சங் 126:3. கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்.
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/2rOr_ucsOkY
கர்த்தர் ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார் (யோபு 5:9) என்று வசனம் சொல்லுகிறது. ஆண்டவர் ஆபிரகாமை பார்த்து சொன்னார் நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் (ஆதி 12:2) என்று. மோசேயின் மாமனாகிய எத்திரோ சொன்னான் கர்த்தர் எல்லாத் தேவர்களைப்பார்க்கிலும் பெரியவர் (யாத் 18:11) என்றும், சாலொமோன் சொன்னான் எங்கள் தேவன் எல்லா தேவர்களைப் பார்க்கிலும் பெரியவர்; ஆகையால் நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதாயிருக்கும் (2 நாளா 2:5) என்றும் சொன்னான். இப்படியாக நாம் கர்த்தரை பெரியவராக பார்க்கும்போது கர்த்தர் நமக்காக பெரிய காரியங்களை செய்கிறவராய் காணப்படுவார். எல்லாரும் கோலியாத்தை பெரியவனாக பார்த்தார்கள்; ஆனால் தாவீது ஒருத்தன் கோலியாத்தை காட்டிலும் தேவனை பெரியவராக பார்த்தான். ஆகையால் தான் அங்கே கோலியாத் வீழ்த்தப்படவும், இஸ்ரவேல் இராணுவத்தில் மகிச்சியும் கடந்து வந்தது.
எல்லா இக்கட்டான சூழ்நிலையிலும் மகிச்சியோடு வாழ வேண்டுமென்றால், கர்த்தரை உங்கள் சூழ்நிலைக்கு மேலாக பெரியவராக பாருங்கள். அவர் பெரிய காரியங்களை செய்வார். தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார் (யோவே 2:21) என்று வசனம் சொல்லுகிறது. நாம் நினைக்கலாம் நம் தேசத்தில் ஒரு மாற்றம் இனி வருமா? எப்பக்கமும் நீதிகள் புரட்டப்படுகிறதே என்று. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக கர்த்தர் சொன்னார் அசீரியா,எகிப்து, பாபிலோன், மேதிய-பெர்சிய, கிரீஸ் மற்றும் ரோம சாம்ராஜ்ஜியங்கள் எல்லாம் கவிழ்க்கப்பட்டு போகும் என்பதாக. அந்த கால கட்டங்களில் வாழ்ந்த ஜனங்கள், தலைவர்கள், இராஜாக்கள் நினைத்திருப்பார்கள் இவை ஒருபோதும் நடைபெறாது; நாங்கள் தான் முடிவுமட்டும் சூப்பர் பவர் நாடுகளாக இருப்போம் என்பதாக. ஆனால் இன்று இந்த இராஜ்ஜியங்கள் ஒன்றும் இல்லாமற்போனது. இப்படியாக தான் நம்முடைய தேசங்களிலும் கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார். ஆகையால் மகிழ்ந்து களிகூரு என்று கர்த்தர் சொல்லுகிறார்.
கர்த்தருக்குள் மகிச்சியாய் இருப்பதே தேவ பெலன். உன் ஆபத்துக்காலத்தில் சோர்ந்துபோவாயென்றால்,உன் பெலன் குறுகியது என்று வசனம் சொல்லுகிறது. ஒரு வாலிபன் சொன்னான் எனக்கு மிகவும் நெருக்கமான சூழ்நிலையில் என் குடும்பம் சாப்பிடுவதற்கு மாத்திரம் ஏற்ற ஒரு வேலை கிடைத்தால் நல்லது என்று சொல்லி சென்னை பட்டணத்தில் அங்கும் இங்குமாக அலைந்து வேலை தேடினான். அவன் எதிர்பார்த்தது குடும்பம் சாப்பிடுவதற்கு மாத்திரம் ஏற்ற வேலை என்று. ஆனால் கர்த்தர் அவன் எதிர்பார்த்ததை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமான சம்பளத்தில் பெரிய கம்பெனியில் வேலை கிடைக்கும்படி செய்தார். கர்த்தர் எண்ணுவதற்கும் வேண்டுவதற்கும் அதிகமாக செய்ய வல்லவர் என்று வசனம் சொல்லுகிறது. உங்கள் வாழ்க்கையிலும் கர்த்தர் நீங்கள் எதிர்பார்த்ததை காட்டிலும் அதிகமாக பெரிய காரியங்களை செய்து உங்களை மகிழப்பண்ணுவார். நீங்கள் மகிச்சியாய் இருப்பீர்கள். கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் பெரிய காரியங்களை செய்து நீங்கள் மகிழ்ச்சியோடு அவருக்கு நன்றி சொல்லும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org