மனிதன் கொடுக்கும் பிரதிபலனா இல்லை தேவன் கொடுக்கும் பிரதிபலனா?:-

வெளி 22:12. இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/1cZ2SI0TQUc

கிருபை மற்றும் கிரியை இவைகள் இரண்டையும் தேவ ஜனங்கள் சரியாக அறிந்துகொள்ள வேண்டும். நமக்கு இரட்சிப்பு தேவனுடைய அளவற்ற கிருபையால் வந்தது. தகுதி இல்லாத நமக்கு கர்த்தர் கிருபை அளித்து அவருடைய மணவாட்டியாக மாற்றியிருக்கிறார். கிரியை என்பது நாம் அவருக்காக செய்யும் காரியங்கள், பரலோக இராஜ்யத்தை கட்ட நாம் எடுக்கும் பிரயாசங்கள் அனைத்தும் கிரியைகளாக காணப்படுகிறது. நம்முடைய கிரியைகளினிமித்தம் கர்த்தர் நமக்கு பலனளிக்க (Reward) போகிறார்.

கிரிக்கெட் போட்டியில் அதிக ரன் (ஓட்டம்) எடுத்தவர்களுக்கோ, அதிக விக்கெட் எடுத்தவர்களுக்கோ Man of the match என்று சொல்லக்கூடிய ஆட்ட நாயகன் விருதை வழங்குவார்கள். கடந்த ஆண்டில் (2022) நடைபெற்ற FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் Golden Ball, Golden boot, Golden Glove award என்று சொல்லி சிறப்பாக விளையாடினவர்களுக்கு award கொடுத்து FIFA நிறுவனம் காணப்படுத்தியது. நம்முடைய அரசாங்கங்களிலும் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் மற்றும் மிக உயர்ந்த விருதான பாரத் ரத்னா போன்ற விருதுகளை கொடுத்து நன்றாக தங்கள் துறைகளில் செயல்பட்டவர்களை அரசாங்கங்கள் கௌரவப்படுத்துகிறது. இப்படி பள்ளிக்கூடத்திலிருந்து, தொழில் வரைக்கும் சிறப்பாக செயல்படுகிறவர்களுக்கு Reward கிடைக்கிறது. உலகத்தின் அதிகாரங்களே நன்றாக செயல்பட்டவர்களுக்கு award கொடுத்து கனப்படுத்துகிறது என்றால், நம்முடைய தேவன் அவருடைய பணியில் உத்தமமாய் செயல்பட்டவர்களுக்கு எவ்வளவாய் பலனை கொடுத்து கனப்படுத்துவார் என்பதை யோசித்துப்பாருங்கள்.

ஒருநபர் சொன்னார் நான் என்னுடைய உறவினன் ஒருவனுக்கு அவனுடைய கடினமான வேலையில் எவ்வளவோ உதவிகளை செய்தேன். அவன் கடன் பிரச்னையை தீர்த்து வைத்தேன். அவனுடைய பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டிய உதவிகளை செய்தேன். ஆனால் அவர் இது வரை ஒரு நன்றி கூட சொல்லவில்லை என்று வருத்தப்பட்டார்.

அநேகர் அநேக வேலைகளில் மனிதனிடம் பிரதிபலனை எதிர்பார்க்கிறவர்களாக காணப்படுகிறார்கள். கலியாண வீட்டிற்கு சென்றால் இந்த நபர் மீண்டும் நமக்கு என்ன செய்வார் என்று பிரதிபலனை எதிர்பார்த்து மொய் செய்கிற ஜனங்கள் உண்டு. மனிதர்கள் உங்களுக்கு thank you சொல்லவேண்டும் என்றோ, உங்களை கனப்படுத்தி பேச வேண்டும் என்றோ எதிர்பார்க்கவேண்டாம். மனிதர்கள் உங்களுக்கு thank you சொல்கிறார்களோ இல்லையோ, தேவன் உங்களுக்கு thank you சொல்கிறாரா என்பதை மாத்திரம் நீங்கள் பார்க்கவேண்டும்.

வளைகுடா போன்ற தூர தேசத்தில் வேலை செய்யும் தகப்பன்மார்கள், அவர்கள் மீண்டும் தங்கள் தாய் நாட்டிற்கு செல்லும்போது, தங்கள் பிள்ளைகளுக்கு பிடித்தமான விலையுயர்ந்த பரிசுகள், ஆடைகள் போன்றவற்றை வாங்கிசெல்வதுண்டு. இயேசு சொன்னார் நான் சீக்கிரமாய் வருகிறேன். நம்முடைய பரலோக தகப்பன் சீக்கிரமாய் நம்மை சந்திக்க வரப்போகிறார். அவர் வரும்போது வெறும் கையோடா வருவார்? இயேசுவை நீங்கள் சந்திக்கும்போது, அவர் உங்களுக்கு மகிழ்ச்சியின் கிரீடம், நீதியின் கிரீடம், மகிமையின் கிரீடம் என்று அநேக கிரீடங்களை கொடுத்து உங்களை அலங்கரிக்கப்போகிறார். இயேசு வரும்போது அவனவனுக்கு தக்கதான பலனை அவர் கொடுப்பார். தேவனுக்கு ஊழியம் செய்தவனுக்கும் ஊழியம் செய்யாதவனுக்கும் உள்ள வித்தியாசத்தை அவர் காண்பிப்பார். மனிதனிடம் அல்ல; இயேசுவிடம் பலனை எதிர்பாருங்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *