For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/KlRBxOvIwxs
வெளி 3:5. ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.
சர்தை சபைக்கு ஆவியானவர் மூன்று முக்கியமான வாக்குத்தத்தங்களை கொடுக்கிறார். அதே வாக்குத்தத்ததை கர்த்தர் நமக்கும் கொடுக்கிறார்.
ஜெயங்கொள்ளுகிற நமக்கு முதலாவது வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும். உலகத்தில் பலர் பலவருணமான ஆடைகளை அணியவேண்டும், பெண்கள் மிக உயரிய காஞ்சிபுரம் பட்டு சேலை வாங்கி அணிய வேண்டும், ஆண்கள் நல்ல மதிப்புள்ள சட்டை (brand shirt) வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஒரு அரசியல்வாதி அவருக்கான ஆடையை பத்து கோடிக்கு வாங்கினாராம். இப்படியிருக்க, தேவபிள்ளைகளாகிய நாம் ஆண்டவர் நமக்கு கொடுக்கும் வெண்வஸ்திரத்தை வாஞ்சிக்கிறவர்களாக இருக்க வேண்டும். ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார் (லுக் 21:36) என்ற வசனத்திற்கு கீழ்ப்படிந்திருப்பவர்களுக்கே வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும். அப்படிப்பட்டவர்களே ஆட்டுக்குட்டியானவரின் மணநாளில், மணவாட்டிக்குரிய வெண்வஸ்திரத்தை தரித்து நிற்பார்கள்.
இரண்டாவதாக, ஜீவபுஸ்தகத்திலிருந்து நம்முடைய நாமம் கிறுக்கிப்போடப்படுவதில்லை. அப்படியென்றால் ஏற்கெனவே ஜீவபுஸ்தகத்தில் இடம்பெற்ற பெயர்கள் கிறுக்கிப்போடவும் வாய்ப்பு உண்டு என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். வசனம் சொல்லுகிறது ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம் (எபி 6:4-6) என்பதாக. கர்த்தர் மோசேயிடம் சொல்லுவார் எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன் (யாத் 32:33). இப்படியிருக்க, முடிவு சம்பூரணமாயிருக்கும்படி, கடைசிமட்டும் நம்முடைய பெயர் ஜீவபுஸ்தகத்தில் இருக்கும்படியான வாழ்க்கை வாழ வேண்டும்.
மூன்றாவதாக, பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் நம்முடைய நாமத்தை அறிக்கையிடுவார். வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் (யூதா வச 4) இயேசு ஆவலுள்ளவராய் இருக்கிறார். சுமார் பத்து நபர்களுக்கு முன்பாக நம்முடைய பெயரை குறிப்பிட்டு யாரவது சொன்னாலோ கனப்படுத்தினாலோ, இன்றைய நாட்களில் அதை மிகுந்த மகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விளம்பப்படுத்திக்கொள்ளுவார்கள். இவைகளை காட்டிலும் மேலாக இயேசு நம்முடைய நாமத்தை பிதா முன்பாகவும் தூதர் முன்பாகவும் அறிக்கையிடுவார் என்றால் அதை காட்டிலும் சந்தோசம் வேறென்ன நமக்கு வேண்டும்.
இந்த வாக்குத்தத்ததை சுதந்திரிக்க உங்கள் வஸ்திரங்களை அதாவது உங்கள் குணாதிசியங்களை, உங்கள் சரீரங்களை, உங்கள் நடக்கைகளை அசுசிப்படுத்தாமல் காத்துக்கொள்ளுங்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

