For audio podcast, of this Manna Today, please click the link, https://www.youtube.com/watch?v=Za5KCH7xjAc
வெளி 2:17 – ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.
பெர்கமு என்ற சபைக்கு ஆவியானவர் கொடுக்கிற வாக்குத்தத்தமாய் இந்த வசனம் காணப்படுகிறது. இந்த சபை மக்களை குறித்து ஆண்டவர் சில காரியங்களில் மெச்சிக்கொள்ளுவார். உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன் என்று சொல்லுகிறார். சாத்தான் வாழ்கிறது இரண்டாம் வானமாக இருந்தாலும், அவனுடைய கிரியைகள் இந்த பூமியில் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. நம்முடைய தேசங்களில் பார்த்தால், எங்கு பார்த்தாலும் நரபலி, சூனியம், மந்திரம், குறிசொல்லுதல், விபச்சாரம், வேசித்தனம், குடிவெறி, யேசபேலின் ஆவிகள் என்று பெருகியிருப்பதை நாம் காண்கிறோம். நமக்குள்ளாக ஒரு கேள்வி எழக்கூடும், இப்படிப்பட்ட தேசத்தில் நாம் கிறிஸ்துவுக்காக உண்மையுள்ளவர்களாக, பரிசுத்தமாக வாழ முடியுமா என்ற கேள்வி எழக்கூடும்.
சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் இருந்தான் என்று பெர்கமு சபையை பார்த்து கர்த்தர் சொல்லுகிறார். அந்திப்பா என்பதற்கு கிரேக்க பதத்தில் யாராக இருந்தாலும் எதிர்ப்பவன் என்று பொருள். இன்று அநேக சபைகளில் சொல்லுவார்கள் எல்லா காரியங்களையும் அரவணைத்து செல்வது தான் நல்லது என்பதாக. இப்படிப்பட்ட சிந்தைகள் இருப்பதால் அநேக இடங்களில் சபைக்குள்ளாக அந்நிய அக்கினி வந்துவிட்டது, சினிமா கலாச்சாரங்கள் வந்துவிட்டது, வேதத்திற்கு ஒவ்வாத பல மனித கருத்துக்கள் நுழைந்திருக்கிறதை பார்க்கமுடிகிறது. இப்படிப்பட்ட காரியங்களை அந்திப்பா என்பவன் எதிர்த்து நின்றான். உண்மையுள்ள சாட்சியாக திகழ்ந்தான். சத்தியத்திற்கு மாறாக என்ன சொன்னாலும், அதனை எதிர்ப்பவனாக காணப்பட்டான். ஆகையால் நாமும் சாத்தான் குடிகொண்டிருந்த இடத்தில இருந்தாலும் உண்மையுள்ள சாட்சியாக கர்த்தருக்காக வாழ முடியும். நம்முடைய வாலிபர்கள் வைராக்கியமாக அந்திப்பவை போல எழும்ப வேண்டும்.
இவர்களிடம் இருந்த குறை விக்கிரகங்களுக்கு படைத்தவைகளை புசிப்பது, வேசித்தனம் பண்ணுவது போன்ற பிலேயாமின் போதனைகளை கைக்கொண்டது. நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தை கைகொள்ளுவது போன்ற காரியங்களும் இருந்தது.
இப்படிப்பட்ட காரியங்களை கைக்கொள்ளாமல், ஒரு ஜெயங்கொள்ளுகிற வாழ்க்கை வாழ வேண்டும் என்று கர்த்தர் விருப்பமுடையவராய் இருக்கிறார். அப்படிப்பட்டவர்களுக்கு கர்த்தர் மறைவான மன்னாவை புசிக்க கொடுப்பார். மாத்திரமல்ல, வேறொருவரும் அறியாத புதிய நாமத்தை கர்த்தர் கொடுப்பார். உலகத்தின் தலைவர்களுக்கு மக்கள் கொடுக்கும் நாமங்கள், தலைவர்கள் தொண்டனுக்கு கொடுக்கும் நாமங்கள் எல்லாம், பரலோகத்தில் ஐந்து பைசாவிற்கு பிரயோஜனமில்லை. மாறாக, கர்த்தர் நமக்கு புதிய நாமத்தை கொடுப்பாரென்றால் , அதுவே மிகப்பெரிய சிலாக்கியமாக காணப்படுகிறது.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org