தீர்க்காயுசு உண்டாயிருக்கும்:-

நீதி 28:16 பிரபு புத்தியீனனாயிருந்தால் அவன் செய்யும் இடுக்கண் மிகுதி; பொருளாசையை வெறுக்கிறவன் தீர்க்காயுசைப் பெறுவான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/UH2YsmfJfiw

இந்த உலகத்தில் வாழும் நபர்கள் பொதுவாக அநேக வருடங்கள் இந்த உலகத்தில் வாழவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஒருவனை குறித்து மற்ற இருவர்கள் பேசிக்கொண்டிருக்கும் சமயத்தில் அந்த குறிப்பிட்ட நபர் சரியான நேரத்தில் வந்தால், உனக்கு நூறு வயசு என்று சிலர் சொல்லுவார்கள். சில முதியவர்கள் வாழ்த்தும்போது நீ தீர்க்காயுசுடன் இரு என்று வாழ்த்துவார்கள். நமது ஊர்களில் ஒருவர் தும்மல் தும்மினால் நூறு வயசு, இருநூறு வயசு என்று ஒவ்வொரு தும்மலுக்கு நூறு வயசை கூட்டி போட்டு வாழ்த்துவார்கள். இதெல்லாம் வெறும் மனித கணக்கு. நாம் தீர்க்காயுசுடன் இருக்கவேண்டுமென்றால் வேதம் சில இரகசியங்களை வெளிப்படுத்துகிறது.

பொருளாசையை நாம் வெறுத்தால் தீர்க்காயுசை அடைவோம். அளவுக்கு மிஞ்சி ஆசைப்படாமல், கர்த்தர் ஐஸ்வரியத்தை கொடுக்கும்போது, ஆடம்பரமான காரியங்களை தவிர்த்து வாழும்போது, கர்த்தர் நமக்கு தீர்க்காயுசை தருவார். மற்றவர்கள் பெரிய டெலிவிஷன் வாங்கிவிட்டார்கள், நானும் வாங்க வேண்டும் என்றோ, மற்றவர்கள் பெரிய வீட்டை கட்டினார்கள், நானும் பெரிய வீட்டை கட்ட வேண்டும் என்றோ ஆசைப்படக்கூடாது. உங்களுக்கு இன்னது வேண்டும் என்று கர்த்தர் அறிந்திருக்கிறார். மாத்திரமல்ல, வசனம் சொல்லுகிறது, என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது. அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப்பண்ணும் (நீதி 3:1,2) என்பதாக. யோய்தாவின் நாளெல்லாம் நித்தம் கர்த்தருடைய ஆலயத்திலே சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி வந்தார்கள். யோய்தா தீர்க்காயுசுள்ளவனாய் முதிர்வயதில் மரித்தான் என்று வேதம் சொல்லுகிறது. கர்த்தருடைய கட்டளைகளை கைக்கொண்டு அதின்படி ஜீவிப்பவர்களுக்கு நீடித்த நாட்களை கர்த்தர் தருவார். கர்த்தருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து அவருடைய இருதயத்திற்கு ஏற்றவனாய் வாழ்ந்த தாவீது, தீர்க்காயுசும் ஐசுவரியமும் மகிமையுமுள்ளவனாய், நல்ல முதிர்வயதிலே மரணமடைந்தான் என்று வேதத்தை வாசிக்கும்போது அறிந்துகொள்ளுகிறோம்.

இயேசுவின் ஆயிரவருட அரசாட்சியில் அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான் (ஏசா 65:20) என்று வசனம் சொல்லுகிறது. அவருடைய ஆட்சியில் நூறுவயது நிரம்பியவர் தான் வாலிபன் என்று அழைக்கப்படுவார்கள். நாம் இப்பொழுது சொல்வதுண்டு, எனக்கு முப்பது வயதுக்கு மேலாகிவிட்டது, நான் எப்படி வாலிபர் கூட்டங்களில் கலந்துகொள்ளுவது என்று. ஆனால், ஆண்டவருடைய ஆயிர வருட அரசாட்சியில், வாலிபர் கூடுகையில் (Youth meeting), நூறு வயது நிரம்பியவர்கள் இருப்பார்கள். அதற்கு முன் சுவையாக, இப்பொழுது நாம் தீர்க்காயுசுடன் வாழ, பொருளாசையை வெறுத்து, கர்த்தருடைய கட்டளைகளை கைக்கொண்டு வாழ்வோம். கர்த்தர் நம் எல்லாருக்கும் தீர்க்காயுசை தருவார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *