For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/fih-S8e7ck4
வெளி 2:7. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.
எபேசு சபைக்கு இருந்த நல்ல குணாதிசயங்களை ஆண்டவர் மெச்சிக்கொண்டார். முதலாவது ஆண்டவர் சொல்லுகிறார் உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன். பூமியெங்கும் சுற்றி உலாவுகிற ஏழு கண்களை உடையவர், நம்முடைய நல்ல கிரியைகளை கண்டு மெச்சிக்கொள்ளுவார். உலகத்தில் அநேகர் இவனிடம் என்ன குறைகள் இருக்கிறது, இவனை எப்படி விழத்தள்ளலாம் என்றே பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் நம் கர்த்தர் நம்முடைய நல்ல கிரியைகளை பார்க்கிறார். கர்த்தருக்காக எவ்வளவு உத்தமமாக பணி செய்கிறோம் என்பதை பார்க்கிறார். உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்; நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். இன்று அநேகர் தங்களை அப்போஸ்தலர்கள் என்று காட்ட நினைக்கிறார்கள், தங்கள் பெயருக்கு முன்பாக அப்போஸ்தலர்கள் என்று போட்டு கொள்ள எல்லாவித பிரயாசமும் எடுக்கிறார்கள். ஆனால் நாம் யார் சரியான அப்போஸ்தலர்கள், யார் பொய்யான அப்போஸ்தலர்கள் என்பதை எபேசு சபை ஜனங்களை போல அறிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் அவர்களிடம் இருந்த பெரிய குறை ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டார்கள். இன்று நம்மிலும் இந்த குறையை கர்த்தர் காண்கிறார். இரட்சிக்கப்பட்ட நாட்களில் இயேசுவுக்காக வைராக்கியமாக இருந்த அன்பு இன்று அநேகரிடத்தில் குறைந்துவிட்டது. நமக்குள்ளாக எப்பொழுதும் இரண்டுவகையான அன்பு காணப்பட வேண்டும். ஒன்று நமக்காக ஜீவபலியாக ஒப்புக்கொடுத்த இயேசுவின் மீது அன்பு காணப்பட வேண்டும். அநேகர் சொல்லுவார்கள் நான் இயேசுவின் மீது அன்பாக தான் இருக்கிறேன் என்று. ஆனால் அதை கிரியைகளில் காண்பிக்கமாட்டார்கள். உலகத்திலுள்ள மனைவியை கணவன் நேசிக்கிறான் என்பதை காண்பிக்க தன் மனைவிக்கு பிடித்த ஆடை, அலங்கார பொருட்கள் போன்றவற்றை வாங்கிக்கொடுப்பதுண்டு. அந்நாட்களில் மனைவிக்கு அல்வா, மல்லிகை பூ போன்றவற்றை வாங்கி கொடுத்து, தன் நேசத்தை கிரியைகள் மூலம் கணவன் காண்பிப்பான். அடுத்த தலைமுறை, வாழ்த்து மடல்களை வாங்கி கொடுத்து தன் நேசத்தை வெளிப்படுத்தினார்கள். அதுபோல தான் நம் இயேசுவின் மீது அன்பு கூறுகிறோம் என்று சொன்னால், நாம் கிரியைகளில் காண்பிக்க வேண்டும்; அவர் நமக்கு கொடுத்த பிரதான கட்டளையை நிறைவேற்றவேண்டும். சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் சுவிசேஷத்தை பிரசங்கிக்க வேண்டும். தேவ இராஜ்ஜியத்தை கட்ட நாம் ஏதாவது ஒரு வகையில் செயல்பட்ட ஆக வேண்டும். அது தான் நாம் அவர் மீது செலுத்தும் அன்பை வெளிப்படுத்துகிறது. அடுத்ததாக நம் மூலம் உலகத்தின் ஜனங்கள் இயேசுவின் அன்பை காண வேண்டும். எல்லா ஜனங்களையும் நேசிக்க வேண்டும்.
அப்படி இருப்போமென்றால், கர்த்தர் சொல்லுகிறார் நீங்கள் ஜெயம்பெற்றவர்கள். உங்களுக்கு நான், ஆதாம் இழந்துபோன ஜீவ விருட்சத்தின் கனியை கொடுப்பேன் என்று வாக்கு கொடுக்கிறார். ஜீவ விருட்சத்தின் கனி என்பது ஒரு திவ்ய வாழ்க்கையை குறிக்கிறது. நம்முடைய வாழ்க்கை ஜெயமுள்ள வாழ்க்கையாக இருக்கும்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org