இயேசு சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும், ஆகிலும் என் சித்தத்தின் படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார்(மத். 26:39).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/44vXwUdm8u4
வேதம் இரண்டு முக்கியமான தோட்டங்களைப் பற்றிக் கூறுகிறது. அவைகளில் ஒன்று ஏதேன் தோட்டம், அது மகிழ்ச்சியின் இடம் என்று பொருள்படும். ஆதிப் பெற்றோராகிய ஆதாமையும் ஏவாளையும் சிருஷ்டித்து, அவர்களை ஏதேனில் வைத்து, அதைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் தேவன் கட்டளையிட்டார். தோட்டத்தின் நடுவில் ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் முளைக்கப்பண்ணி, தோட்டத்தின் காணப்படுகிற எல்லா விருட்சத்தின் கனியையும் அவர்கள் புசிக்கலாம், ஆனால் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம் என்ற கட்டளையையும் கொடுத்தார். ஆனால் ஆதிப்பெற்றோர் வஞ்சிக்கிற சத்துருவின் ஆலோசனைக்குச் செவிகொடுத்து, நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசித்ததினால் தோட்டத்திலிருந்து துரத்திவிடப்பட்டார்கள். ஆகையால் தேவனுடைய மகிமையை இழந்தார்கள், அவர் கொடுத்த ஆளுகையையும், மற்ற அனைத்து நன்மைகளையும் இழந்து போனார்கள். அதற்குப் பதிலாகச் சாபத்தையும். வேதனையையும், கஷ்டத்தையும் சம்பாதித்தார்கள்.
இயேசு சிலுவைக்குக் கடந்து செல்லுவதற்கு முன்பு, இன்னொரு தோட்டத்திற்கு வந்தார், அது கெத்சமனே தோட்டமாகும். கெத்சமனே என்றால் எண்ணைச் செக்கு என்று அர்த்தம். அவர் சிலுவையில் கசக்கிப் பிழியப்பட்டு, தன் இரத்தம் முழுவதையும் நமக்காக ஊற்றிக் கொடுப்பதற்கு முன்பு அங்கே தன் சீஷர்களோடு ஜெபிக்கும் படிக்குக் கடந்து வந்தார். பிதாவை நோக்கி ஒரே ஜெபத்தை மூன்று முறை திரும்பத் திரும்பச் செய்தார். இந்த பாடுகளின் பாத்திரம் என்னை விட்டு நீங்கக் கூடுமானால் நீங்கும் படிக்குச் செய்யும், ஆகிலும் என்னுடைய விருப்பத்தின் படியல்ல, உம்முடைய சித்தத்தின்படி ஆகட்டும் என்று சொல்லி பிதாவுடைய பூரணச் சித்தத்திற்குத் தன்னை அர்ப்பணித்தார். அவருடைய துக்கமும் வியாகுலமும் அதிகமாகக் காணப்பட்டது, அவர் பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் வேண்டுதல் செய்தார், ஆகையால் அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.
இயேசு அதிக ஊக்கத்தோடு ஜெபம் பண்ணினார், ஆனால் சீஷர்களுக்கு ஒருமணி நேரம் கூட ஆண்டவரோடு விழித்திருந்து ஜெபிக்கமுடியவில்லை, அவர்கள் நித்திரை பண்ணுகிறவர்களாகக் காணப்பட்டார்கள். இந்நாட்களில் காணப்படுகிற நம்மிடத்திலும் இதே ஜெபக்குறைவு காணப்படுகிறது. நாம் சோதனைகளுக்கு உட்படாமல் காணப்படுவதற்கு விழிப்பின் ஜெபம் அவசியம். கர்த்தருடைய ஜெபத்தில் கூட, நமக்கு ஜெபிக்கும் படிக்கு அவர் கற்றுத் தந்த வேளையில், சோதனைகளுக்குள் பிரவேசிக்காதபடிக்கு தீமைக்கு விலக்கிக் காத்தருளும் என்று ஜெபிக்கும்படி கூறினார். சத்துரு யாரை விழுங்கலாம், சோதனையில் விழத்தள்ளலாம் என்று வகைதேடி சுற்றித்திரிகிற இந்நாட்களில் கர்த்தருடைய பிள்ளைகள் தனியாய், குடும்பமாய், சபையாய் ஜெபிக்கும் நேரத்தைக் கூட்டவேண்டும். சோதனைகளுக்குத் தப்புவதற்கு ஜெபம் ஒன்றே வழியாகக் காணப்படுகிறது. பிதாவாகிய தேவன் இயேசுவின் ஜெபத்திற்குப் பதில் கொடுத்தார், ஆனால் அது பாடுகளின் பாத்திரத்தை நீக்குவதற்கு அல்ல, அதை இயேசு பருகுவதே அவருடைய சித்தமாயிற்று. இயேசு சிலுவையில் மனுகுலத்திற்காக ஜீவனைக் கொடுக்கவேண்டும், அதுவே பிதாவுடைய விருப்பமாகக் காணப்பட்டது. அதன் விளைவு, ஏதேனில் நாம் இழந்த எல்லா ஆசீர்வாதங்களையும் திரும்பப் பெற்றுக் கொண்டோம். ஏதேனில் முதல் ஆதாம் கீழ்ப்படியாமையினால் இழந்த அத்தனை நன்மைகளையும் பிந்தின ஆதாமாகிய இயேசுவின் மூலம் நாம் சுதந்தரிக்க அது ஏதுவாயிற்று. ஆண்டவர் பாடுகளின் பாத்திரத்தைப் பருகினதினாலே, நமக்கு ஆசீர்வாதத்தை ஈந்தளித்தார். கர்த்தருடைய பிள்ளைகளும் கூட பாடுகளையும், உபத்திரவங்களையும், வியாதிகளையும் கண்டு சோர்ந்து போய்விடாதிருங்கள், அவைகள் எல்லாவற்றையும் தேவன் ஆசீர்வாதமாக முடியப்பண்ணுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar