வெள்ளியும் பொன்னும்:-

ஆகா 2:8. வெள்ளியும் என்னுடையது, பொன்னும் என்னுடையது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

For audio podcast of this Manna Today, please click the link,

ஆண்டவர் நமக்கு வெள்ளியும் பொன்னையும் கொடுத்து ஆசீர்வதிக்கிறார். ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமானாயிருந்தான் (ஆதி 13:2) என்று வசனம் சொல்லுகிறது. ஆனால் ஆபிரகாமின் இருதயம் பொன்னின் மேலும் வெள்ளியின் மேலும் இருக்கவில்லை. கர்த்தர் நம்மை ஆசிர்வதிக்கும்போது அவைகளை நாம் விக்கிரகமாக மாற்றிவிடலாகாது. இன்று அநேகர் எப்படியாவது பொன்னையும் வெள்ளியையும் சம்பாதிக்கவேண்டும் என்று பல முயற்ச்சியை மேற்கொள்ளுகிறார்கள். கிறிஸ்துவ உலகில் கூட புறஜாதிகளை காட்டிலும் அதிகமாக பொன்னை சேர்க்க வேண்டும் என்ற ஆவல் அநேகரை கண்ணியில் அகப்படும்படி செய்திருக்கிறது. வரதட்சணை என்ற பேரில் அநேகர் பொன்னை எப்படியாவது அபகரிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டுகிற கிறிஸ்துவ ஜனங்கள் ஏராளம். பிலேயாம் சொல்லுவான்: பாலாக் எனக்குத் தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும், சிறிய காரியமானாலும் பெரியகாரியமானாலும் செய்யும்பொருட்டு, என் தேவனாகிய கர்த்தரின் கட்டளையை நான் மீறக் கூடாது என்பதாக. ஆனால் இன்று கர்த்தருடைய கட்டளைகளை மீறினாலும் வெள்ளியையும் பொன்னையும் சம்பாதிக்க வேண்டும் என்று அநேகர் பிரயாசப்படுகிறார்கள்.

அப்போஸ்தலனாகிய பேதுருவும் யோவானும் குறிப்பிட்ட நாளில் தேவாலயத்திற்கு கடந்து சென்றார்கள். அங்கே பிறவியில் இருந்து சப்பாணியாய் இருந்த ஒருவனை அலங்கார வாசலில் உட்காரும்படி அவனை கொண்டுவந்து வைத்தார்கள். அந்த பிறவி சப்பாணி நாள்தோறும் அங்கே பிச்சை கேட்டுக்கொண்டு வருவான். அந்த குறிப்பிட்ட நாளில் அவன் பேதுருவையும் யோவானையும் சந்திக்கும் சந்தர்ப்பம் நேர்ந்தது. நம்முடைய வாழ்க்கையிலும் காரியங்கள் மாறுதலாய் முடிய, ஒரு திருப்புமுனையை கொடுக்க ஆண்டவர் குறிப்பிட்ட நேரத்தை குறிப்பிட்ட சந்தர்ப்பத்தை எல்லாருக்கும் வைத்திருக்கிறார். அந்த பிறவி சப்பாணி பேதுருவையும் யோவானையும் கண்டு பிச்சை கேட்டான். அவர்களிடத்தில் அந்த பிச்சைக்காரன் ஏதாவது சில காசுகளை எதிர்பார்த்திருப்பான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பேதுரு எங்களிடம் காசு இல்லை என்று சொல்லவில்லை. மாறாக எங்களிடம் நீ எதிர்பார்க்கும் சில காசுகளை காட்டிலும் அதிக விலையுயர்ந்த பொன்னும் வெள்ளியும் எங்களிடத்தில் இல்லை. ஆனால் அந்த பொன் வெள்ளியைக்காட்டிலும் விலையுர்ந்த ஒரு நாமம் எங்களிடத்தில் இருக்கிறது. அது இயேசு என்னும் நாமம். அந்த இயேசு என்னும் நாமத்தில் நீ எழுந்து நட என்று அப்போஸ்தலர்கள் சொன்னார்கள். உடனே பிறவி சப்பாணியின் வாழ்க்கையில் அற்புதம் நடந்தது. பேதுருவும் யோவானும் பொன் வெள்ளியைக்காட்டிலும் இயேசுவை பெரியவராக பார்த்தார்கள்; பொன் வெள்ளியை காட்டிலும் இயேசுவின் நாமத்தை பிரசங்கித்தார்; பொன் வெள்ளியை காட்டிலும் இயேசுவின் நாமத்தை சுமந்து செல்லுகிற பாத்திரமாக திகழ்ந்தார்கள். நாமும் எந்த விழாக்களுக்கு சென்றாலும், அது திருமண விழாவாகவும், சபையில் நடைபெறும் விழாவாகவும், வேறெந்த விழாவாகவும் இருந்தாலும் பேதுரு யோவானை போல பொன் வெள்ளையை காட்டிலும் இயேசுவின் நாமத்தை சுமந்து செல்லுகிற பாத்திரமாக இருக்க வேண்டும். பொன் வெள்ளி, காண்கிற அனைத்தும் கர்த்தருடையது என்று வேதம் சொல்லுகிறது. அவர் அதை நமக்கு கொடுத்து ஆசிர்வதிக்கும்போது, ஆபிரகாமை போல பொன் வெள்ளியை பார்க்கிலும் நாம் கர்த்தரை நேசிக்க வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *