என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள், எருசலேமுடன் பட்சமாய்ப்பேசி, அதின் போர் முடிந்தது என்று அதற்குக் கூறுங்கள் (ஏசாயா 40: 1, 2).
தேவன் நம்மோடு பட்சமாகவும், ஆறுதலாகவும் பேசி நம்மைத் தேற்றுகிறவர். ஆவியானவருக்கு இன்னொரு பெயர் தேற்றரவாளன் என்பதாகும். அவருடைய ஆறுதலின் பிரசன்னம் நம் எல்லா சூழ்நிலைகளிலும் நம்மை ஆறுதல் படுத்துவதற்கும் தேற்றுவதற்கும் போதுமானதாக காணப்படுகிறது. கடினமான சூழ்நிலைகளில் நாம் கடந்து செல்லும் போது யாராகிலும் நம்மைத் தேற்றுவார்களா என்றும் ஆறுதலான வார்த்தைகளைப் பேசுவார்களா என்றும் நாம் எதிர்பார்ப்பது உண்டு. யாக்கோபு மரித்துப் போன வேளையில், அவனுடைய குமாரர்கள் யோசேப்பு பழிவாங்கி விடுவான் என்று பயந்து அவன் பாதத்தில் வந்து விழுந்து பணிந்து, நாங்கள் உன் அடிமைகள் என்றார்கள். அந்த வேளையில், யோசேப்பு அவர்களை நோக்கி, பயப்படாதிருங்கள், நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள், தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும் படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார். ஆதலால், பயப்படாதிருங்கள், நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் என்று, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களோடே பட்சமாய்ப் பேசினான். அவன் உயிரோடிருந்த நாட்களிலெல்லாம் அவர்களோடு பட்சமாகவும், அவர்களைப் பராமரிக்கிறவனாகவும் காணப்பட்டான். பரலோக யோசேப்பாகிய இயேசுவும் கூட நம்மோடு பட்சமாகவும், ஆறுதலாகவும் பேசுகிறவர்.
மோவாபிய ஸ்திரீயாகி ரூத் பெத்லெகேமில் வந்த பின்பு, போவாஸ் அவளோடு பட்சமாய் பேசி, மகளே, கேள், பொறுக்கிக்கொள்ள வேறே வயலில் போகாமலும், இவ்விடத்தைவிட்டுப் போகாமலும், இங்கே என் ஊழியக்காரப் பெண்களோடு கூடவே இரு. அவர்கள் அறுப்பறுக்கும் வயலை நீ பார்த்து, அவர்கள் பிறகே போ, ஒருவரும் உன்னைத் தொடாதபடிக்கு, வேலைக்காரருக்குக் கட்டளையிட்டிருக்கிறேன். உனக்குத் தாகம் எடுத்தால், தண்ணீர்க்குடங்களண்டைக்குப் போய், வேலைக்காரர் மொண்டுகொண்டு வருகிறதிலே குடிக்கலாம் என்றான். அதற்கு ரூத், நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயைகிடைத்தது, நான் உம்முடைய வேலைக்காரிகளில் ஒருத்திக்கும் சமானமாயிராவிட்டாலும், நீர் எனக்கு ஆறுதல் சொல்லி உம்முடைய அடியாளோடே பட்சமாய்ப் பேசினீரே என்றாள். ஒரு தேசத்திலிருந்து தன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை விட்டு இன்னொரு தேசத்தில் வந்த ரூத்திற்கு போவாசின் வார்த்தைகள் ஆறுதலாகவும் தேறுதலாகவும் பாதுகாப்பாகவும் காணப்பட்டது.
கர்த்தருடைய பிள்ளைகளே, உலகத்தின் குடிகள் ஒரு ஆறுதலின் வார்த்ததைக்காக காத்திருக்கிறார்கள். பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு, ஆனால் ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஔஷதம் என்று நீதிமொழிகள் கூறுகிறது. சிலருடைய வாயின் வார்த்தைகள் பட்டயக் குத்துகளைக் காட்டிலும் வேதனையைத் தரும். ஆனால் சிலருடைய வார்த்தைகள் ஔஷதம் என்று அர்த்தம் கொள்ளும் நல்மருந்தாக காணப்படும். நாம் எப்படிப்பட்ட வார்த்தைகளைப் பேசுகிறோம். நம்முடைய வார்த்தைகள் மற்றவர்களைக் குத்திக் கிழிக்கிற, இடித்துத் தள்ளுகிற, பிரிவினைகளை உண்டாக்குகிற, வார்த்தைகளாகக் காணப்பட வேண்டாம், அதற்குப் பதிலாக ஆரோக்கியத்தையும், சமாதானத்தையும், சந்தோஷத்தையும், ஐக்கியத்தையும் கொண்டுவருகிற வார்த்தைகளாகக் காணட்டும். அப்படிப்பட்ட கிருபைகளைக் கர்த்தர் நம் ஒவ்வொருவருக்கும் தந்தருளுவாராக.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar