மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார், நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம் (ஏசாயா 53:4).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Lw1A8YS-g2w
இயேசுவின் சிலுவை மரணத்தைக் குறித்து, அது சம்பவிப்பதற்கு சுமார் எழுநூறு வருடங்களுக்கு முன்பு ஏசாயா தீர்க்கத்தரிசி கர்த்தருடைய ஆவியினால் ஏவப்பட்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்து தீர்ப்பதற்காக, மேசியா கல்வாரிச் சிலுவையில் ஜீவனைக் கொடுப்பார் என்று எழுதினார். துக்கம் என்று அந்த இடத்தில் எழுதப்பட்ட எபிரேய வார்த்தைக்கு நோய்கள் என்று அர்த்தம். ஆகையால்தான் மத்தேயு 8:17ல் இயேசு தாமே நம்முடைய பலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது என்று எழுதப்பட்டிருக்கிறது. இயேசு பிசாசு பிடித்திருந்த அநேகரை தமது வார்த்தையினாலே துரத்தி, பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கின வேளையில் அந்த வார்த்தை நிறைவேறிற்று. அவரிடத்தில் வந்த அத்தனை பிணி யாளிகளையும் கர்த்தர் விடுவித்தார். கர்த்தருடைய பிள்ளைகளே! இயேசு நம்முடைய பாடுகளையும், துக்கங்களையும், அவருடைய பாடுகளாகவும், துக்கங்களாகவும் கருதி, கல்வாரிச் சிலுவையில் அவைகளைச் சுமந்து, நமக்கு விடுதலையைக் கொடுத்திருக்கிறார். ஆகையால் நாம் அவைகளை இனி சுமக்க வேண்டியதில்லை. இயேசுவின் மேல் விசுவாசத்தை வைக்கும் போது அவர் உங்களை நோய்களிலிருந்து விடுவித்து மகிழப்பண்ணுவார்.
அன்னாளுடைய கர்ப்பத்தைக் கர்த்தர் அடைத்திருந்தார், ஆகையால் அவளுக்குப் பிள்ளைகள் இல்லாதிருந்தது. அவளுடைய சக்களத்தி பெனின்னாள் அதையே காரணமாக வைத்து அன்னாளை மனமடிவாக்கி துக்கப்படுத்துவாள். வருஷந்தோறும் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகும் சமயத்தில், அந்தப்பிரகாரமாய் அவள் செய்கிறவளாகக் காணப்பட்டாள், அன்னாள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள். ஆலயத்திற்குச் செல்லும் போது கூட துக்கப்படுத்தினவள், மற்ற நேரங்களில் இன்னும் அதிகமாக வேதனைப் படுத்தியிருக்கக் கூடும். உங்கள் குறைகளைக் கண்டு மற்றவர்கள் துக்கப்படுத்துகிறார்களோ, சோர்ந்து போகாதிருங்கள். யோபுவின் உச்சந்தலை துவங்கி, உள்ளங்கால் வரைக்கும் வியாதியின் வேதனை காணப்பட்டது. அவனுடைய மனைவி மற்றும் நண்பர்கள் ஆறுதலாகக் காணப்படுவார்கள் என்று யோபு நினைத்தான்;. ஆனால் அவர்கள் யோபுவை துக்கப்படுத்துகிறவர்களாகக் காணப்பட்டார்கள். தேவனைத் தூஷித்து ஜீவனை விடு என்று மனைவியும், யோவுவின் மறைவான பாவவாழ்க்கைதான் இதற்குக் காரணம் என்று நண்பர்களும் கூறினார்கள். இப்படி உங்களையும் துக்கப்படுத்துகிறவர்கள் அனேகர் காணப்படலாம். ஆறுதலுக்குப் பதிலாக முள்ளாகக் குத்துகிறவர்கள் கூட காணப்படலாம். ஆனால் கர்த்தர் ஒருபோதும் உபத்திரவப் படுகிறவனுடைய உபத்திரவத்தை அற்பமாக்கக் கருதுவதில்லை. லாசரு மரித்த வேளையில், அவனுடைய சகோதரிகளும், யூதர்களும் அழுகிறதைக் கண்டு இயேசுவும் அவர்களோடு சேர்ந்து கண்ணீர் விட்டார். அவர் நம்முடைய வேதனைகளை அறிந்தவர்.
வருத்தப்பட்டு பாரஞ்சுமப்பவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று வாக்களித்தவர், உங்களுடைய துக்கங்களைச் சந்தோஷமாய் மாற்றுவார். அவர் உங்களை விசாரிக்கிற தேவன், ஆகையால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்து விடுங்கள். துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் ஆறுதல் அடைவார்கள் என்றும் கூறினவர் உங்கள் துக்கங்களையும், துயரங்களையும் நீக்கி உங்களை ஆறுதல் படுத்தி மகிழப்பண்ணுவார். ஆகையால் நம்பிக்கையோடு சிலுவை நாதரிடம் இன்றே வந்து விடுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar