நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்:-

ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்(மத் 6:34).

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/uyzT0I2TkXc

நாளைக்கு என்ன நடக்கும் என்ற கவலையிலே அநேகர் இன்றைய நாளை துக்கத்தோடு கழிக்கிறார்கள். நாளைக்கு என்ன நடக்கும் என்பதை நாம் அறியோம். ஒரு தகப்பன் இவ்வாறாக கூறினார்; இப்பொழுது ஒரு பெண்ணை திருமணம் செய்துகொடுக்க வேண்டுமென்றால் குறைந்தது ஒரு கிலோ தங்கம் வரதட்சணையாக கொடுக்க வேண்டியதாயிருக்கிறது. என் சிறு பிள்ளை வளர்ந்து அதை திருமணம் செய்துகொடுக்க வேண்டுமென்றால் வரப்போகிற நாட்களில் குறைந்தது ஐந்து கிலோ தங்கம் சம்பாதிக்க வேண்டும்; நான் என்ன செய்ய போகப்போகிறேன் என்றே தெரியவில்லை என்று கவலையோடு தன் நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய நண்பர் சொன்னார்: ஒரு வேலை வரப்போகிற தலைமுறையில் ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யக்கூடிய சூழ்நிலை வரலாம்; நீ ஏன் கலங்குகிறாய் என்று விளையாட்டாக பதில் சொன்னாராம் அவருடைய நண்பர். ஆனால், உண்மையில் அடுத்த தலைமுறையில் சபை இந்த உலகத்தில் இருக்குமா இல்லை எடுத்துக்கொள்ளப்படுமா என்பதை நாம் அறியோம். ஆகையால் நாளைய தினத்தை குறித்து கவலைபடாதிருங்கள்.

ஒருமுறை யாக்கோபும் யோவானும் இயேசுவினிடம் கேட்டார்கள், ஆண்டவரே, எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள் செய்யவேண்டும் என்பதாக. இந்த இரண்டு சீஷர்களுக்கு யார் எந்த நாற்காலியில் உட்காருவார்கள் என்பதைப்பற்றியதான கவலை. உலகத்தில் அநேக அரசியல் தலைவர்களுக்கும், வேலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இந்த கவலைதான். ஏன் சபையிலும் கூட அரசியல் செய்து யார் பொருளாளர் பதவியை பிடிப்பார்கள், யார் செயலாளர் பதவியை பிடிப்பார்கள் என்பது தான் சில சபைகளில் இருக்கும் ஜனங்களின் கவலையாய் இருக்கிறது.

இயேசு சொன்னார் மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார் (லுக் 10:41,42). நமக்கு தேவையானது ஒன்றே. நாம் இயேசுவின் பாதத்தில் அமர்ந்து அவர் சத்தத்துக்கு செவிகொடுப்பதே ஒவ்வொருநாளும் நாம் செய்ய வேண்டிய காரியமாய் இருக்கிறது. இயேசு மலை பிரசங்கத்தில் சொன்னார் கவலைபடுவதினால் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தை கூட்டுவான். இயற்கையாக நம் தலையிலிருக்கும் வெள்ளை முடியை நாமாக கருப்பாக மாற்றவும் முடியாது, கருப்பாக இருக்கும் முடியை நாமாக வெள்ளை முடியாக மாற்றவும் முடியாது. அதுபோல, இயற்கையாக ஐந்து அடி உயரமாக இருக்கும் நாம் நாமாக ஆறு அடியாக உயரவும் முடியாது, ஆறு அடியாக இருக்கும் நாம் நாமாக ஐந்து அடி உயரத்தில் குறையவும் முடியாது. இயற்கையாக சரீரத்தில் இருக்கும் அவயவங்கள் ஒன்றையும் நாம் இடம் மாற்றவும் செய்ய முடியாது. நாளை எந்த தேசத்திற்கு போவோம் என்பதை குறித்தும், அடுத்த வருடம் எந்த தேசத்தில் இருப்போம் என்பதை குறித்தும் கவலைபடாதிருங்கள்.

நாளையத்தினத்தைக்குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே (நீதி 27:1) என்றும் வசனம் சொல்லுகிறது. நாளைக்கு நான் பெரிய ஆளாக வந்துவிடுவேன், பெரிய அரசில்வாதியாக வந்துவிடுவேன் என்று பெருமைபாராட்டாதிருங்கள். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும். ஆகையால் கர்த்தருடைய ஜனங்கள் எப்பொழுதும் சொல்ல வேண்டும் இந்த நாள் கர்த்தர் தந்த நாள் இதிலே மகிழ்ந்து களிகூரக்கடவோம்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *