சிலுவையின் உபதேசம் உங்கள் பெலனாயிருக்கும். 

சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது,    இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது (1 கொரி. 1:18).

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/-b6JC8kw5aA

ஒரு வருடத்தின் மூன்று மாதங்களை முடித்து நான்காவது மாதத்திற்குள் பிரவேசிக்கக் கர்த்தர் கிருபை செய்தார்,    அவருக்கே துதியும்,    கனமும்,    மகிமையும் உண்டாகட்டும். இந்த மாதம் முழுவதும் சிலுவையின் உபதேசத்தை நீங்கள் கற்றுக்கொள்ளும் போது அது  உங்கள் ஒவ்வொருவருடைய பெலனாயிருக்கும். உலக ஜனங்களுக்குச் சிலுவை என்பது ஒரு தோல்வியின் சின்னம்,    அவமானத்தின் சின்னம். ஆனால் கர்த்தருடைய ஜனங்களுக்குச் சிலுவை தான் எல்லாம்,    சிலுவை நம்முடைய வெற்றியின் சின்னம்,    ஆசீர்வாதத்தின் ஊற்றாகக் காணப்படுகிறது. 

சிலுவையின் செய்தியை அனுதினமும் தியானியுங்கள்.  மனுக்குலத்தின்  இரட்சிப்பு இயேசுவின் பிறப்பில் தோன்றினாலும்,    சிலுவையில் இயேசு ஜீவனை ஊற்றிக் கொடுத்து மரித்த வேளையில் அது முழுவதும் நிறைவேறினது. இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவத்திலிருந்து மன்னிப்பு பெறுவது இயலாத காரியம் என்று வேதம் கூறுகிறது. ஆகையால் தான் மாமிசத்தின் உயிராகக் காணப்படுகிற இரத்தத்தை இயேசு சிலுவை என்னும் பலிபீடத்தில் நமக்காக ஊற்றிக் கொடுத்தார்.  ஆத்துமாவுக்காகப் பாவநிவிர்த்தி செய்வது இயேசுவின் இரத்தம் மாத்திரமே. ஆகையால் பாவமன்னிப்பின் நிச்சயத்தை இதுவரைக்கும் பெற்றுக் கொள்ளவில்லையென்றால் இன்றைக்கே  சிலுவையண்டை வந்து,    அவருடைய இரத்தத்தால்  பாவங்களறக்  கழுவப்பட்டு இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளுங்கள். அதன்பின்பும் நாம் அனுதினமும் பரிசுத்த ஜீவியம் செய்ய வேண்டும். இயேசு தன்னுடைய சொந்த இரத்தத்தினால் ஜனங்களைப் பரிசுத்தம் செய்வதற்கு  எருசலேம் என்னும் நகரத்திற்கு வெளியே காணப்பட்ட  கொல்கொதா மலையில் பாடுபட்டு தன்னுடைய  இரத்தத்தைச்  சிந்தினார். அவருடைய இரத்தத்தில் அனுதினமும் நாம் ஸ்நானம் செய்யும் போது,    அவருடைய இரத்தம் நம்மை பரிசுத்தப்படுத்தும். பூமியில் அனுதினமும் ஜீவிக்கப் பாதுகாப்பு நமக்கு அவசியம். இயேசுவின் இரத்தம்  நம்மைப்  பாதுகாக்கிறது.  பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம் இஸ்ரவேல் ஜனங்களைப் பாதுகாத்தது போல,    சிகப்பு கயிறு ராகாப்பின் குடும்பத்தைப் பாதுகாத்தது போல,    இயேசுவின் இரத்தம் ஒவ்வொரு குடும்பத்தையும் பாதுகாக்க வல்லமையுள்ளது. ஆண்டவருடைய இரத்தத்திற்குள்ளே ஆபத்து இல்லை,    அவருடைய இரத்தத்திற்கு வெளியே பாதுகாப்பே இல்லை. பொல்லாத சத்துரு,    நம்மைக் குற்றப்டுத்துகிறவன்,    யோசுவா என்ற பிரதான ஆசாரியனுடைய அழுக்கு வஸ்திரத்தைக் காட்டி அவனைப் பாவி என்று குற்றப்படுத்தினான்,    அதுபோல நம்முடைய குற்றம் குறைகளைக் காட்டி நம்மைக் குற்றப்படுத்திக் கொண்டே காணப்படுவான். ஆனால் இயேசுவின் இரத்தம் நம்மை நீதிமான்களாக்குகிறது,    குற்ற மனசாட்சியை நம்மை விட்டு அகற்றிப் போடுகிறது. இப்படி சிலுவையின் செய்திகள் அனேகமாகக் காணப்படுகிறது. 

அவைகளைக் குறித்து கர்த்தருடைய பிள்ளைகள் அனுதினமும் தியானிக்கும் போது சிலுவை உங்கள் பெலனாய் மாறும். உங்கள் உள்ளான மனுஷனில் அனுதினமும் பலப்படுவதற்கு அது உதவியாகக் காணப்படும். ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தம் உங்கள்  போராயுதமாகக் காணப்படும் போது நீங்கள் சத்துருவை எளிதாக ஜெயிப்பீர்கள். உங்கள் சரீர பலவீன நேரங்களில்,    இயேசுவின் இரத்தம் கீலேயாத்தின் பிசின் தைலமாக மாறி உங்களைக் குணப்படுத்தி பலப்படுத்தும். நீங்கள்  ஆசீர்வாதமாகக்  காணப்படுவதற்கு உங்கள் நன்மைகளுக்காக இயேசுவின் இரத்தம் பேசும். பழிவாங்க விரும்பும் ஜனங்கள் மத்தியில் உங்களுக்காக ஆண்டவரின் இரத்தம் பரிந்து பேசும்.  சபிக்கும் ஜனங்கள் நடுவில் இயேசுவின் இரத்தம் உங்களை மேன்மைப் படுத்தி உயர்த்தி வைக்கும். அழிக்க நினைக்கும் ஜனங்கள் நடுவில் இயேசுவின் இரத்தம் உங்களைப் பிழைக்கும் படிக்குச் செய்யும்;. வீழ்த்த விரும்பும் ஜனங்கள் மத்தியில்   இயேசுவின் இரத்தம் உங்களை ஜெயிக்கச் செய்யும். ஆகையால் சிலுவையைக் குறித்த செய்திகளை நீங்கள் எப்பொழுதும் தியானம் செய்யும் போது,    இந்த மாதம் முழுவதும் கர்த்தர் உங்கள்   பெலனாயிருந்து,    உங்களை ஆசீர்வதித்து மேன்மைப் படுத்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *