மன்னிப்புத் தருவேன்.

நியாயஞ்செய்கிற மனுஷனைக் கண்டு பிடிப்பீர்களோ என்றும்,     சத்தியத்தைத் தேடுகிறவன் உண்டோ என்றும்,     எருசலேமின் தெருக்களிலே திரிந்துபார்த்து,     விசாரித்து,     அதின் வீதிகளிலே தேடுங்கள், காண்பீர்களானால் அதற்கு மன்னிப்புத் தருவேன் (எரேமியா 5:1).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/4V4RYEFwxqw

எருசலேம் பட்டணத்தின் குடிகளுடைய  நிலைமையைக்  கர்த்தர்  எரேமியா தீர்க்கதரிசியின் மூலம் வெளிப்படுத்தினார்.  எரேமியா  மற்றவர்களோடு சேர்ந்து எருசலேமின் தெருக்களில் திரிந்துபார்த்து,     விசாரித்து,     அதின் வீதிகளில் தேடி  நியாயஞ்செய்கிற  மனுஷனும்,   சத்தியத்தைத் தேடுகிற மனுஷனும் உண்டா என்று பார்க்கவேண்டும். அப்படிப்பட்ட மனுஷனைத் தேடிக் கண்டுபிடித்தால்,     அந்தப் பட்டணத்தின் குடிகளுக்கு மன்னிப்புத் தருவேன் என்றும்,     இல்லையேல் பாபிலோனிய ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் மூலம் அழிவு வரும் என்று ஆண்டவர் எச்சரித்தார். நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன்,     ஒருவனையும் காணேன் என்று ஆண்டவர் துக்கப்பட்டதைப் போல,     எருசலேமிலும் நியாயஞ்செய்கிறவனும்,     நீதிசெய்கிறவனும் ஒருவன் கூட இல்லை என்பதையும் கர்த்தர் அறிந்திருந்தார்.  எரேமியாவும்  தேடிப்பார்த்தான்,     ஒருவனையும் அவனால் கண்டுபிடிக்கமுடியவில்லை.  கிரேக்கத் தத்துவ அறிஞர் டயோஜினஸ் என்பவன் பட்டப்பகலில் கையில் ஒரு விளக்கோடு அத்தேனே(Athens) பட்டணத்தில் நேர்மையான மனுஷன் உண்டோ என்று தேடினான் என்று சரித்திரம் கூறுகிறது. அவனுடைய நாட்களில் அந்தப் பட்டணத்தில் நேர்மையுள்ளவர் இல்லாமல் காணப்பட்டார்கள். அவனுக்கு முன்பாகவே  எரேமியாமியும் எருசலேம் பட்டணம் முழுவதும் நியாயஞ்செய்கிறவனையும்,     சத்தியத்தைத்  தேடுகிறவனையும்  தேடினான் என்று வேதம் கூறுகிறது. ஒருவேளை  டயோஜினஸ்  எரேமியாவை தனக்கு முன்மாதிரியாக எடுத்திருக்கக் கூடும். 

கர்த்தருடைய பிள்ளைகளே,     நியாயத்தைச் செய்கிறவர்களாய் காணப்படுங்கள். இந்நாட்களில் நியாய ஸ்தலங்களில் கூட அநீதி காணப்படுகிறது. பணத்திற்காக நியாயத்தைப் புரட்டுகிற திரளான ஜனங்கள் காணப்படுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் மத்தியில் கர்த்தருடைய ஜனங்கள்; உங்கள் காரியங்களை நியாயமாய் நடப்பிப்பது மாத்திரமல்ல மற்றவர்களுடன்  இடைப்படும்போதும் நியாயமாய் எல்லாவற்றையும் செய்யுங்கள். அதுபோல சத்தியத்தைத் தேடுங்கள். தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள் என்று வேதம் கூறுகிறது. கர்த்தருடைய வசனம் சமூலமும் சத்தியம்,     இயேசு சத்தியத்தைக்குறித்துச் சாட்சி கொடுக்க பிறந்த ராஜா,      அதற்காகவே உலகத்தில் வந்தார்,     சத்தியவான் எவனும் அவருடைய சத்தத்தைக் கேட்கிறான் என்றார். பிலாத்து இயேசுவைப் பார்த்து சத்தியமாவது என்ன என்றான். அவனுக்குச் சத்தியம்,     பொய் என்பது ஒன்றும் காரியமல்ல,     இந்நாட்களில் காணப்படுகிற உலகத்தின் ஜனங்களும்,     கர்த்தருடைய ஜனங்களும் இதே நிலையில்தான் காணப்படுகிறார்கள். பொய்யின் உபதேசங்கள் சபைகளில் காணப்படுகிறது. எல்லா ஆவிகளையும் நீங்கள் நம்பாமல் அவைகள் தேவனால் உண்டானவையா என்று சோதித்து அறியுங்கள் என்று கர்த்தர் கூறினார். ஆனால் பொய்யின் ஆவியோடு,     சுயநோக்கங்களோடு வருகிற ஊழியர்களைக் கூட  நம்மால் இனம்கண்டு கொள்ளமுடியவில்லை. யோவான் தன்னுடைய வயோதிப நாட்களில் கனம் பொருந்திய அம்மாள் என்பவளுடைய பிள்ளைகளும்,     காயுவும் சத்தியத்தில் நடப்பதைக் கண்டு சந்தோஷப்பட்டான். என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை என்றான். நாம் நியாயஞ்செய்கிறவர்களாய் சத்தியத்தைத் தேடுகிறவர்களாய்   காணப்பட்டால்,     நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற பட்டணத்திற்கும்,     அதின் குடிகளுக்கும் கர்த்தர் மன்னிப்பைக் கட்டளையிடுவார்,     அதின் குடிகளைக் கர்த்தர் ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *