கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது:-

யோவே 3:14. நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே ஜனங்கள் திரள்திரளாய் இருக்கிறார்கள்; நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது.

காண்கிற, கேட்கிற செய்திகளை பார்க்கும்போதும் கேட்கும்போதும் கர்த்தருடைய நாள் சமீபமாய் இருக்கிறது என்று நாம் காண்கிறோம். கடைசி காலத்தில் சம்பவிக்கப்போகும் அடையாளங்கள் அனைத்தும் நிறைவேறி கொண்டிருக்கின்றன. இப்படியிருக்க நம்மில் சிலர் நாம் நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கில் நிற்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் இருக்கலாகாது. ஒரு கிறிஸ்துவ வாலிபன் சொன்னான் எனக்கு இப்பொழுது வயது வெறும் முப்பந்தைந்து தான் ஆகிறது, ஆகையால் நான் ஒரு ஐம்பது வயதை எட்டும்போது சபைக்கு வருகிறேன், இயேசுவுக்காக ஏதாகிலும் செய்ய முடியுமா என்று அப்பொழுது பாப்போம் என்று சொன்னான். மற்றொருவன் சொன்னான் நான் நண்பர்களுடன் இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது ஆன்லைனில் ஆராதனை பார்க்கிறேன் என்று சொன்னான். ஒரு கிறிஸ்துவ குடும்பத்தினர் சொன்னார்கள் நாங்கள் நல்ல வேலையில் இருக்கிறோம், நல்ல சொத்து இருக்கிறது ஆகையால் எங்களுக்கு இனி ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்லி தங்கள் மனம் போன போக்கில் சபைக்கு வருவதும், போவதுமாக இருந்தார்கள். இப்படிப்பட்ட ஜனங்கள் திரளாய் இருக்குப்பத்தை நாம் பார்க்கமுடிகிறது.

மேற்குறிப்பிட்ட வசனம் சொல்லுகிறது நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே ஜனங்கள் திரள்திரளாய் இருக்கிறார்கள் என்று. கோடி கோடியாக ஜனங்கள் ஒரு பள்ளத்தாக்கில் இருக்கிறார்கள். அந்த பள்ளத்தாக்கிற்கு நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கு என்று பெயர். அதில் நாம், நம்முடைய ஜனங்கள் இயேசுவை சந்திக்க என்ன செய்ய வேண்டும் என்று யோவேல் தீர்க்கதரிசி மூலமாக கர்த்தர் சொல்லுகிறார், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்; மூப்பரையும் தேசத்தின் எல்லாக்குடிகளையும், உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கூடிவரச்செய்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள் (யோவே 1:14) என்பதாக.

எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது (ஏசா 60:1) என்று வசனம் சொல்லுகிறது. நாம் எல்லாரும் எழும்பி பிரகாசிக்கிற நாட்கள். மார்ட்டின் லூதர் இப்படியாக சொல்லுவார் நாம் ஒவ்வொரு நாளும் பறக்க வேண்டும், பறக்க முடியவில்லை என்றால் ஓட வேண்டும், ஓட முடியவில்லை என்றால் நடக்க வேண்டும். ஆக, எப்படியாவது அடுத்த கட்டத்திற்கு கடந்து கொண்டிருக்க வேண்டும். இருக்கும் சூழ்நிலையில் திருப்தி கண்டுகொள்ள கூடாது என்று அவர் சொல்லுவார். இப்படியாக தான், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒவ்வொருநாளும் நாம் வளர்ச்சி அடைய வேண்டும், ஒவ்வொருநாளும் இயேசுவை போல மாற வேண்டும், ஒவ்வொருநாளும் நம்முடைய தவறை திருத்தி பரிசுத்த வாழ்க்கை வாழவேண்டும், ஒவ்வொருநாளும் வேத வாசிப்பும், ஜெபம் செய்வதும் குறைய கூடாது. அப்படி இருப்போமென்றால், கர்த்தருடைய நாளில் நாம் அனைவரும் மணவாளனை சந்திக்க அவரை எதிர்கொள்ளுவோம்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *