தேவனுடைய கற்பனைகள் பாரமானவையல்ல.

நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம், அவருடைய கற்பனைகள்  பாரமானவைகளுமல்ல  (1 யோவான் 5:3).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Yo6O2ZBqRFc

அனேக கிறிஸ்தவர்கள் கர்த்தருடைய வேதத்தின் கற்பனைகளை  பாரமாக நினைக்கிறார்கள். ஆனால் கர்த்தரிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு அவைகள் தேனிலும் தெளி தேனிலும் மதுரமானதும்,     ஆத்துமாவை  உயிர்ப்பிக்கிறதும்,     ஆறுதலையும் நம்பிக்கையும் ஊட்டுகிறதாகக் காணப்படுகிறது.  யாக்கோபு  ராகேலுக்காக ஏழு வருஷம் வேலைசெய்தான்,      அவள் பேரில் இருந்த பிரியத்தினாலே அந்த வருஷங்கள் அவனுக்குக் கொஞ்ச நாளாகத் தோன்றினது என்று ஆதி. 29:20ல் எழுதப்பட்டிருக்கிறது.  கர்த்தருடைய வேதத்தில் பிரியத்தை வைத்து,     இரவும் பகலும் தியானமாயிருக்கும் போது வேதவார்த்தைகள் நம்முடைய பாரங்களை நீக்குமே ஒழிய நமக்கு ஒருநாளும் பாரமாயிருப்பதில்லை. ஆண்டவரும் என் நுகம் மெதுவாயும்,     என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார் (மத்.11:30). வருத்தப்பட்டு  பாரஞ்சுமக்கிறவர்களே  நீங்கள்  என்னிடத்தில் வாருங்கள்,     நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று வாக்களித்தவர் நம்மை ஒருநாளும்  பாரப்படுத்துவதில்லை. 

இயேசு,     ஜீவ அப்பம் நானே என்றும்,     உங்கள் பிதாக்கள் வனாந்திரத்தில் மன்னாவைப் புசித்தும் மரித்தார்கள்,     ஆனால் வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பமாகிய என்னை,     என் வார்த்தைகளைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான் என்று  கப்பர்நகூமிலுள்ள ஜெப ஆலயத்திலே அவர் உபதேசித்தார். ஆனால் ஆலயத்திலிருந்த அவருடைய  சீஷரில்  அநேகர் இவைகளைக் கேட்டபொழுது,     இது கடினமான உபதேசம்,     யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள்.  அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனே கூட நடவாமல் பின் வாங்கிப்போனார்கள் என்று வேதம் கூறுகிறது. இந்நாட்களிலும் கடினமான  உபதேசங்களைக் கேட்பதற்குச் சபைகளில் ஜனங்கள் ஆயத்தமாக இல்லை,     அவைகளை பாரமாக கருதுவாகள். ஆவியானவர் பாவத்தையும்,     நீதியையும்,     நியாயத்தீர்ப்பையும் குறித்துக் கண்டித்து உணர்த்துவார் என்று வேதம் கூறுகிறது. ஆனால் இந்நாட்களில் கண்டிப்பவர்களை யாரும் விரும்புவதில்லை. ஆண்டவரிடத்தில் ஒரு வாலிபன் கடந்து வந்து,     நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்,     இது மிகவும் முக்கியமான கேள்வி. ஆகையால் ஆண்டவர் அவனைப் பார்த்து நீ நித்திய ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார். இயேசு பத்து கற்பனைகளில் காணப்படுகிற சிலகற்பனைகளைக் கூறினார்,     அவன் சொன்னான் என் சிறுவயதுமுதல் இவைகளைக்  கைக்கொண்டிருக்கிறேன்,      இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான். அதற்கு இயேசு,     நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால்,     போய்,     உனக்கு உண்டானவற்றை விற்று,     தரித்திரருக்குக் கொடு,     அப்பொழுது,     பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்,     பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால்,     இந்த வார்த்தையைக் கேட்டபொழுது,     துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான். ஆண்டவருடைய வார்த்தை அவனுக்கு மிகவும் பாரமாய் காணப்பட்டது,     அதினிமித்தம் நித்திய ஜீவனையும் இழந்து போனான்.

கர்த்தருடைய பிள்ளைகளே,     கர்த்தருடைய வார்த்தைகள் என்பது உற்பத்தியாளருடைய கையேடு போன்றது.  அவைகளின்படி உங்கள்  வாழ்க்கையை நீங்கள் கட்டும்போது,     நீங்கள் ஆசீர்வாதமாய் காணப்படுவீர்கள்,     பாதுகாப்பாகக் காணப்படுவீர்கள். ஆகையால் கர்த்தருடைய வார்த்தையை பாரமாகக் கருதாதபடிக்கு,     கர்த்தரில் அன்பு கூர்ந்து,     அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். உங்கள் எதிர்காலம் ஆசீர்வாதமாகக் காணப்படும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *