மத்தேயு 27:22 பிலாத்து அவர்களை நோக்கி: அப்படியானால், கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று எல்லாரும் சொன்னார்கள்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/BEyyZpw4cpc
ஒவ்வொரு நாடுகளிலும் மரண தண்டனை ஒவ்வொரு விதத்தில் செயல்படுத்தப்படும். ஒரு நபர் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டால், எப்படியாவது சிலர் அந்த குறிப்பிட்ட நபரை விடுதலை செய்ய வேண்டும் என்று குரல் கொடுப்பார்கள். ஈராக் அதிபர் சதாம் உசேனை தூக்கிலிடும்போது சில தேசத்தின் தலைவர்கள் கண்டன குரலை எழுப்பினார்கள். தங்கள் தலைவர் தவறே செய்திருந்தாலும், அவரை மரண தண்டனையிலிருந்து விடுதலை செய்யும்படி சில கூட்டத்தினர் ஆர்ப்பாட்டம் செய்வார்கள் இல்லை போர்க்கொடி செய்வார்கள். பொதுவாக, மனிதர்கள் நமக்கு விரோதமாக எழும்பும்போது நமக்கு மனஅழுத்தம் வருவதுண்டு. அந்நேரங்களில் யாரவது சிலர் நமக்கு ஆதரவாக பேசும் ஒரு வார்த்தை ஆறுதலாக இருக்கும். ஆனால் இங்கே இயேசுவை சிலுவையில் அறையவேண்டும் என்று சிலர் அல்ல, ஒரு பிரிவினர் மாத்திரம் அல்ல, மாறாக, எல்லாரும் சொல்லுகிறவர்களாக காணப்பட்டார்கள். அப்படியென்றால் மனிதனாக இந்த உலகத்தில் இருந்த இயேசுவின் சூழ்நிலை எவ்வளவு அதிகமாக அழுத்தத்தை கொண்டுவந்திருக்கும். தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்பு இயேசு செய்தார் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள். மரணத்திற்கு ஏதுவானதொன்றும் அவரிடத்தில் காணாதிருந்தும், அவரைக் கொலைசெய்யும்படிக்குப் பிலாத்துவை வேண்டிக்கொண்டார்கள் (அப் 13:28) என்று வசனம் சொல்லுகிறதாய் காணப்படுகிறது.
பிலாத்து கேட்கிறான் கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்யவேண்டும் என்று. கிறிஸ்து என்றால் அபிஷேகம்பண்ணப்பட்டவர் என்று பொருள். பிலாத்துவே ஒப்புக்கொள்ளுகிறான் இயேசு அபிஷேகம்பண்ணப்பட்டவர் என்று. அப்படிப்பட்டவரை சிலுவையில் அறையும்படி வேண்டிக்கொண்டார்கள். இப்படி எல்லா ஜனங்களும் ஒருமித்து இயேசுவை சிலுவையில் அறையவேண்டும் என்று ஏன் கூறினார்கள்? ஏன் எல்லாரும் அதிகமாய் கூக்குரலிட்டு சொன்னார்கள்? இயேசு சிறிதேனும் பாவம் செய்தாரா? ஏன் ஒரு பாவமும் செய்யாதவரை, எல்லாரும் இயேசுவை சிலுவையில் அறையும்படி சொன்னார்கள்? காரணம் ஒருவரும் கெட்டுப்போவது தேவனுடைய சித்தமல்ல என்று வசனம் சொல்லுகிறது. எல்லாரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதற்காக, சிலுவையில் எல்லாராலும் இயேசு ஒப்புக்கொடுக்கப்பட்டார். இயேசு உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்த்த தேவாட்டுக்குட்டி. சிலுவையில் உயர்த்தப்பட்டிருக்கும்போது எல்லாரையும் என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன் என்று இயேசு சொன்னார். நாம் யாரும் ஒருவராலும் புறக்கணிக்கப்பட கூடாது என்பதற்காக, இயேசு எல்லாராலும் புறக்கணிக்கப்பட்டார்.
இயேசுவை சிலுவையில் அறையவேண்டும் என்று எல்லாரும் சொன்ன நாட்களை போல, காலம் வருகிறது; அப்பொழுது இயேசுவே கர்த்தர் என்று எல்லா நாவுகளும் அறிக்கையிடும், இயேசுவுக்கு முன்பாக எல்லா முழங்காலும் முடங்கும். ஆகையால் சிலுவையில் அன்று யூதர்கள் இயேசுவை ஒப்புக்கொடுத்ததுபோல, இன்று நாம் பாவம் செய்து மீண்டும் இயேசுவை சிலுவையில் அறையாமல், அவருக்கு பிரியமான வாழ்க்கை வாழ ஒப்புக்கொடுப்போம்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org