எவ்வளவும் பயப்படாதே, உனக்கு ஜீவகிரீடத்தை தருவேன்:-

For audio podcast of this Manna Today, please click the link, https://www.youtube.com/watch?v=bKcICLtB70c

வெளி 2:10. நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.

சிமிர்னா சபைக்கு ஆண்டவர் கொடுக்கிற வாக்குத்தத்தமாய் இந்த வசனம் காணப்படுகிறது. 7 சபைக்கான செய்திகளில் 2 சபைகளில் மாத்திரமே ஆண்டவர் எந்த குறையும் காணவில்லை. அது சிமிர்னா மற்றும் பிலதெல்பியா சபையாகும்.

இந்த சபை மக்களை குறித்து ஆண்டவர் ஒரு குறைவும் சொல்லவில்லை. இந்த சபையில் மூன்று காரியங்கள் இருந்தது. அவர்கள் உபத்திரவப்பட்டார்கள், உலகப்பிரகாரமான தரித்திரம் இருந்தது, மற்றும் விசுவாசிகள் என்று சொல்லிக்கொள்பவர்களால் தூஷிக்கப்பட்டார்கள். நமக்கும் இந்த உலகத்தில் உபத்திரவம் உண்டு. ஆனால் அந்த உபத்திரவம் நிரந்தரமல்ல. ஆண்டவர் இந்த சபைக்கு சொன்னார் பத்து நாள் உபத்திரவப்படுவீர்கள். அதாவது உபத்திரவத்தின் நாட்கள் என்று கால வரம்புகளை நிர்ணயிக்கிறார். சமுத்திரத்தை பார்த்து இம்மட்டும் வா, இதற்கு மிஞ்சி வராதே என்று எல்லை கோட்டை போடுகிறவர் நம் ஆண்டவர். நம்முடைய உபத்திரவத்திற்கும் குறிப்பிட்ட எல்லைக்கோடு உண்டு. ஆகையால் எவ்வளவும் பயப்படாதே என்று ஆண்டவர் சொல்லுகிறார்.

வேதாகமத்தில் அநேக இடங்களில் ஆண்டவர் பயப்படாதிருங்கள், பயப்படாதே என்று சொன்னார். ஆனால் இங்கே கர்த்தர் சொல்லுகிறார் நீ எவ்வளவும் பயப்படாதே. ஒரு மில்லிமீட்டர், ஒரு அங்குலம் கூட பயப்படாதே என்று கர்த்தர் சொல்லி இருப்பதால், நாம் எதை குறித்தும் பயப்படாமல் இயேசுவை பற்றி உலகெங்கும் சொல்ல வேண்டும். இன்று உலகத்தில் பயத்தின் ஆவி அநேகரை கவ்வி கொண்டிருக்கிறது. கிறிஸ்துவ குடும்பங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. இயேசுவை குறித்து சொன்னால் என் வேலை பறி போய்விடுமோ, எனக்கு பதவி உயர்வு வராதோ, என் நண்பர்கள் என்னை கேலி செய்வார்களோ, என் உறவினர்கள் என்னை ஒதுக்கி வைத்துவிடுவார்களோ என்று பயப்படுகிற அநேக கிறிஸ்தவர்கள் உண்டு. இயேசுவையும் ஜனங்கள் பிசாசு பிடித்தவன், கள்ள போதகன், சாத்தானின் அதிகாரத்தை பெற்றவன் என்றெல்லாம் தூஷித்தார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஆண்டவர் சொல்லுகிறார் எவ்வளவும் அதாவது 0% கூட நீ பயப்படாதே. காரணம் உனக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும். ஒரு காலத்தில் பேதுரு பயத்தால் இயேசுவை மறுதலித்தான். பிறகு, எப்பொழுது அவன் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டானோ, பின்பு அவன் எவ்வளவும் பயப்படவில்லை. இனிவரும் நாட்களில் நாம் பயப்படத்தக்க சூழ்நிலைகள் அநேகம் வரலாம். ஆனால் எல்லாவற்றையும் சரியாக கையாண்டு எவ்வளவும் பயப்படாமல் இருக்க தேவ ஜனங்கள் பழக வேண்டும்.

இப்படியாக மரணப்பரியந்தம் சிமிர்னா சபை ஜனங்களை போல நாம் உண்மையாய் இருந்தால், ஜீவகிரீடத்தை கர்த்தர் கொடுப்பதாக வாக்கு கொடுக்கிறார். ஜீவகிரீடத்திற்கு இணையாக நாம் எந்த ஒரு பதவியையும் ஒப்பிட முடியாது. மாத்திரமல்ல, சரீர மரணத்திற்கு பின்பு இரண்டாம் மரணமாகிய அக்கினி கடலுக்கு, ஜெயம்கொள்ளுகிறவர்கள் தள்ளப்படுவதில்லை என்ற வாக்குத்தத்தையும் கர்த்தர் நமக்கு கொடுக்கிறார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *