.  இரட்சணியமென்னும்  தலைச்சீராவையும்,     தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். இந்த ஆயுதங்களோடு,     எப்பொழுதும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம் பண்ணி,     விழித்துக்கொண்டிருக்கவேண்டும் என்று வேதம் கூறுகிறது.  இயேசுவின் நாமமும்,     ஆட்டுகுட்டியானவருடைன இரத்தமும் கூட சத்துருவுக்கு எதிரான வல்லமையான போராயுதங்களாகக் காணப்படுகிறது.

கர்த்தருடைய பிள்ளைகளே, தாவீது தன் தேனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான் (Strengthened)  என்று வேதம் கூறுகிறது.   அது போலக் கர்த்தருக்குள் உங்களைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள். விசுவாசத்தினாலே நம்முற்பிதாக்கள்,   பலவீனத்தில்  பலங்கொண்டார்கள் (எபி.11:34). அனேக வேளைகளில்  நாம் பலவீனர்களாய்  காணப்படுவதினாலும்,    கர்த்தர் நமக்குக் கிருபையாய் கொடுத்த ஆயுதங்களைப்  பயன்படுத்த அறியாததினாலும் தோற்றுப்போய் விடுகிறோம். ஆகையால்,   ராஜாக்கள் யுத்தம் செய்கிற இந்த நாட்களில்,   கர்த்தருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் கிறிஸ்துவுக்குள் நல்ல போர்ச் சேவகர்களாய்  காணப்படக் கர்த்தர் உங்கள் ஒவ்வொருவருக்கும் கிருபை பாராட்டுவாராக.      

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *