ஸ்திரீயே, ஏன் அழுகிறாய்?.

இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே,    ஏன் அழுகிறாய்,    யாரைத் தேடுகிறாய் என்றார். அவள்,    அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா,    நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால்,    அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும்,    நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள் (யோவான் 20:15).

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/v7p4qUomGos

யூதர்களுடைய ஓய்வுநாள் முடிந்து,    வாரத்தின் முதலாம் நாள் அதிக இருட்டோடே,    மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும்  கல்லறையினடத்திற்கு  இயேசுவின் சரீரத்திற்கு  கந்தவர்க்கம்  இடும்படிக்கு வந்த வேளையில்,    கல்லறையை அடைத்திருந்த வாசலின் கல் எடுத்துப் போட்டிருக்கக் கண்டார்கள். கல்லறையின் உள்ளே பிரவேசித்து,    கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல்,    அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில்,    பிரகாசமுள்ள  வஸ்திரந்தரித்த இரண்டு தேவதூதர்கள்  அவர்கள் அருகே நின்று அவர்களை நோக்கி,    உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? அவர் இங்கே இல்லை,    அவர்  உயிர்த்தெழுந்தார்  என்றார்கள். உடனே மகதலேனா மரியாள் ஓடி,    சீமோன்பேதுருவினிடத்திலும்,    யோவானிடத்திலும் போய்,    கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்,    அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள். அப்பொழுது பேதுருவும் மற்றச் சீஷனும்  கல்லறையினிடத்திற்குப்  போகும்படி புறப்பட்டு வந்து,    சீலைகள் கிடக்கிறதையும்,    அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச் சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டார்கள். பின்பு அவர்கள்; தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப்போனார்கள். ஆனால் மகதலேனா மரியாள் மட்டும் கல்லறையண்டை நின்று அழுது கொண்டிருந்தாள். அவள் அதிகாலையில் அதிக இருட்டோடே வந்ததுமில்லாமல்,    இயேசுவின் பேரில் கொண்டிருந்த அன்பின் நிமித்தம் கல்லறையை விட்டு  போகமனதில்லாமல்  அழுதுகொண்டிருந்தாள். அந்த வேளையில் உயிர்த்தெழுந்த ஆண்டவர் தோன்றி,    ஸ்திரீயே,    ஏன் அழுகிறாய் என்றார். அவள் அவரை தோட்டக்காரனென்று எண்ணி,    ஐயா,    நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால்,    அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும்,    நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள். ஆண்டவர் பேரில் அவள் கொண்ட அன்பு,    அவள் ஒரு ஸ்திரீயாயிருந்தும்  அவரை சுமந்து செல்லுவதற்கும் ஏவுகிறதைப் பார்க்கமுடிகிறது. அப்போது இயேசு மரியாளே என்று அழைத்தார்,    அவள் அவரை அறிந்து கொண்டு ரபூனி என்றாள். 

கர்த்தருடைய பிள்ளைகளே,    ஆண்டவரைத் தேடுகிற உங்கள் அழுகையைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்.  அவர் மேல் அதிகமாய் அன்பு கூர்ந்தும் ஏன் எனக்கு இத்தனைப் பாடுகள்,    கஷ்டங்கள் என்று அங்கலாய்க்கிற உங்கள் துக்கங்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்.  உயிர்த்தெழுந்த ஆண்டவர் உங்கள் துக்கங்களைச் சந்தோஷமாக மாற்ற வல்லமையுள்ளவர்.  ஏதேன் தோட்டத்தில் ஆண்டவர் ஏவாளை நோக்கி நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்,    வேதனையோடே பிள்ளை பெறுவாய் என்றார். ஆனால் இயேசுவை அடக்கம் செய்த தோட்டத்தில் இன்னொரு ஸ்திரீக்கு ஆண்டவர் ஆறுதலையும்,    தேறுதலையும் கொடுக்கிறதைப் பார்க்கமுடிகிறது. உயிர்த்தெழுந்த ஆண்டவர் உங்கள் ஒவ்வொருவரையும் தாயைப் போல ஆற்றித் தேற்றுவார். அவர் உங்கள் ஒவ்வொருவருடைய பெயர்களையும் அறிந்தவர். மரியாளே என்று இயேசு அழைத்த வேளையில் அவளுக்கு இருந்த ஆறுதலும்,    ஆனந்தமும் அளவில்லாதது. அதுபோல உயிர்த்தெழுந்த ஆண்டவர் உங்கள் பெயர்களைச் சொல்லி ஆறுதல் படுத்தி  உங்களை  களிகூரப்பண்ணுவார். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *