இதோ, தேசமனைத்துக்கும், யூதாவின் ராஜாக்களுக்கும், அதின் பிரபுக்களுக்கும், அதின் ஆசாரியர்களுக்கும், தேசத்தின் ஜனங்களுக்கும் எதிராக நான் உன்னை இன்றையதினம் அரணிப்பான பட்டணமும், இரும்புத்தூணும், வெண்கல அலங்கமும் ஆக்கினேன் (எரேமியா 1:18).
உலகத்தில் அனேக சுவர்கள் கட்டப்பட்டது, பெர்லின் சுவர் மேற்கு ஜெர்மனியின் மக்களையும் கிழக்கு ஜெர்மனியின் மக்களையும் பிரிப்பதற்காகக் கட்டப்பட்டது. சீனாவின் வடபகுதியிலிருந்து ஊடுருபவர்களைத் தடுப்பதற்காகச் சீனா பெருஞ்சுவர் கட்டப்பட்டது. தேவன் தன்னுடைய ஜனங்களையும், சபைகளையும் பாதாள வல்லமைகளிடத்திலிருந்தும், துஷ்ட மனிதர்களிடத்திலிருந்தும் பாதுகாப்பாதற்கு அக்கினியினால் மதிலைக் கட்டுகிறார் என்று சகரியா 2:5ல் எழுதப்பட்டிருக்கிறது. எரேமியாவை கர்த்தர் அரணிப்பான பட்டணமும், இரும்புத்தூணும், வெண்கல அலங்கமும் ஆக்கினேன் என்றார். அவனுக்கு விரோதமாக அனேகர் யுத்தம் பண்ணினார்கள், ஆனாலும் கர்த்தர் அவனுடைய வெண்கல அலங்கமாக இருந்ததினால், அவனை மேற்கொள்ளமுடியவில்லை. அதுபோல அவனும் யூதா ஜனங்களுடைய மதிலாய் நின்றான்.
நெகேமியாவின் நாட்களில் எருசலேமைச் சுற்றிலும் காணப்பட்ட அலங்கம் இடிந்து போனதின் நிமித்தம், பட்டணத்தின் ஜனங்கள் சிறுமை அடைந்தார்கள். ஆகையால் ஐம்பத்திரண்டு நாட்களில் அதின் அலங்கத்தை எடுத்துக் கட்டினான். கீழ் தேசத்தின் குடிகள் சாதி, மதம், மொழி என்று பலவிதங்களில் பிரிந்து காணப்படுகிறார்கள். மேலை நாடுகளில் கறுப்பு, வெள்ளை என்று உடலின் தோற்றத்தை வைத்துப் பிரிந்திருக்கிறார்கள். பொருளாதார ரீதியில் ஐசுவரிய வான், தரித்திரன் என்ற பிரிவினைகள் அனேகம் காணப்படுகிறது. தன்குடிகளை இணைக்க வேண்டிய அரசாங்கங்கள், சுய லாபத்திற்காகப் பிரிவினைகளைத் தூண்டுகிறது. சபை விசுவாசிகளுக்குள் பலவிதமான பிரிவினைகளும், உபதேச மாறுபாடுகளும் காணப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கர்த்தருடைய ஜனங்கள் நாம் மதிலாகக் காணப்படும் படிக்குக் கர்த்தர் அழைக்கிறார். நீங்கள் வெண்கல அலங்கங்களாகக் காணப்பட்டு உங்களையும், உங்களைச் சுற்றிக் காணப்படுகிற ஜனங்களையும் பாதுகாக்கிறவர்களாகக் காணப்படவேண்டும்.
அலங்கங்கள் இல்லையென்றால் எதிரி எளிதாக நுழைந்துவிடுவான், ஜனங்களைப் பாதாளம் வாரிக்கொண்டுவிடும். அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியை செய்கிறது, ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படு முன்னே அது வெளிப்படாது. நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான் என்று 2 தெச. 2:7, 8ல் எழுதப்பட்டிருக்கிறது. பிசாசின் கிரியைகள் முழுவதுமாய் செயல்படாதபடிக்கு இப்பொழுது தடைசெய்கிறவர் கர்த்தருடைய ஆவியானவர். அவருடைய வல்லமையால் நிறைந்த சபையும், விசுவாசிகளும் பிசாசின் கிரியைகளைத் தடைசெய்கிற மதில்களாகக் காணப்படுகிறோம். நீங்கள் பூமிக்கு உப்பாகவும், உலகத்திற்கு வெளிச்சமாகவும் காணப்படுவதினால் தான் உலகம் நிலைநிற்கிறது. உங்கள் சபை மக்களுக்கும், தேசத்தின் குடிகளுக்கும் நீங்கள் அலங்கமாகக் காணப்படுகிறீர்கள். கப்பல் சேதத்தில் பவுலும் அவனோடு பிரயாணம் செய்தவர்களும் காணப்பட்ட வேளையில், பவுல் அவர்கள் நடுவிலே நின்று, மனுஷரே, இந்த வருத்தமும் சேதமும் வராதபடிக்கு என் சொல்லைக்கேட்டு, கிரேத்தாதீவை விட்டுப்புறப்படாமல் இருக்கவேண்டியதாயிருந்தது என்றான். ஆகிலும், திடமனதாயிருங்களென்று இப்பொழுது உங்களுக்குத் தைரியஞ்சொல்லுகிறேன். கப்பற்சேதமேயல்லாமல் உங்களில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது. ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்துநின்று, பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்குமுன்பாக நிற்கவேண்டும். இதோ, உன்னுடனே கூட யாத்திரை பண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவு பண்ணினார் என்றான். பவுலின் நிமித்தம் கப்பலில் காணப்பட்ட அத்தனை பேரையும் கர்த்தர் பாதுகாத்தார். உத்தமமாய் கர்த்தரை சேவிக்கிற நீங்கள் மதிலாய் நிற்கும் போது, உங்களையும், உங்களைச் சுற்றிக் காணப்படுகிறவர்களையும் கர்த்தர் பாதுகாத்து, அழிவிலிருந்து தப்புவிப்பார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar