For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/_H4eKSjIAMA
வெளி 1:4,5 – யோவான் ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும், உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
யோவான் முதலாவது ஏழு சபைகளுக்கும் சொல்லும்போது உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக என்ற ஜெபத்துடன் துவங்குகிறார். காரணம் இயேசு சபைகளின் நடுவில் வாசம் செய்கிறவர். ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரை கண்டேன் என்று யோவான் சொல்லுகிறான். ஏழு குத்துவிளக்கு என்பது ஏழு சபைகளை குறிக்கிறது. அந்த ஏழு சபை ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களில் உள்ளது. அந்நாட்களில் ஆசிய என்ற கண்டம் இல்லை. அது இன்று இருக்கிற துருக்கி தேசத்தை குறிக்கிறது. அதை தான் ஆசிய மைனர் என்று அழைக்கிறோம். இந்த ஏழு சபைகளும் துருக்கி தேசத்தின் மேற்கு பகுதியில் சுமார் 50 மைல் தூரத்தில் ஒவ்வொரு சபையும் காணப்படுகிறது. இன்று உலகத்தில் இருக்கும் எல்லா சபைகளும் இந்த ஏழு சபைகளில் இருந்த சுபாவத்தை போல செயல்படுகிறதை நாம் காண்கிறோம்.
ஆண்டவர் சொல்லுகிறார் எல்லா சபைகளுக்கும் அதாவது உங்கள் அனைவருக்கும் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. இந்த இரண்டும் நம் அனைவருக்கும் தேவன் கொடுத்த மிக பெரிய ஈவாக காணப்படுகிறது.
பழைய ஏற்பாட்டில் கிருபை என்ற வார்த்தை அதிகமாய் இல்லை. ஆனால் புதிய ஏற்பாட்டில் கிருபை என்ற வார்த்தை அநேக இடங்களில் காணப்படுவதை நாம் வேதத்தை வாசிக்கும்போது அறிந்துகொள்ளுகிறோம். கிருபை என்பது தகுதி இல்லாத நமக்கு தேவன் கொடுக்கிற மிகப்பெரிய இரக்கமாய் காணப்படுகிறது. இயேசுவின் கிருபை இல்லையென்றால் என்றோ நாம் அனைவரும் ஒன்றும் இல்லாமல் ஆகியிருப்போம். ஆனால் இன்று நாம் நிற்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும் கர்த்தருடைய கிருபையாய் காணப்படுகிறது.
அடுத்ததாக இயேசு அவருடைய சமாதானத்தையே நமக்கு கொடுத்து சென்றிருக்கிறார். சமாதானம் தான் உலகத்திலுள்ள எல்லா ஆசிர்வாதங்களிலும் மேலானது. என் ஜனங்கள் சமாதான தாபரங்களில் குடியிருக்கும் என்றும், உன் அலங்கத்திற்குள்ளே சமாதானம் இருக்கும் என்றும் கர்த்தர் சொன்னார். நாம் வாழ்ந்திருக்கும் போதும், தாழ்ந்திருக்கும்போதும் கர்த்தருடைய சமாதானம் நம் அனைவருக்கும் ஆறுதலாக இருக்கும். இயேசு கொடுக்கும் சமாதானம் உலகம் கொடுக்க கூடாத சமாதானம் என்று வசனம் சொல்லுகிறது. ஆகையால் நம் ஒவ்வொருவருக்கும் இயேசு கிருபையும் சமாதானத்தையும் கொடுத்திருப்பது மிகப்பெரிய ஆசிர்வாதமாய் காணப்படுகிறது.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org