என்னை விருந்து சாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார், என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே (உன். 2:4).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/JIhP8rr29h0
சாலொமோன் முவாயிரம் நீதிமொழிகளையும், ஆயிரத்தியைந்து பாடல்களையும் எழுதினான், அவன் எழுதிய பாடல்களின் கடைசி ஐந்து பாடல்களும் உன்னதப் பாட்டாகக் காணப்படுகிறது. மணவாளனாகிய இயேசுவுக்கும், மணவாட்டி சபைக்கும் இடையே காணப்படுகிற ஆழமான அன்பைக் குறித்து இப்பாடல்கள் விளக்குகிறது. உன்னதப்பாட்டை ஆவிக்குரிய கண்களோடு நாம் வாசிக்கும் போது, ஆண்டவரின் அன்பின் மேன்மையைப் புரிந்து கொள்ளமுடியும். மணவாளன் தன்னை விருந்து சாலைக்கு அழைத்துக் கொண்டு சென்றார் என்று மணவாட்டி கூறுகிறதைக் குறித்து மேற்குறிப்பிட்ட வசனத்தில் எழுதப்பட்டிருக்கிறது. விருந்து சாலை என்பது திராட்சை ரசம் காணப்படுகிற இடம் என்பது அதின் அர்த்தம். திராட்சை ரசம் மனிதனின் இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் என்று சங்.104:15 கூறுகிறது. ஆக விருந்து சாலை என்பது மகிழ்ச்சியின் இடமாகும். பூமியில் கர்த்தருடைய சபை, நேசர் இயேசுவின் விருந்து சாலையாகக் காணப்படுகிறது. என் ஜெபவீட்டில் உங்களை அழைத்துக் கொண்டு வந்து மகிழப்பண்ணுவேன் என்பது கர்த்தருடைய வாக்கு. சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணுகிற இடம் இன்பமானது.
மணவாட்டியை அழைத்துக்கொண்டு போனார் என்று மேற்குறிப்பிட்ட வசனம் சொல்லுகிறது. நம்மை விருந்து சாலையாகிய சபைக்கு அழைத்துக் கொண்டு செல்லுகிறவர் இயேசு. கர்த்தருடைய பிள்ளைகளே, ஒருவனைக் கர்த்தர் இழுத்துக் கொள்ளாவிட்டால் யாரும் அவரண்டை வரமுடியாது. உலகத்தில் பெரிய தலைவர்கள் வரும் போது அவர்களை அழைத்துக் கொண்டு செல்வதற்குப் பல அரசாங்க நெறிமுறைகள் காணப்படுகிறது. அதற்கு மேலாக நம்மைக் கனம் பண்ணி இயேசுவே நம்மைச் சபைக்கு அழைத்துச் செல்லுகிறார், எவ்வளவு பெரிய பாக்கியம்! ஆகையால் தான் சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறது போல நீங்கள் விட்டுவிடாதிருங்கள், ஒருவரையொருவர் கவனித்து, புத்தி சொல்லி, உற்சாகப் படுத்துங்கள் என்று வேதம் கூறுகிறது. சபை பலவீனப்பட்டவர்களுக்கு நல்ல மருத்துவ சாலை, கற்றுக்கொள்ளுகிறவர்களுக்கு நல்ல வழிகளைக் கற்றுக்கொடுக்கிற பாடசாலை, ஆவிக்குரிய ஓட்டத்தைச் செம்மையாய் ஓடவேண்டும் என்பவர்களுக்கு நல்ல பந்தயச்சாலையாகக் காணப்படுகிறது.
இயேசுவின் அழைப்பை ஏற்று, அவரோடு விருந்து சாலைக்குள்ளே கடந்து வரும் போது, அவருடைய நேசக் கொடி உங்கள் மேல் பறக்கும். அது அவருடைய நேசத்தின் உன்னத வெளிப்பாடாகக் காணப்படுகிறது. ஒருவன் தன் சினேகிதருக்காக தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை, நான் உங்களை சினேகிதன் என்றேன் என்றார். கல்வாரிச் சிலுவையில் வெளிப்பட்ட அந்த அன்பின் அகலத்தையும், ஆழத்தையும், நீளத்தையும் உணர்ந்து நன்றியுள்ள இருதயத்தோடு சபைக்குக் கடந்து வாருங்கள். அப்போது ஆலயத்தின் சகலவிதமான சம்பூரணத்தினால் உங்களைத் திருப்தியாய் ஆசீர்வதித்து மேன்மைப் படுத்தி மகிழப்பண்ணுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar