லூக்கா 9:23 பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/xUGlCH_iyjg
மீன் பிடித்துக்கொண்டிருந்த சீஷர்களை இயேசு கண்டு என் பின்னே வாருங்கள் உங்களை மனிதர்களை பிடிக்கிறவர்களாக மாற்றுவேன் என்று சொன்னார். உடனே, சீஷர்கள் இயேசுவின் பின்னே சென்றார்கள். ஆனால், இயேசு சிலுவை மரணத்திற்கு நேராக சென்றபோது, இயேசுவை பின்பற்றியவர்கள் சீமோன் பேதுரு முதற்கொண்டு எல்லாரும் ஓடிப்போனார்கள்.
இயேசு சொன்னார் என்னை பின்பற்றவேண்டும் என்று சொல்லுபவர்கள் தங்கள் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொள்ளவேண்டும். அப்படியென்றால், உடல்களில் சிலுவை போன்ற பச்சை குத்திக்கொள்ளுவதோ, சிலுவை போன்ற தங்க செயின் போட்டுகொள்ளுவதோ அல்ல. மாறாக, இயேசு கடந்து சென்ற எல்லா பாதைகளையும் கடைபிடிப்பது. தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான் (லூக் 14:27) என்று இயேசு சொன்னார். அப்படியென்றால் அடிப்படை தகுதியே சிலுவையை நாம் சுமக்க வேண்டும்.
நம்முடைய வாழ்க்கையில் சில நேரங்களில் வேலை செய்யும் இடத்தில சிலர் சிலுவையாக மாறுவதுண்டு; குடும்பத்தில் சிலர் நமக்கு துன்பத்தை கொடுத்து சிலுவையாக மாறுவதுண்டு; ஊழியத்தில் நமக்கு எதிராக செயல்பட்டு நமக்கு சிலுவையாக மாறுவதுண்டு. ஆனால் நாம் சிலுவையை சுமக்கும் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஆண்டவர் நம்மை தனியே விட்டுவிட மாட்டார். உலகத்தின் முடிவு பரியந்தம் உன்னோடுகூட இருப்பேன் என்று சொன்னவர், சிலுவை சுமக்கும் நேரங்களிலெல்லாம் உங்களோடு கூட இருப்பார். அவர் கொடுக்கும் சுமை மெதுவானதாக இருக்கும். உங்களை அளவுக்கு மிஞ்சி சோதிக்கிறவர் அல்ல.
ஆகையால் உங்களுடைய சிலுவையை சந்தோசத்தோடு சுமந்து செல்லுங்கள். சிரேனே ஊரானாகிய சீமோன் சந்தோசத்தோடு சிலுவையை சுமக்கவில்லை. அவனை சிலுவை சுமக்கும்படி பலவந்தம்பண்ணினார்கள் என்று வேதம் சொல்லுகிறது. அப்படியாக தேவ ஜனங்கள் இருக்கலாகாது. இயேசு சிலுவையை சுமந்துசெல்லும்போது அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார் (எபி 12:2). இயேசு சிலுவையை பார்ப்பதற்கு முன்பாக, அதற்குப்பின்பு வைக்கப்பட்டிருக்கிற சந்தோசத்தை முதலாவது பார்த்தார். பிரசவ வேதனைபடுகிற ஸ்த்ரீ அவள் பெறப்போகும் பிள்ளைகுறித்து முதலாவது சந்தோசப்படுவதுண்டு, அதுபோல நீங்கள் கடந்து செல்லுகிற சிலுவை பாதைக்கு பின்பு வரப்போகும் நன்மைகளை நினைத்து சந்தோசத்துடன் பாருங்கள்; மாராவிற்கு பின்பு மதுரம் இருப்பதை பாருங்கள்; அழுகையின் பள்ளத்தாக்கிற்கு பின்பு நீரூற்று இருப்பதை பாருங்கள்; இக்காலத்து பாடுகளுக்கு பிறகு இனிவரும் மகிமையை நோக்கி பாருங்கள். உங்கள் சிலுவையை சந்தோசத்தோடு ஏற்றுக்கொண்டு கடந்து செல்லுங்கள். பாடுகள், நிந்தைகள், அவமானத்தை குறித்து சிறிதேனும் கவலைபடாதிருங்கள். உங்கள் சிலுவையை எடுத்து இயேசுவின் பின்னே நடந்துசெல்லுங்கள். கர்த்தர் உங்களோடு கூட உங்கள் சிலுவையின் பாதையில் இருப்பார். பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் (லுக் 23:31).
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org