நான் உன்னைக் காவற்காரனாக வைத்தேன்.

மனுபுத்திரனே,     நான் உன்னை  இஸ்ரவேல்  வம்சத்தாருக்குக்  காவற்காரனாக வைத்தேன், ஆகையால் நீ என் வாயினாலே வார்த்தையைக்கேட்டு,     என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக (எசேக்கியேல் 33:7).

காவற்காரன் வரப்போகிற ஆபத்துகளை முன்னறிந்து,     எக்காளம் ஊதி ஜனங்களை எச்சரித்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.  எசேக்கியேலை  அப்படிப்பட்ட ஒரு  ஊழியத்திற்காகக் கர்த்தர் தெரிந்தெடுத்தார்.  யூதாவின் ஜனங்கள் பாபிலோனில் அடிமைகளாகக் காணப்பட்ட வேளையில் அவர்களுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்து அவர்களை எச்சரிக்குப்படிக்குக் கர்த்தர் அவனை நியமித்தார்.   மனுபுத்திரனே,     எனக்கு விரோதமாய் எழும்பின கலகக்கார ஜாதியாகிய இஸ்ரவேல் புத்திரரிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்,     அவர்களும் அவர்கள் பிதாக்களும் இந்நாள்வரைக்கும் எனக்கு விரோதமாய்த் துரோகஞ்செய்தார்கள். அவர்கள் கடின முகமும்  முரட்டாட்ட இருதயமுள்ள புத்திரர்,     அவர்களிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்,     கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல்லி. கலகவீட்டாராகிய அவர்கள் கேட்டாலும் சரி,     கேளாவிட்டாலும் சரி,     தங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசி உண்டென்கிறதை அவர்கள் அறியவேண்டும் (எசே. 2:3-5) என்று கர்த்தர் உரைத்தார். பாபிலோனில் அடிமைகளாகக் காணப்பட்டாலும்  யூதாவின் ஜனங்களுடைய பாவப் பழக்கவழக்கங்கள் இன்னும் மாறவில்லை. நாமும்  கூட இந்நாட்களில் தேசத்தின் குடிகளுக்கு காவற்காரராகக் காணப்படுகிறோம். திறப்பிலே நின்று ஜெபித்து வரப்போகிற அழிவிலிருந்து ஜனங்களைப் பாதுகாக்க வேண்டும். காவற்காரர்களாய் தங்களைப் பிரபலப்படுத்துகிறவர்கள் கூட கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டு வெளிப்படுத்த வேண்டுமே ஒழியச் சகோதரர்களைக் குற்றப்படுத்துகிறவர்களாகக் காணப்படக் கூடாது. காயீன்,     என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்று ஆண்டவரிடம் கேட்டான். அவனைப் போலக் கர்த்தருடைய ஜனங்கள் கரிசனையற்றவர்களாக் காணப்படலாகாது. 

காவற்காரர்கள் தேசத்தின் மேல் பட்டயமும்,     ஆபத்துகளும் வரும் போது எக்காளம் ஊதி ஜனங்களை எச்சரிக்க வேண்டும். எச்சரிப்பின் சத்தத்தை ஜனங்கள் கேட்டாலும் சரி,     கேளாவிட்டாலும் சரி,     எச்சரிப்பது தங்கள் கடமை என்று உணர்ந்து அப்பணியைச் செய்யவேண்டும். எச்சரிப்பின் சத்தத்தைக் கேட்டும் ஜனங்கள் செவிசாய்க்காமல் காணப்பட்டால் அவர்கள் இரத்தப்பழி அவர்கள் தலையின் மேல் சுமரும்.  பட்டயமும் அழிவும் வருவதைக் கண்டும் காவற்காரன் எக்காளம் ஊதி எச்சரிக்காவிட்டால் ஜனங்களுடைய இரத்தப்பழியை இவனிடம் கர்த்தர் கேட்பார். அதுபோல துன்மார்க்கனை நீ எச்சரித்தும் அவன் தன் பொல்லாத வழியை விட்டு விலகவில்லையென்றால்,     அவன் இரத்தப் பழி அவன் தலையின் மேலிருக்கும். காவற்காரர்கள்  எச்சரிக்கவில்லையென்றால்  அவர்களுடைய இரத்தப்பழியைக் கர்த்தர் உங்களிடத்தில் கேட்பார். எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்,     தகப்பனின் ஆத்துமா எப்படியோ,     அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது (எசே. 18:4) என்று ஆண்டவர் கூறினார். எல்லாரும் அவருடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டவர்கள். கர்த்தர் துன்மார்க்கனுடைய மரணத்தைக் கூட விரும்பாமல்,     அவன் மனந்திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறார். 

கர்த்தருடைய பிள்ளைகளே,     அழிவுகள் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகிறது. அணு ஆயுத யுத்தம் எப்பொழுது வரும் என்று தெரியாத சூழ்நிலை எங்கும் காணப்படுகிறது. சபைகளில் அருவருப்புகள் காணப்படுகிறது. தெரிந்து கொள்ளப் பட்ட ஜனங்கள் கூட வஞ்சிக்கப்படுகிறார்கள். சத்துரு கவர்ச்சிகளைக் காட்டி நல்ல விசுவாசிகளைக் கூட திசை திருப்புகிறான். எலியாவின் சு10ரைச் செடியின் அனுபவம்,     சோர்வுகள் இந்நாட்களில் காணப்படுகிற ஊழியர்களையும் பிடித்திருக்கிறது. பக்தியுள்ளவனும்  உண்மையுள்ளவனும் மனுப்புத்திரரில் குறைந்திருக்கிறார்கள். சத்துரு தனக்குக் கொஞ்சக் காலம் உண்டு என்பதையறிந்து துரிதமாகச் செயல்படுகிறான். கர்த்தரால் நியமிக்கப்பட்ட காவற்காரர்கள்,     எக்காளத்தை ஊதி,     ஜனங்களை எச்சரித்து,     ஒவ்வொருவரையும் தேவனுடைய சித்தத்தின் மையத்தில் வைத்துப் பாதுகாக்கவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.  

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *