வானத்தின் பலகணிகளைத் திறந்து ஆசிர்வதிப்பார்:-

மல் 3:10. என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/fA-4U5VwAlM

தாவீதுக்கு எப்பொழுதும் ஆண்டவருடைய வீட்டை குறித்தும், தேவனுடைய பெட்டியை குறித்தும் ஒரு பக்தி வைராக்கியம் இருந்தது. கர்த்தருக்கென்று ஆலயத்தை கட்ட வேண்டும் என்ற ஆவல் அவனுக்குள்ளாக இருந்தது. தாவீது சொன்னான் நான் கர்த்தருக்கு ஒரு இடத்தையும், யாக்கோபின் வல்லவருக்கு ஒரு வாசஸ்தலத்தையும் காணுமட்டும், என் வீடாகிய கூடாரத்தில் பிரவேசிப்பதுமில்லை, என் படுக்கையாகிய கட்டிலின்மேல் ஏறுவதுமில்லை; என் கண்களுக்கு நித்திரையையும், என் இமைகளுக்கு உறக்கத்தையும் வரவிடுவதுமில்லை என்று, கர்த்தருக்கு ஆணையிட்டு, யாக்கோபின் வல்லவருக்குப் பொருத்தனைபண்ணினான் (சங் 132:2-5). இந்த மனம் இன்றைய இளைஞர்களுக்கு இருக்கிறதா என்று பார்த்தால் 90% இளைஞர்களுக்கு இல்லை என்றே சொல்லலாம். ஆலயத்திற்கு தசமபாகங்களை கொண்டு வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். தசமபாகம் என்பது பதில் ஒரு பங்கு கர்த்தருக்கென்று நாம் கொடுப்பது.

நாட்டின் பொருளாதாரம் செழித்திருக்க எல்லா நாடுகளிலும் அரசாங்கங்கள் வரி வாங்குவார்கள். சில நாடுகளில் மாத சம்பளம் போடுவதற்கு முன்பே வருமான வரியை எடுத்து தான் சம்பளத்தை வங்கி கணக்குகளில் போடுகிறார்கள். இப்படி அநேக வரிகள் சுங்க வரி, வீடு வரி, சொத்து வரி என்று மக்கள் அரசாங்கங்களுக்கு வரி செலுத்துகிறார்கள். அது நல்லது; தேவ ஜனங்கள் எல்லாரும் சரியாக நம்முடைய வரியை செலுத்தவேண்டும். அதுபோல நம்முடை ஆலயம் கட்டப்பட வேண்டுமென்றால், ஆலயத்தில் ஆகாரம் இருக்கவேண்டுமென்றால் அங்கே தசமபாகங்களை கொண்டுவர வேண்டும். தாவீதுக்கு ஆலயம் கட்ட வேண்டும் என்ற வாஞ்சை இருந்தபோதிலும், அவனுடைய நாட்களுக்கு பிறகு சாலொமோன் தேவாலயத்தை உச்சிதமான பொருட்களினால் அவன் கட்டினான். நாம் வாழ்கிற இந்த நாட்களில் ஆலயம் கட்ட வேண்டும் என்ற வாஞ்சை எல்லா விசுவாசிகளுக்கும் காணப்பட வேண்டும். இப்பொழுது வளர்ந்து வருகிற பிள்ளைகளுக்கு இதை குறித்து நாம் சொல்லிக்கொடுக்கிறவர்களாக காணப்பட வேண்டும். சபை இல்லாத ஏழு லட்சம் கிராமங்கள் நம்முடைய தேசத்தில் இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். நம்முடைய விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாம் மெல்கிசதேக்கிற்கு எல்லாவற்றிலும் தசமபாகம் செலுத்தினான் என்று வசனம் சொல்லுகிறது.

அப்படியாக, கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியும்போது, கர்த்தர் வானத்தின் பலகணிகளைத் திறந்து இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கப்பண்ணுவார். பரலோகத்தின் பொக்கிஷங்களை கர்த்தர் உங்களுக்கு கொடுப்பார். ஆபிரகாமின் ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டாகும். பஞ்சகாலத்திலும் கர்த்தர் உங்களை செழித்திருக்கும்படி செய்வார். நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *